அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 35

மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல்

அ.அனிக்கின்

டின்பரோ பல்கலைக்கழகத்தில்தான் அரசியல் பொருளாதாரம் முதன் முதலில் ஒரு தனி விஞ்ஞானமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கே 1801-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித்தின் மாணவரும் நண்பருமான டக்ளஸ் ஸ்டுவர்ட் அரசியல் பொருளாதாரத்தைக் கற்பித்தார். 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை பொருளாதாரப் பேராசிரியர் எல்லோருக்கும் பழக்கமான நபராக வளர்ச்சியடையவில்லை. ஆயினும் பேராசிரியர்களாக இல்லாத பலர் இந்த விஞ்ஞானத்துக்கு மிக முக்கியமான கருத்துரைகளைக் கொடுப்பது தொடர்ந்து கொண்டிருந்தது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்தப் புதிய விஞ்ஞானத்தைப் படைத்த திறமை மிக்கவர்களை மூன்று முக்கியமான பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதலாவதாக, அந்தக் குறிப்பிட்ட யுகத்தின் தனித் தன்மையைக் கொண்ட, இயற்கை மற்றும் சமூகத்தைப் பற்றிய தங்களுடைய பொதுவான அமைப்புக்களுக்குள்ளாகவே பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்த தத்துவ ஞானிகளைக் குறிப்பிடலாம். அவர்களில் மிகச் சிறந்தவர்களாக இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக், டேவிட் ஹியூம் மற்றும் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஆடம் ஸ்மித்; பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹெல்வெடியஸ் மற்றும் காண்டில்லாக்; இத்தாலியைச் சேர்ந்த பெக்காரியா முதலியோர் உள்ளனர்.

இரண்டாவதாக, வணிகர்களும் தொழிலதிபர்களும். இவர்கள் தங்களுடைய குறுகிய வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து அரசு விவகாரங்களுக்கு முன்னேறி இராஜியவாதிகளாகச் சிந்தனை செய்ய முயற்சித்தவர்கள். இங்கே தாமஸ் மான், ஜான் லோ, டட்லி நோர்த் மற்றும் ரிச்சர்ட் கான்டில்லான் ஆகியோரைக் குறிப்பிடலாம். பிரான்சில் புவாகில்பேர், டியுர்கோ, குர்னே ஆகியோர் அந்த நாட்டின் தனிச்சிறப்புக்கு ஏற்ற வகையில் நீதி, நிர்வாகத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

மூன்றாவதாகவும் கடைசியாகவும் இருப்பவர்கள் அறிவிற்சிறந்து விளங்கிய சாதாரணமானவர்கள். இவர்கள் பல தொழில்களையும் சேர்ந்தவர்கள்; சில சமயங்களில் இவர்கள் மேல் வர்க்கத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள், சில சமயங்களில் அவ்விதம் நடைபெறவில்லை. மருத்துவர்களான வில்லியம் பெட்டி, நிக்கோலஸ் பார்பன், பெர்னார்டு மான்டெவில், பிரான்சுவா கெனே முதலியோர் அரசியல் பொருளாதாரத்தை நன்றாகப் படித்திருந்தனர் என்று மார்க்ஸ் எழுதியிருக்கிறார். இது புரிந்து கொள்ளக் கூடியதே.

படிக்க:
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

அந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் மருத்துவத்துறை மட்டுமே சிறப்பான வளர்ச்சி பெற்றிருந்தபடியால் அது சுறுசுறுப்பானவர்களை, சிந்திக்கக் கூடியவர்களைக் கவர்ந்தது. 18-ம் நூற்றாண்டில் பொருளியலாளர்கள் மத்தியில் மதப் பணிகளை மேற்கொண்டவர்களையும் பார்க்கிறோம்; பிரான்சிலும் இத்தாலியிலும் மத குருக்கள் (தற்சிந்தனையும் ஆழமான அறிவும் கொண்ட இத்தாலியப் பொருளியலாளரான காலியானி இவர்களில் ஒருவர்), இங்கிலாந்தில் ஆங்கிலத் திருச்சபையின் பாதிரிமார்கள் (டக்கர் மற்றும் மால்தஸ்) இதில் அடங்குவர்.

இந்தப் பிரிவுகள் சில நிபந்தனைகளுக்குட்பட்டே சரியானவை என்பதால் கருத்துக்கள் எவ்விதமாக வளர்ச்சியடைந்தன என்பதை இவை நிச்சயமாக நிர்ணயிக்கவில்லை; ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சியிலிருந்த சிக்கலான நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்வதற்கு இவை உதவுகின்றன.

ஏதாவதொரு குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவாக எழுதுவது அல்லது அந்தக் கொள்கையைப் பற்றி விமர்சனம் செய்வது என்பதே பொருளாதாரக் கட்டுரைகளின் முக்கியமான செய்முறை நோக்கமாக இன்னும் இருந்து வருகிறது. எனினும் 18-ம் நூற்றாண்டின் அறுபதுக்களில் டியுர்கோ மற்றும் ஜேம்ஸ் ஸ்டுவர்ட் எழுதிய புத்தகங்கள் 17-ம் நூற்றாண்டிலும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாணிப ஊக்கக் கொள்கையினர் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து அதிகமாக வேறுபட்டிருக்கின்றன. அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான கோட்பாடுகளை முறையாகவும் தத்துவரீதியாகவும் விளக்கிக் கூறுவதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சிகள் இவை.

The Wealth of Nations Adam Smith Bookமேலும் “செய்முறை நோக்கம்” பலவிதமான வடிவங்களை அடைகிறது. சில எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அது அவர்களுடைய சொந்த நலன்களையும் அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களையும் நேரடியாக ஆதரித்துப் பத்திரிகைகளில் எழுதுவதாக இருக்கிறது. வேறு சிலரிடம் அது சமூக நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்கின்ற மிகவும் ஆழமான போக்காக இருக்கிறது; இந்த ஆராய்ச்சியானது வர்க்க நலன்களை பல் கூட்டுத் தொகுதியாகவும் இடையில் வருகின்ற வடிவத்திலும் மட்டுமே கவனம் கொள்கிறது. இரண்டாவது வகையைச் சேர்ந்த மனிதர்கள்தான் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தை உருவாக்கினார்கள் என்பதை வலியுறுத்துவது அவசியமல்ல. உதாரணமாக, ஆடம் ஸ்மித் வணிகருமல்ல, தொழில் அதிபருமல்ல. நாடுகளின் செல்வம் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் சுதந்திரமான வர்த்தகக் கொள்கையை ஆதரித்துத் தீவிரமாக வாதாடுகிறார்; அதனால் தனக்குத் தனிப்பட்ட முறையில் லாபம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு அவருக்குச் சுங்க இலாகாவில் வேலை கிடைத்தது. அவர் எந்தக் கருத்தை எதிர்த்துப் போராடினாரோ அந்தக் கருத்தின் உருவகமான அமைப்பிலேயே அவர் பணி புரிய நேர்ந்தது அவருடைய வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்றாகும்.

மான்டெவிலின் முரணுரைகள் எவ்வளவு சிறப்பாக இருந்த போதிலும் அவர் இங்கிலாந்தில் மூலச்சிறப்புடைய மரபின் உருவாக்கத்திலிருந்து சற்று விலகியே நிற்கிறார். அந்த மரபு முதலாவதாகவும் முதன்மையாகவும் லாக் (1632-1704) மற்றும் நோர்த் (1641-1691) ஆகியோரோடு இணைக்கப்பட்டிருக்கிறது; இவர்கள் பெட்டியின் நேரடியான வாரிசுகள்.

18-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தத்துவஞானியும், பொருள்முதல்வாத அறியும் ஆற்றல் தத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும் முதலாளித்துவ மிதவாதத்தின் தந்தையுமான லாக் பொருளாதார விஞ்ஞானத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். 1691-ம் வருடத்தில் அவர் வெளியிட்ட வட்டி விகிதத்தைக் குறைப்பது, பணத்தின் மதிப்பை உயர்த்துவது ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி சில கருத்துக்கள் என்ற புத்தகம் இதற்குக் காரணமாகும். அதே சமயத்தில் லாக்கின் தத்துவஞானம் முழுவதுமே, 18-ம் நூற்றாண்டில் – 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட – ஆங்கில அரசியல் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக உதவியது. லாக் சமூக விஞ்ஞானத்தில் இயற்கைச் சட்டக் கருத்துக்களை வளர்த்தார்; இவை இயற்கை விஞ்ஞானத்தில் நியூட்டன் வளர்த்த யாத்திரிகப் பொருள்முதல்வாதத்துக்குச் சமமான போக்காகும். நாம் முன்னர் குறிப்பிட்டது போல, இந்தக் கருத்துக்கள் அவர் களுடைய காலத்தைப் பார்க்கும் பொழுது முற்போக்கான வையாகும்; ஏனென்றால் அவை சமூக நிகழ்வுகளின் உலகத்தில் புறநிலையான விதிகள் என்ற கோட்பாட்டை ஏற்படுத்தின.

உபரி மதிப்பைப் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் லாக் செய்த முக்கியமான முன்னேற்றம் கூட இயற்கைச் சட்டம் என்ற கருத்து நிலையிலிருந்தே தோன்றியது. மனிதன் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொண்டு விவசாயம் செய்யக் கூடிய அளவுக்குத் தேவையான நிலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இயற்கையானது; அது போல தன்னுடைய சொந்த நுகர்வுக்குத் தேவையான எல்லாவிதமான மற்ற வசதிகளையும் (இதில் பணமும் உண்டு) பெற்றிருக்க வேண்டும் என்பதும் இயற்கையே என்று அவர் எழுதுகிறார். ஆனால் உடைமைகளைப் பகிர்ந்தளிப்பதிலுள்ள செயற்கையான ஏற்றத்தாழ்வின் காரணமாகச் சிலரிடம் அதிகமான நிலமும் பணமும் சேர்ந்து விடுகிறது; அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுகிறார்கள், பணத்தை வட்டிக்குக் கொடுக்கிறார்கள். நிலக் குத்தகையும் வட்டியும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தின் ஒரே மாதிரியான இரு வடிவங்கள் என்று லாக் கருதினார்.

படிக்க:
1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
♦ குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் !

டட்லி நோர்த் தற்சிந்தனை மிக்க ஆளுமை பெற்றவர். ஒரு பிரபுவின் குடும்பத்தில் இளைய மகனாகப் பிறந்தார்; இளமைப் பருவத்தில் அவர் கல்வி கற்பதில் காட்டிய ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அவரை (தாமஸ் மானைப் போலவே) நடுக்கடல் நாடுகளோடு வர்த்தகம் செய்யும் கம்பெனியின் வணிகர் ஒருவரிடம் சேர்த்து விட்டார்கள். அவர் துருக்கியில் பல வருடங்களைக் கழித்து விட்டு அநேகமாக நாற்பது வயதாகும் பொழுது பணக்காரராக இங்கிலாந்துக்குத் திரும்பினார். ஆனால் ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருப்பது போல, ”அவருடைய தோற்றம் காட்டு மிராண்டியைப் போல இருந்தது; அவனைக் காட்டிலும் அதிகப் பண்பாடு எதுவும் அவரிடம் இல்லை.”

1683-ம் வருடத்தில், இரண்டாம் சார்ல்சின் ஆட்சியில் டோரிகள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் அவர் லண்டன் நகரத்தின் ஷெரிபாக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகிக்கும் பொழுது துருக்கி நாட்டுப் போர் வீரர்களுக்குரிய பழக்க வழக்கங்களைத்தான் அவர் வெளிக்காட்டினார். அரசருக்கு விசுவாசமாகப் பாடுபட்டு விக் கட்சியினருக்கு அதிகமான கெடுதல்களைச் செய்ததற்காக அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது; சர் டட்லி நோர்த் அதற்குப் பிறகு இன்னும் சில முக்கியமான பதவிகளை வகித்தார்; ஆனால் 1688-89ம் வருடப் புரட்சி அவருடைய முன்னேற்றத்தை ஒழித்தது.

1691-ம் வருடத்தில் லாக் வெளியிட்ட வட்டி விகிதத்தைக் குறைப்பது, பணத்தின் மதிப்பை உயர்த்துவது ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி சில கருத்துக்கள் என்ற புத்தகம்.

லாக்கின் ஆழ்ந்த புலமையில் பத்தில் ஒரு பங்கு கூட நோர்த்திடம் இருக்கவில்லை. எனினும் அவர் துல்லியமாகவும் துணிச்சலாகவும் பொருளாதாரத்தில் சிந்தனை செய்யக் கூடிய அசாதாரணமான திறமையைக் கொண்டிருந்தார். சென்ற காலத்தின் அங்கீகாரம் பெற்ற மேதைகளைப் பற்றிக் கவலையில்லாமல் அவர் புதுச் சிந்தனையைக் கொண்டிருந்தார். லாக் எழுதிய புத்தகம் வெளிவந்த அதே சமயத்தில் வர்த்தகத்தைப் பற்றிய கருத்துரை என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுபிரசுரம் வெளிவந்தது. லாக் எழுதிய பிரச்சினைகளைப் பற்றியே இவரும் எழுதியிருந்தார். இந்தச் சிறு பிரசுரம் 17-ம் நூற்றாண்டின் பொருளாதாரச் சிந்தனையின் அரிய சாதனைகளில் ஒன்றாக விளங்குகிறது.

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விஞ்ஞான முறையை – தர்க்கரீதியான சூக்குமப்படுத்துதலை வளர்த்துச் செல்வதில் நோர்த் பெரும் பங்கு வகித்தார். ஒரு பொருளாதார நிகழ்வு முடிவில்லாத அளவுக்குப் பல கூட்டுத் தொகுதியாக, எண்ணற்ற உறவுகளைக் கொண்டுள்ள தாக இருக்கிறது. எனவே அதை ஆராய்வதென்றால் அதிலுள்ள தேவையற்ற எல்லாத் தொடர்புகளையும் கூறு களையும் ஒதுக்கிப் பிரித்து “கலப்பற்ற வடிவத்தில்” அதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். இதுதான் தர்க்கரீதியான சூக்குமப்படுத்துதலாகும்.

நோர்த் மூலதனத்தை வட்டி கிடைக்கிற பண மூலதனத்தின் வடிவத்தில் மட்டுமே ஆராய்ந்தார் என்பது உண்மையே என்ற போதிலும் அதன் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர் அவரே. கடன்களுக்குக் கிடைக்கும் வட்டி (வாணிப ஊக்கக் கொள்கையினரும் லாக்கும் கூட நினைத்தது போல) நாட்டிலுள்ள பணத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை; பண மூலதனத் திரட்சிக்கும் அதன் தேவைக்குமுள்ள உறவு தான் இதை நிர்ணயிக்கிறது என்று எடுத்துக் காட்டினார். இது வட்டி பற்றிய மூலச் சிறப்புடைய மரபினரின் தத்துவத்துக்கு ஆதாரமாயிற்று; இதிலிருந்து தான் பிற்காலத்தில் லாபம் என்ற இனத்தைப் பற்றிய தெளிவு ஏற்பட்டது. பணத்தைப் பற்றிய தத்துவத்தின் வளர்ச்சிக்கும் நோர்த் அதிகப்பங்காற்றினார்.

நோர்த் வாணிப ஊக்கக் கொள்கையைக் கூர்மையான, அடிப்படையான விமர்சனத்துக்கு உட்படுத்தியதும், “இயற்கையான சுதந்திரத்தை” உறுதியாகத் தீவிரமாக ஆதரித்ததுமே அவரைப் பற்றிய முக்கியமான அம்சமாகவும் இருக்கலாம். வட்டியைக் கட்டாயமாக ஒழுங்குபடுத்துவதை (தனக்கு முன்னர் பெட்டியும் லாக்கும் செய்ததைப் போல) அவர் ஆட்சேபித்தது இதற்குக் காரணமாகும். எனினும் வாணிப ஊக்கக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் அவர்களைக் காட்டிலும் நோர்த் வெகுதூரம் முன்னே சென்றார். இந்த அம்சத்தைப் பொறுத்த வரையிலும் அவர் ஆடம் ஸ்மித்தின் நேரடியான முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார்.

உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் லாக், நோர்த் ஆகிய இருவருமே பெட்டி அளவுக்கு முன்னே செல்லவில்லை. ஆனால் 17, 18-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எண்ணற்ற நூல்களில் அது படிப்படியாக வளர்க்கப்பட்டு நிறுவப்பட்டது; அதன் மூலம் ஸ்மித் வருவதற்கு தளம் தயாரிக்கப்பட்டது. உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சி, உற்பத்தியில் புதுப்புதுத் துறைகளின் தோற்றம், பண்டப் பரிவர்த்தனை விஸ்தரிக்கப்படுதல் இவை அனைத்துமே மக்கள் உண்மையில் மனித உழைப்பின் பகுதிகளைத்தான் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்ற கருத்தை உறுதியாக்கியது. எனவே பரிவர்த்தனை விகிதம், பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்புக்கள் ஒவ்வொரு பண்டத்தையும் உற்பத்தி செய்வதற்குச் செலவழிக்கப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். நிலமும் உற்பத்திக் கருவிகளும் பயன்மதிப்புக்கள் என்ற வகையில் செல்வத்தைப் படைப்பதில் நிச்சயமாக ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன, ஆனால் மதிப்பைப் படைப்பதில் அவற்றுக்கு எத்தகைய பங்கும் இல்லை என்ற உணர்வு வளர்ந்து கொண்டிருந்தது.

பல விதமான கருத்துக்கள் மோதிக் கொண்டிருந்த குழப்பமான நிலையில் இத்தகைய கருத்துக்கள் மெதுவாக, அதிக சிரமத்தோடு கெட்டிப்பட்டன. இவ்விதமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கருத்துக்களின் கடினமான போராட்டம் ஆடம் ஸ்மித்தின் மூளையிலும் நடைபெற்றது. அதை நாம் பின்வரும் பகுதியில் வர்ணிப்போம். மதிப்புத் தத்துவத்தில் அவருடைய முன்னோடிகளில் அதிக முக்கிய மானவர்கள் ரிச்சர்ட் கான்டில்லான், ஜோசப் ஹாரிஸ், வில்லியம் டெம்பிள் மற்றும் ஜோஸையா டக்கர் ஆகியோராவர். இவர்கள் 18-ம் நூற்றாண்டின் முப்பதுக்களுக்கும் ஐம்பதுக்களுக்கும் இடையில் எழுதினார்கள்.

இவர்களில் ஒரு எழுத்தாளரைப் பற்றி நாம் எந்தத் தகவலையும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் பெயர் நமக்குத் தெரியாது. “பெயரில்லாத-1738”(1) என்று தான் அவரைக் குறிப்பிடுகிறார்கள். அவர் ஓரளவுக்கு ஆடம் ஸ்மித்தைக் கூட விஞ்சும் படி மதிப்புத் தத்துவத்தை அற்புதமான வகையில் துல்லியமாக வகுத்துரைத்தார். 17, 18-ம் நூற்றாண்டுகளில் பல பொருளாதார நூல்கள் ஆசிரியர் பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டன. இவற்றில் சிலவற்றை எழுதியவர்களின் பெயர்கள் முன்பே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன. மற்றவர்கள் இந்த விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் நிறைந்த பாத்திரத்தை வகிக்கவில்லை. இவர்களில் ‘பெயரில்லாத-1738’ ஒரு விதிவிலக்காக இருக்கிறார்.

அவருடைய புத்தகம் பொதுவாக பணத்துக்கு வட்டியைப் பற்றிய சில சிந்தனைகள் என்ற சாதாரணமான தலைப்பைக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஒரு முக்கியமான பகுதியை இங்கே மேற்கோள் காட்டுவோம். நமது ஆராய்ச்சிக்கு உதவுகின்ற வகையில் கீழே (2)விளக்கக் குறிப்பும் தரப்பட்டிருக்கிறது.

”வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களின் உண்மையான, மெய்யான மதிப்பு அவை மனிதகுலத்தை நிலைத்திருக்கச் செய்வதற்குத் தரும் பங்குக்கு ஏற்ற விகிதத்தில் இருக்கிறது. பரிவர்த்தனையாக அவற்றில் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறுகிற பொழுது அவற்றின் மதிப்பு, அவற்றை உற்பத்தி செய்வதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது. அவற்றை விற்பனை செய்கிற பொழுது அவற்றின் மதிப்பு அல்லது விலை அவற்றில் பயன் படுத்தப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டும், பொதுவான அளவுகோல் அல்லது ஊடகமானது அதிகமாக அல்லது குறைவாகக் கிடைப்பதைக் கொண்டும் முடிவாகும்.

Carrying Waterவாழ்க்கைக்கு ரொட்டியையும் மதுவையும் போல் தண்ணீரும் அவசியமே; ஆனால் கடவுளின் கருணையால் ஒவ்வொரு மனிதனுக்கும் எந்த சிரமமும் இல்லாமல் போதுமான அளவுக்குக் கிடைக்கும் வகையில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது : அதனால் பொதுவாக அதற்கு எந்த விலையும் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட மனிதர்களுக்கு அதைக் கொண்டு வந்து கொடுப்பதற்கு எங்கே, எப்பொழுது உழைப்புத் தேவைப்படுகிறதோ அங்கே தண்ணீருக்குக் கொடுக்காவிட்டாலும் உழைப்புக்குக் கூலி கொடுக்க வேண்டும். அதன் காரணமாக சில நேரங்களில், சில இடங்களில் ஒரு பீப்பாய் தண்ணீர் கூட ஒரு பீப்பாய் மதுவைப் போல அதிகமான விலையுள்ளதாக இருக்கலாம்” (3)

மதிப்புத் தத்துவத்தின் வளர்ச்சியோடு ஒட்டிய வகையில் வேறு முக்கியமான துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. கடைசியாகப் பார்க்கும் பொழுது கூலித் தொழிலாளர்களின் ஊதியம் அவர்கள் உயிரோடிருப்பதற்குக் குறைந்த பட்சம் தேவையானவற்றின் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது என்பது பெட்டியின் கருத்து. இந்தக் கருத்தை வளர்த்துச் செல்லும் பொழுது பொருளியலாளர்கள் இந்தக் குறைந்த பட்சத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும் வகையில் நெருங்கி வந்தனர். அவர்கள் மக்கள் தொகைப் பிரச்சினைகளை ஆராய்ந்ததன் மூலமாக, குறைந்த பட்சத்தோடு நின்றுவிடுகிற அளவுக்குத் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்துவிடும் வகையில் தொழிலாளர்களுக்கிடையே போட்டியை ஏற்படுத்துகின்ற விதத்தில் தொழிலாளர் எண்ணிக்கையின் புனருற்பத்தியை உறுதிப்படுத்துகின்ற பொறியமைவை ஓரளவுக்கு விளக்கினார்கள்,

வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்ற லாபத்துக்கும் கடன்களிலிருந்து கிடைக்கின்ற வட்டிக்கும் வேறுபடுத்திப் பார்த்தது மூலதனத்தையும் அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தையும் புரிந்து கொள்வதில் முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. 18ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில் எழுதிய ஜோசப் மாஸ்ஸி, டேவிட் ஹியூம் ஆகியோர் வழக்கமான நிலைமைகளில் வட்டி என்பது வருமானத்தின் பகுதி; வணிகரும் தொழிலதிபரும் பணத்தின் , கடன் மூலதனத்தின் உடைமையாளரோடு இதைப் பகிர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதை முன்பே புரிந்து கொண்டிருந்தனர்.

ஆகவே ஆடம் ஸ்மித்துக்கு முந்திய அரசியல் பொருளாதாரம் உண்மையில் உபரி மதிப்பை ஆராய்கிறது ; ஆனால் அதன் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் லாபம், வட்டிமற்றும் நிலவாரம் என்ற விசேஷமான வடிவங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) 1738 என்ற வருடமும் முற்றிலும் நிச்சயமானதல்ல.

(2)  ஆசிரியர் இந்த இடத்தில் உண்மையில் பயன்மதிப்பை வரையறுத்துக் கூறுகிறார். இங்கே அவர் பரிவர்த்தனை மதிப்பு பற்றிய கருத்து கோளைத் தருகிறார். இது பயன் மதிப்பிலிருந்து முழுவதும் வேறுபட்டிருக்கிறது. சமூகத்துக்கு அவசியமான உழைப்பு நேரம் என்ற கருத்து இங்கே கரு வடிவத்தில் காணப்படுகிறது.

ஆசிரியர் விலைக்கும் மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்கிறார். பணத்தின் மிகையளவு அல்லது பற்றாக்குறையின் தாக்கத்தினால் விலை மாற்றமடைகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.

இது ”மதிப்பைப் பற்றிய புதிர்” என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறப்பான உதாரணமாகும். இது பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது.

மதிப்பை உருவாக்குவது உழைப்பு; இயற்கை அல்ல என்பதை ஆசிரியர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

(3)  R. Meelk, Studies in thie Labour Theory of Value, London, 1956, pp. 42-43.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க