ஆகஸ்டு முதல் வாரத்திலிருந்து ஆக்ரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது 35 வயது மகனை காண புல்வாமாவிலிருந்து வந்திருந்தார் குலாம். ஸ்ரீநகரிலிருந்து நீண்ட பயணத்தின் மூலமாக டெல்லி வந்தபோதும், தனது மகனை காண சிறை அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் போலீசிலிருந்து சரிபார்ப்பு கடிதத்தை வாங்கி வரவில்லை என்ற காரணம் கூறி அவர் தனது மகனை சந்திக்க அனுமதி மறுத்தது சிறை நிர்வாகம்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்ததிலிருந்து, காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில், உத்தரப் பிரதேச சிறையில் அடைக்கப்பட்டுள்ள 285 பேரில் குலாமின் மகனும் ஒருவர். ஆக்ரா சிறையில் மட்டும் 85 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஆக்ரா சிறையிலிருந்து இறுதியாக 29 பேர் இந்தச் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிலிருந்து 45 வயது வரையானவர் என்றும் சிலருக்கு 50 வயதாகலாம் எனவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேந்த அரசியல்வாதிகள், கல்லூரி மாணவர்கள், மதபோதகர்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள், ஆய்வு பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன.
ஆக்ரா மண்டலத்தைச் சேர்ந்த சிறைத்துறை அதிகாரி சஞ்சீவ் திரிபாதி , “காஷ்மீரின் பல்வேறு சிறைகளிலிருந்து சிறைக் கைதிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆக்ரா மத்திய சிறையில் 85 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கிடையே அவர்கள் இங்கே கொண்டுவரப்பட்டனர். இன்னும் அதிகமான சிறைக் கைதிகள் இங்கே கொண்டுவரப்பட வாய்ப்பிருக்கிறது. போதிய ஆவணங்கள் சரிபார்ப்பு முடிந்ததும், கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்களை அடைக்க சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் காஷ்மீர் சிறைக் கைதிகளை மற்ற கைதிகளிடமிருந்து பிரித்து தனி பகுதியில் அடைத்திருப்பதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். அதுபோல மற்ற சிறைக் கைதிகளைப் பார்க்க அவர்களுடைய வீட்டினர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காஷ்மீர் கைதிகளைப் பார்க்க மற்றொரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மற்றவர்களைப் போல, அவர்களுக்கு அதே உணவும் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
படிக்க:
♦ சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !
♦ காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
ஆனால், நீண்ட பயணம் செய்து தனது மகனை காண வந்துள்ள குலாமுக்கு இவையெல்லாம் ஆறுதல் அளிக்கவில்லை.
“இருபதாயிரம் ரூபாய் செலவு செய்து பயணித்து வந்திருக்கிறேன், எவரும் சரிபார்ப்பு கடிதத்தைக் கொண்டுவர வேண்டும் என சொல்லவில்லை. தொலைபேசியும் இணையமும் இல்லாத நேரத்தில், ஜம்மு காஷ்மீர் போலீசிடம் சரிபார்ப்பு கடிதத்தை ஃபேக்ஸ் செய்யுங்கள் எனவும் கேட்க முடியாது. ஒரு துண்டு காகிதத்துக்காக மீண்டும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும்” என ஆதங்கப்படுகிறார் குலாம்.
இனி அமைதியும் வளர்ச்சியும் புரண்டோடும் என்றுகூறி, மோடி அரசாங்கம் காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றி நாற்பது நாட்களுக்கும் மேல் ஆகிறது. அடக்குமுறை, சிறையின் மூலம் கொண்டுவரப்படும் அமைதி, ஒருபோதும் அமைதியாக இருக்காது என்பதை ஆளும் அரசாங்கம் உணருவதாக இல்லை.
செய்திக் கட்டுரை: அமில் பட்நாகர்.
தமிழாக்கம் : அனிதா
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்.