ந்தியை திணிக்கும் அமித்ஷாவின் ஆணவப் பேச்சை கண்டித்தும்;  5, 8-ம் வகுப்பு மாணவர்களை கல்வியிலிருந்து விரட்ட பொதுத் தேர்வைத் திணிக்கும் சதித்தனத்தை எதிர்த்தும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றின் தொகுப்பு…

***

போலீசு மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடிய தர்மபுரி மாணவர்கள் ! 

  • இந்தியை திணிக்கும் அமித்ஷாவின் ஆணவ பேச்சு!
  • 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! மாணவர்கள் மீதான வன்முறை!
  • கிராமப்புற ஏழை மாணவர்களை பள்ளிப் படிப்பில் இருந்து விரட்டும் அரசாணையை திரும்பப் பெறு!

என்ற தலைப்பில் 18-09-2019 காலை 11:30 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகமும், போலீசும் மாணவர்களை போராட்டத்தில் கலந்துக் கொள்ள விடக்கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் மாணவர்கள் அந்த தடையையும் தாண்டி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தை துவங்கினர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது சுமார் 15-க்கும் மேற்பட்ட போலீசாரும், 10-க்கும் மேற்பட்ட உளவுப் பிரிவினரும் வந்து மாணவர்களை சூழ்ந்து கொண்டு களைத்து விடும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்கள் எழுச்சிமிகு முழக்கமிட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆர்ப்பாட்டத்தை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடத்தி முடித்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்து மாணவர்கள் அனைவரும் சென்ற நிலையில், அங்கிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு மற்றும் தோழர் பாலன் ஆகிய இருவரையும் தர்மபுரி அதியமான் கோட்டை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் ஐந்து போலீசார் ஒரு வேனில் வந்து வழிமறித்தனர்.

“வண்டில ஏறு.. நீ எதுக்கு இங்க வந்து போராட்டம் நடத்தற.. நீ அனுமதி வாங்கினேயா? நாங்கள் எல்லாம் என்னாத்துக்கு இருக்கிறோம்? உன்னுடைய இஸ்டத்துக்கு வந்து அரச எதிர்த்து போராட்டம் நடத்துவ.. அதனை நாங்க பார்த்துக் கொண்டு இருப்போமா? ஏறுடா வண்டியில…” என்று வலுக்கட்டாயமாக போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

படிக்க :
♦ கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !
♦ தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

அப்போது தோழர்களின் செல்போனையும் வலுக்கட்டாயமாக பிடிங்கிக் கொண்டது போலீசு. அதன் பிறகு குற்றவாளிகளை விசாரிப்பது போல் லாக்-அப்பில் அடைக்க முயன்றனர். இதனை எதிர்த்து தோழர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரண்டுபோன போலீசு அதிகாரிகள் அதன் பிறகு சரி உங்கள் முகவரியை மட்டும் கொடுங்கள் என்று கூறி எழுதி வாங்கிக் கொண்டனர்.

நண்பகல் 12 மணிக்கு தோழர்களை கைது செய்த போலீசு இரவு 7:30 மணிக்கு தான் அவர்களை விடுவித்தது. மேலும் தோழர்கள் மீது 151 சி.ஆர்.பி.சி. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, சட்டவிரோதமாக கூடியது ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் கல்வி உரிமை பறிப்புக்கு எதிராக மத்திய மாநில அரசு தொடுக்கும் அடக்குமுறைக்கு எதிராக, தொடர்ந்து மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும், அடுத்தக்கட்ட போராட்டத்துக்கும் தயாராகி வருகிறது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தருமபுரி மாவட்டம். தொடர்புக்கு: 63845 69228

***

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 3 வருடம் தள்ளிவைப்பு ! தமிழக அரசின் கபடநாடகம் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !

  • 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு !
  • தமிழக அரசே 3 வருடம் தள்ளிவைப்பு என்று நாடகமாடாதே!
  • அரசாணையை திரும்பப்பெறு!

என்ற முழக்கங்களின் அடிப்படையில், சென்னை பள்ளி கல்வி துறை இயக்குனரகம் (DPI) முன்பு 18.9.2019 அன்று பிற்பகல் 3:00 மணியளவில் சென்னை பு.மா.இ.மு சார்பில் ஆப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பட்டத்துக்கு புமாஇமு சென்னை நகர செயலாளர் தோழர் சாரதி தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்து கண்டனங்களைப் பதிவு செய்தார்.

பின்னர் போராட்டத்தில் பங்குபெற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கம் போலீசு நிலையத்தில் மாலைவரை வைக்கபட்டிருந்தனர். பின்னர் அவர்களை விடுவித்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு : 94451 12675.

***

கடலூர் அஞ்சலகம் முன் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

  • 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு என்ற கிராமப்புற மாணவர்கள் கல்வியை பாதிக்கும் அரசாணையை  திரும்பப் பெறு!
  • 2019 தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தாதே!
  • ஒரே நாடு – ஒரே மொழி இந்தி என்ற அமித் ஷாவின் ஆணவப் பேச்சுக்கு கண்டனம்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து கடலூர் அஞ்சல் அலுவலகம் முன்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 18.09.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பு.மா.இ.மு மாவட்டசெயலாளர் தோழர் மா.மணியரசன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் வெண்புறா குமார், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் செந்தில்குமார், மற்றும் மாணவர்கள் வெங்கடேஸ்வரன், பூங்குழலி, பால்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

***

உளவுப் பிரிவு போலீசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் கள்ளக் கூட்டை முறியடித்த திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் !

ல மொழிகளை அழித்து இந்தியை திணிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்தும்; 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரியும், திருச்சி பெரியார் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

கல்லூரி வாட்ச் மேன் மூலம் நேரடியாக உளவு பிரிவுக்கு தகவல் சென்றது. உடனே 3 வேன்களில் 2 உளவுப் பிரிவு மற்றும் 13 போலீசார் வந்திறங்கினர். அதுமட்டுமல்லாது போராடும் மாணவர்களை கலைக்க ஒரு போராசிரியரும் முயன்றார். அந்த பேராசிரியருடன் மாணவர்கள் நிகழ்த்திய உரையாடல் கீழே…

மாணவர்கள் : மாணவர்கள் போராட்டம் என்றாலே நாம் ஒருங்கிணைவதற்குள் இவர்கள் வந்து விடுகிறார்கள். நமக்குள் கருப்பு ஆடு இருக்கு. நல்லா வாட்ச் பன்னணும்.
ஒரு ஆசிரியர் : 5-வது 8-வது பள்ளிக்குதானே தேர்வு, இங்கு எதுக்கு போராடுறீங்க…
மாணவர்கள் :‌ வேறு எங்கு டாஸ்மாக் கடையில நின்னு போராடவா…
ஆசிரியர் : எங்காவது நின்னு போராடு. இங்க பன்னாதிங்க.
மாணவர்கள் : சரி, அப்போ கல்லூரி பிரச்சனையை பத்தி பேசுவோம், சரியா டாய்லட் இருக்கா, நல்ல தண்ணி இருக்கா… சொன்னா லிஸ்ட் பத்தாது…
ஆசிரியர் : ???!!!????

அடங்கிய ஆசிரியர் அமைதியாக உள்ளே சென்றுவிட்டார்.

அதன் பின்னர் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. உரிமைக்காக போராடுவது கடமை! உரிமையை பறிக்கும் போதும் உறுதியாக போராடுவதும் நம் கடமை என மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தாய் மொழி தமிழ் இருக்க இந்தியை திணிக்காதே! 5, 8 வகுப்புக்களுக்கு பொதுத் தேர்வில் 3 ஆண்டு விலக்கு என ஏமாற்றாதே ! முழுமையாக ரத்து செய்! என மாணவர்கள் முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர் கூட்டமைப்பு.
திருச்சி. தொடர்புக்கு : 74182 06819.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க