க்கள் தங்கள் குறைகளைக் கூற அதிகாரிகளுக்காகக் காத்திருந்த நிலைமை மாறி, அதிகாரிகள் நேரிடையாக மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள் என்று தினத்தந்தி போன்ற ஜால்ரா நாளிதழ்களும் ஊடகங்களும் செய்திகளைக் கக்க ஆரம்பித்தன.

குறைகளைச் சொல்ல முடியாத தமிழகத்தின் இரத்தச் சாட்சியாக சென்னை போரூர் – குன்றத்தூர் முக்கியச் சாலை இருக்கிறது.

porur kundrathur road
போரூர் சிக்னல் அருகே.

ஆம், குண்டும் குழியுமாகவும், எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும் போரூர் – குன்றத்தூர் சாலை, கிட்டத்தட்ட 2 வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது. மழை பெய்தால் எந்த இடத்தில் குழி உள்ளது, எந்த இடம் சமதளமானது என்று கண்டுபிடிக்க முடியாது. அந்தச் சாலையில் வழக்கமாகச் செல்பவர்களே தடுமாறி விழுந்துதான் எழுந்திரிப்பார்கள். அவ்வப்போது செல்வோரின் நிலைமை பரிதாபத்துக்குரியது. சரி, மழை ஓய்ந்து ரோடு காய்ந்ததே என்று எண்ணினால், புழுதி கண்களை மறைக்கும்; மூச்சைத் திணறச் செய்யும்.

என்ன நடக்கிறது இங்கே?

பகுதிவாழ் மக்களிடமும், சாலையில் பயணிப்போரிடமும் கேட்டால், “ஏதோ திடீர்னு வர்றாங்க இரவோடு இரவா குழியத் தோண்டி, காலையில மண்ண போட்டு மூடிட்டுப் போயிடுறாங்க” என்கிறார்கள். சிலர், மெட்ரோ வாட்டருக்காகத் தோண்டியிருக்கிறார்கள் என்றும்; இன்னும் சிலர் இ.பி காரங்கதான் என்றும் வேறு சிலர் கேபிள் டிவிக்காரங்கதான் என்றும் கூறுகிறார்கள்.

porur kundrathur road
பெரும்பாலான கடைகள் மூடியே கிடக்கின்றன; அல்லது, பகலில் இரண்டு மூன்று மணிநேரம் மட்டுமே திறந்திருக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு ரூ.396 கோடியில் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக கோயம்பேட்டிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்குத் தேவையான இராட்சச குழாய்கள் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. உதாரணமாக மதனந்தபுரம் நாராயணா பள்ளி அருகே சாலையில் தோண்டப்பட்ட குழியை மேலாக மண்ணைப் போட்டு மூடியுள்ளது தெரியாமல் சென்ற வேன் அந்தக் குழியில் மாட்டிக்கொண்டது. மேலும், கர்ப்பிணிகள், வயதானோர், பள்ளிச் சிறுவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதிமுக எடப்பாடி ஆட்சியின் அலங்கோலத்தை அந்தப் பகுதி மக்களும் அந்தச் சாலையில் செல்லும் பயணிகளும் சொல்வதைக் கேளுங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ராஜன், மளிகைக் கடைக்காரர்

15 வருடமா மளிகைக்கடை நடத்துறேன். 9 மாதமா முன்பக்கமா தெறந்து வச்சு வியாபாரம் பண்ண முடியல. இந்த ரோடு சீர்கெட்டுப் போயி தூசு கருமேகம் மாதிரி கௌம்புது. சாலையே கொள்ளாத அளவு எந்த நேரமும் வாகனம் நெரிசல் உள்ள பகுதி இது. இங்கே வசிக்சிறவங்க முழுசா மூச்சு விட்டு பல மாதங்களாயிருச்சி. இருமுனா, தும்முனா கரி மாதிரி தூசு வருது. நெலம கொடுமையாயிருக்குது. பல குழந்தைங்க டாக்டரே கதியா கெடக்குது. எல்லோரும் நோயாளி மாதிரி ஆயிட்டோம்.

வியாபாரம் சுத்தமா இல்ல. இந்தப் பக்கமே யாரும் வர்றதில்லை; அப்புறம் எங்கே கடைக்கு பொருள் வாங்க வர்றது? வர்ற ஒன்னு ரெண்டு பேரும் பழைய பொருளையே வச்சிகிட்டிருக்கியான்னு கேக்குறாங்க. அவ்வளவும் தூசி. பொருளெல்லாம் அரை நாள்ல தூசி படிஞ்சி போயிடுது. எவ்வளவுதான் தொடைக்கிறது. இதனால வியாபாரத்துல நஷ்டம். கட வாடகை கொடுக்க முடியல. தண்டல் கட்ட முடியல. எங்க வேதனைய யாருகிட்டே சொல்றதுன்னே புரியல.

thirumalai & rajan
திருமலை, இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர், கொளப்பாக்கம் மற்றும் ராஜன், மளிகைக் கடைக்காரர் (வலது).

திருமலை, இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர், கொளப்பாக்கம்

இந்த மெயின் ரோட்டை ஏன் இப்படி பொளந்தாங்கன்னு தெரியல. கேட்டா மெட்ரோ வாட்டர் காரங்கதான் காரணம், அவன் வேலய முடிக்கல, டெண்டர் படியல, பணம் வரலன்னு ஏதேதோ சொல்றாங்க. இன்னொரு பக்கம் இ.பி காரங்க ஒத்துழைக்கல, நாங்க என்ன பண்றதுன்னு மெட்ரோகாரங்க சொல்றாங்க. ஒங்க ஆட்டத்த எங்க தலமேல ஏன்டா ஆடுறீங்கன்னு கேட்டா, இங்கே வேல செய்ய வர்றவங்க, சொல்றத நாங்க செய்யிறோங்கிறாங்க. கடைசியில எங்க தொழில்தான் மண் மூடி போயிடும் போல. வேல செய்யிறவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியல. வேலைக்கு பாக்குற ரெண்டு பேரும் வரல. கடைய இழுத்து மூடிடலாமுன்னு தோணுது. ஆனால், எதிர்காலத்த நெனச்சா பயம் தட்டுது. போற உயிரு கடையிலேயே போகட்டுமுன்னு உக்காந்திருக்கேன்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
♦ சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

***

கணேஷ், டீ – கடைக்காரர்

ganesh tea shop
கணேஷ், டீக்கடை உரிமையாளர்

சொன்னா நம்ப மாட்டீங்க, ஏறக்குறைய ஒரு வருஷமாகப் போகுது, இந்த ரோடு மண் ரோடாகி. அப்பயிருந்த வியாபாரம் இல்ல. இதுவரைக்கும் எனக்கு 1 லட்சம் ரூபாய் நஷ்டம். மாஸ்டர் கூலி, கரண்ட் பில், வாட்டர் கேன், கடை வாடகை எதயும் சமாளிக்க முடியல. தண்டல், தண்டலுன்னு தண்டல் வாங்கியே பொழப்பு போகுது. அவனும் கைய விரிச்சு எப்ப சண்டைக்கு வருவான்னே தெரியல. போட்ட போண்டா, பஜ்ஜிய சுத்தமா கொஞ்ச நேரம் வைக்க முடியல. வாயில வக்கிறவன் மண்ணு மண்ணுன்னு காறித் துப்புறான். அரைகுறையா பஜ்ஜி தின்னவங்கிட்டே பணம் கேக்குறதுக்கே பயமா இருக்கு. ஏன்டா மண்ண கொடுத்துட்டு பணம் கேக்குறன்னு முறைக்கிறாங்க.

***

சுந்தர், பிஸ்கட் போடுபவர்

sundar
சுந்தர்

தினமும் இன்னொரு வண்டி மேல விழுந்து எழுந்துதான் இங்கே வர்றேன். இந்த லட்சணத்துல லோடு வண்டிங்க போனா இன்னும் சுத்தம். ரோடு பிளாக் ஆயிடும். அன்னைக்கு எம் பொழப்பு நாறிடும். எல்லா பக்கமும் வண்டிங்க அடைச்சிகிட்டு நிக்கும். சைக்கிள் டயரு கூட போக வழி இருக்காது. மூனு கடைக்கு சரக்குப் போட மூனு மணி நேரமாகும். அதுக்கப்புறம் எங்கே நாலு கடை ஏறி எறங்குறது. ஒரு நாளைக்கு 50 கடை ஏறி இறங்குனாதான் 500 ரூபாயாவது கெடக்கும். இந்த சீர்கெட்ட ரோட்டால பலநாளா வியாபாரம் இல்லாமத்தான் போறேன். சரக்குத் தேங்கிருச்சின்னா கெட்டுப் போகுது. என்ன பண்றது வேற தொழிலும் எனக்குத் தெரியாது.

***

ஜேம்ஸ், எலக்ட்ரானிக் கடைக்காரர்

james
ஜேம்ஸ்

இந்த ரோட்டுனால கௌம்புற புழுதியினால இங்கே சுத்தியிருக்குற ஆஸ்பிட்டலுங்களுக்குத்தான் கொள்ள லாபம். ரோட்டுல போறவங்களுக்கும் தினமும் விபத்து நடக்குது. வீட்டுல இருக்குறவங்களுக்கும் தூசினால உடம்பு கெட்டுப் போகுது. இருமல், சளி, இழுப்புன்னு ஆயிரதெட்டு நோய் வருது. குறைகாலத்துக்கு எப்படி உயிர் வாழப் போறோமுன்னு தெரியல.

***

பாபு, ஆட்டோ டிரைவர்

babu
பாபு

சார், நாங்க ஆட்டோ ஓட்டல, படகு ஓட்டுறோம். கடல் அலையில போற மாதிரி ரோட்டுல போறோம். பின் சீட்டுல உக்கார்றவங்க ரெண்டே குலுங்கள்ல முன் சீட்டுக்கு வந்துருவாங்க. உசாரா ஸ்டேரிங்க புடிக்கலன்னா, வெளியிலதான் போயி விழணும். ரெண்டு கிலோ மீட்டர் போறதுக்கு அரை மணி நேரமாகுது. ஆட்டோவில ஏர்றவங்க திடீர்னு நாங்க நடந்தே போறோமுன்னு எறங்கிடுவாங்க. ஆட்டோவில நாளாவது கியர் போட்டே பல மாசங்களாகுது, முழுக்க ரெண்டாவது கியர்லதான் போறோம். பெட்ரோல் டபுளா குடிக்குது. ஆட்டோ பார்ட்ஸ் அடிவாங்குது. இப்ப வருமானம் பாதியாயிடுச்சு; செலவு டபுளாயிடுச்சு. ஏண்டா வண்டிய ஓட்டுறோமுன்னு இருக்குது. வீட்டுல பசியோடவாவது படுத்துத் தூங்கலாம். ஆட்டோவுக்கு ஏன் வீண் செலவுன்னு பல டிரைவருங்க ஆட்டோவை எடுக்குறதில்ல.

படிக்க:
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
♦ மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

***

ஜெயபாலன், ஓலா டிரைவர்

jayabalan
ஜெயபாலன்

நான் விக்னேஷ்வரா நகர்லதான் இருக்கேன். இருந்தாலும் இந்தப் பக்கம் சவாரி வந்தா நான் எடுக்கிறதே இல்ல. இந்த இடமே இப்படி சுடுகாடா மாறுனதுக்குக் காரணம் அதிமுக கட்சிதான். கமிசன் கமிசன் கமிசன். அது பாதாளம் வரைக்கும் போயிருச்சு. கடைசில அந்தக் கமிசன் பள்ளத்துல ஜனங்கள பொதச்சிடுவாங்க போலிருக்கு. இப்போ இதுதான் நடக்குது.

இந்த ரோட்ட ஏன் நோண்டுனாங்க, இதுவரைக்கு ஏன் மூடலன்னு யாருக்கும் எதுவும் தெரியாது. எவனும் சொல்ல மாட்டேங்கிறான். மெட்ரோ வாட்டருங்கிறான். இபி-ங்கிறான். டிரைனேஜ்ங்கிறான். கேபிள் பொதைக்கிறோமுங்கிறான். என்ன பொதைக்கப் போறாய்ங்கன்னு யாருக்கும் தெரியல. கடைசில ஜனங்கதான் அதுல உழுந்து வார்றாங்க. இப்ப ஒரு செய்தி வருது. யாருக்கும் தெரியாது இங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் கார் ஃபேக்டரிக்கு தண்ணி போகப் போகுதுன்னு சொல்றாங்க.

ராத்திரி 11 மணியானா 20 வண்டி ஜேசிபி, டிப்பருன்னு வருது. 500 அடி நீளத்துக்கு தோண்டுறாங்க. 5 அடி ஆழத்துல, 3 அடி அகலத்துல பைப் பொதைக்கிறாங்க. காலையில பாத்தா திடீர்னு பள்ளம் மேடு. போறவங்க வர்றவங்க, அதில விழுந்து வார்றாங்க. மழை பேஞ்சா இன்னும் கொடுமை. எங்கே பள்ளம், எங்கே மோடுன்னு தெரியாது. வண்டியில போறவங்க கொழந்த குட்டியோட கீழே விழுறாங்க. இங்கிருக்கிறவங்க இவங்களோட நிலமையே இப்படியிருக்க, எடப்பாடியோ கோட்டு சூட்டு போட்டு லண்டன் போயிட்டாரு. நாய் படாத பாடு நாமதான். அவங்களுக்கு ஓட்டுப் போட்டோம். இப்போ ரோடு கூட இல்லாது சாகுறோம்.

***

மேலே நாம் பார்த்தது, அடிப்படை வசதிகளைத் தீர்க்க எடப்பாடி அரசு எப்படியெல்லாம் ‘முனைப்பு’ காட்டுகிறது என்பதற்கு மொத்தத் தமிழகத்தின் ஒரு சிறு துளி. இந்த இலட்சணத்தில் வேலூர் மாவட்டத்தில் “முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு” திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அதையும் நம்பினார்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் கிராம மக்கள். மனுக்களைப் பட்டியலிட்டு மண்டல தாசில்தாரை பார்க்கச் சென்றார்கள். அலுவலக வளாகத்தில் அதிகாரிகளைக் காணவில்லை, மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் வாயில் மனுக்களைத் திணித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

ஆறுகளின் மார்பறுத்து மணல் கறந்த எடப்பாடி கும்பல், நம்மைப் பார்த்து கேட்கிறது, ‘ஜனங்களே உங்கள் குறைகளை எங்களிடம் தெரிவியுங்கள், ஒரே மாதத்தில் நிவர்த்தி செய்கிறேன்’ என்று. நமது குறையை சரி செய்வோம், மனுக்களை நீட்டியல்ல; சுட்டு விரலை நீட்டுவோம். அது சுட்டிக் காட்டும் குற்றவாளிகள் யார் என்று.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க