Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாசந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !

சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !

சந்திரயான் -2 திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, 90% பணியாளர்கள் சம்பள இழப்பை ரூ.10,000 வரை சந்தித்து வருகின்றனர்.

-

டந்த ஒருவாரமாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பெரும்பான்மை இந்தியர்கள் புல்லறித்து, நெகிழ்ந்து, கண்ணீர் சிந்தி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோவின் சாதனையைத் தனது சாதனை போல காட்டியுள்ள மோடி அரசு, அதே வேளையில் சந்திரயான் – 2 பகுதியளவு வெற்றிக்கு பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பையும் செய்துள்ளது.

சம்பளத்தை இரட்டிப்பாக்கும் 1996-ம் ஆண்டின் ஒப்புதல் முடிவின்படி வழங்கப்பட இருந்த ஊக்குவிப்பு மற்றும் பதவி உயர்வு மானியங்களை ஜூன் 12-ம் தேதி திரும்பப் பெற்றுள்ளது மத்திய அரசாங்கம்.

இருபதாண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் சேரவும், ஏற்கெனவே விண்வெளி முகமையில் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கவும் ஒரு உத்தரவை போட்டது.

ISRO-Modiஆனால், சந்திரயான் -2 திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் இஸ்ரோவின் 90% பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 10,000 வரை சம்பள இழப்பை சந்தித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி. மோதிலால் வோரா, இதுகுறித்து பாராளுமன்றத்தில் ஜூலை 30-ம் தேதி கேள்வி எழுப்பினார். அப்போது 1996-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் விண்வெளித் துறை அமலாக்கியதில், கூடுதல் சம்பள உயர்வை சம்பளமாகத்தான் கருத வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அவர் மாநிலங்களவையில் தெரிவித்தார். அரசாங்கம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளத்தை குறைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

படிக்க:
நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877
♦ மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !

மோடி அரசாங்கத்தின் இந்த முடிவை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். சம்பளத்தை மட்டுமே தாங்கள் நம்பியுள்ளதாகவும் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வருமான வாய்ப்பு எதுவும் தங்களுக்கு இல்லை எனவும் இஸ்ரோ பணியாளர்கள் சங்கமான Space Engineers Association (SEA) தெரிவித்துள்ளது.

அவர்கள் இஸ்ரோ தலைவர் கே. சிவனுக்கு எழுதிய கடிதத்தில் அரசாங்கத்தின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியதாக தெரிவிக்கின்றனர். இந்த முடிவால் விஞ்ஞானிகள் ஊக்கமிழப்பார்கள் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆறாவது ஊதிய ஆணையம் பரிந்துரைகளும் அப்படியே கிடப்பில் உள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ISRO-Sivan-Modiசெயல்திறன் தொடர்பான ஊக்கத்தொகை திட்டமான performance-related incentive scheme (PRIS) பற்றி அரசாங்கம் பேசுகிறது. ஆனால் அது 1996-ம் ஆண்டின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான இரட்டை ஊதிய உயர்வு முடிவை பாதிக்கக்கூடாது என சொல்கிறது. ஏனெனில் செயல்திறன் தொடர்பான ஊக்கத்தொகை திட்டம் எந்த அரசாங்க ஊழியரின் அடிப்படை ஊதியத்தையும் பாதிக்கக்கூடாது.

இஸ்ரோவில் A, B, C, D, E, F மற்றும் G ஆகிய பிரிவுகளாக தகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு பெற, ஒவ்வொரு விஞ்ஞானியும் அதற்குரிய தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.

தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள உரிமையை காவு கொடுத்துவிட்டு, ஊடகங்கள் முன்னே நீலிக்கண்ணீர் வடிக்கிறார் சிவன். அதை உலக மகா நடிகனாக உள்ள பிரதமர் மோடி துடைப்பது பெரும்பான்மை இந்தியர்களை புல்லறிக்கச் செய்கிறது; தேசபக்தி புரண்டோடுகிறது. அருகில் இருந்த விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருந்திருக்கும் இந்த பக்தி, எவ்வளவு போலியானது என்று.


அனிதா
நன்றி
: தி வயர்.