காக்ஸ் பசார், வங்காளதேசம் : சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் மாதம், 23 வயதே நிரம்பிய சானா பேகம், மியான்மரின் மாங்டாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள முற்றிலும் கருகிப்போன தனது கிராமத்தை விட்டு வெளியேறினார், கடினமான ஈரப்பதம் நிறைந்த புல்வெளிகளையும், நெல் வயல்களையும் கடந்து, மூன்று நாட்கள் கழித்து தனது அண்டை நாடான வங்காளதேசத்தில் அமைந்துள்ள குட்டுப்புல்லாங் அகதிகள் முகாமை அடைந்தார்.
“அவர்கள்(மியான்மர் ராணுவம்) என் தந்தையையும், இரண்டு சகோதரர்களையும் என் கண் முன்னே கொன்றார்கள். நான் ஓடி ஒளிந்து உயிர் பிழைத்தேன்” என்று ஷல்பகான் அகதிகள் முகாமில் வசிக்கும் சஃபீனா அல்ஜசீரா பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த அகதிகள் முகாமில் வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் என்னால் இங்கு உயிர் பிழைத்திருக்க முடிகிறதே. நான் என் ஊருக்கு திரும்பி சென்றால் கொல்லப்படுவது உறுதி” என்றார்.
தெற்கு வங்காளத்தில் உள்ள 27 அகதிகள் முகாம்களில் சஃபீனாவை போன்று 10 லட்சத்துக்கு மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் வசித்து வருகின்றார்கள்.
குறிப்பாக 2017 ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி மியான்மர் ராணுவத்தால் தொடங்கப்பட்ட கொடூரமான தாக்குதல்களுக்கு பிறகுதான், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள் இந்த அகதிகள் முகாம்களுக்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
1970 மற்றும் 1990-களில் ஏற்பட்ட தாக்குதல்களின் விளைவால் ஏற்கெனவே, இங்கு தஞ்சம் புகுந்த ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களோடு இவர்கள் இணைந்தார்கள்.
52 வயது நிரம்பிய அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறார். “ஆனால், மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட என் மகள் திரும்பி செல்வோம் என்ற செய்தியை கூறினால் மிகவும் அதிர்ச்சியடைகிறாள்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில் “எனது மனது ராகின்கேயில் உள்ள எனது வீட்டை நினைத்து தினமும் வெம்புகிறது. எனது வாழ்வின் பெரும்பகுதியை நான் அங்குதான் கழித்தேன். அங்கு எனக்கு சொந்தமாக விவசாய நிலம் இருந்தது. ஆனால், இங்கோ ஏதுமில்லாத ஒரு அகதி வாழ்க்கையை வாழ்கிறேன்.” என்றார்.
இரண்டாம் முறையாக 3400 அகதிகளை நாடு திரும்ப ஏற்படுத்தப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. காரணம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், குடியுரிமையும் பெறாமல் நாடு திரும்புவதற்கு அவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர், என்பதே.

சல்பாகன் அகதி முகாமில் தனது மகன், மருமகன் மற்றும் பேரன்களுடன் வாழ்ந்து வரும் குல்சும் பேகம், தங்குவதற்கு வசிப்பிடமும், உணவும் கிடைப்பதால் தான் திருப்தியடைவதாக அல்ஜசீரா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்கூறினார்.
மேலும், “நான் இதற்கு மேல் கடவுளிடம் ஒன்றும் கேட்டவில்லை” என்கிறார்.
‘எனது மகனுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால், அகதிகளுக்கு இங்கு வேலை கிடைப்பது மிகவும் கடினம்’ என்றார்.
பல ரோஹிங்கியாக்கள் இந்த முகாம்களிளேயே சிறிய தொழில்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
படிக்க:
♦ #SayItLikeNirmalaTai : நிர்மலா சீதாராமனுக்கு ‘ஐடியா’ கொடுத்த டிவிட்டர்வாசிகள் !
♦ வங்கதேச ரோஹிங்கிய அகதிகளின் இன்றைய நிலை – படக்கட்டுரை
சஃபீக் 4 வயதிருக்கும்போது தனது தந்தையுடன் 1991-ல், குட்டுப்பல்லாங் முகாமுக்கு வந்தவர். இப்போது 32 வயதில் ஒரு தையல் கடையை நடத்திவருகிறார். “இங்கே இருக்கும் அகதிகளிடமிருந்து பல ஆர்டர்கள் எனக்கு கிடைக்கிறது, இப்போது என்னால் புதிய ரக துணிகளையும் இங்கு காணமுடிகிறது” என்றார்.
மேலும், தனது சொந்த ஊரை பற்றி கேட்கையில் ஞாபகமில்லை என்கிறார். “நான் குழந்தைப் பருவத்தில் இங்கு வந்து சேர்ந்தேன், என் வாழ்நாள் முழுக்க ஒரு அகதியாகவே வாழ்ந்துள்ளேன்” என்றார்.
பலுகாளி அகதிகள் முகாமில் அமைந்துள்ள உள்ளூர் சந்தை, இங்கு
ரோஹிங்கியர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.
பலுகாளி முகாமில் ஒரு ரோஹிங்கியா சிறுவன் பொருட்களை விற்பனை செய்கிறான்.
இரண்டு வருடத்திற்கு முன்னால் மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலுக்குப் பின் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மியான்மரிகள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
“எனது சொந்தங்கள் இன்னும் மியான்மரில் உள்ளனர். ஆனால், அவர்கள் உயிரோடு உள்ளார்களா என்பது தெரியாது” என்கிறார் சல்பாகன் முகாமில் வசித்து வரும் ஹமீடா.
குட்டப்பல்லாங் – பலுகாளியில் உள்ள 27 முகாம்களில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் வசிக்கிறார்கள். உலகில் அகதிகள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளாக இவை உள்ளன.
சல்பாகன் முகாமில் வசிக்கக்கூடிய சஃபீனா பேகம், “அவர்கள் என் தந்தையை என் கண் முன்னமே கொன்றார்கள், நான் அங்கு திரும்பிச்செல்ல மாட்டேன்” என்கிறார்.
அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல விரும்புகிறார். ஆனால், “மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட என் மகள் ‘திரும்பி செல்வோம்’ என்ற செய்தியைக் கூறினால் மிகவும் அதிர்ச்சியடைகிறாள்” என்கிறார்.
இரண்டாம் முறையாக 3400 அகதிகளை நாடு திரும்ப ஏற்படுத்தப்பட்ட முயற்சியும் தோல்வியுற்றது. எந்த விதபாதுகாப்பும் இல்லாமல், குடியுரிமையும் பெறாமல் நாடு திரும்புவதற்கு அவர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர் என்பதே காரணமாகும்.
பலுகாளி முகாமில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள்.
1991-ல் தனது தந்தையுடன் 4 வயது சிறுவனாக வந்த சஃபீக், நயபாரா முகாமில் வசித்து வருகிறார், அவர் திரும்பி செல்வதற்கு இனி எந்த காரணமுமில்லை.
– மூர்த்தி
நன்றி: அல்ஜசீரா