மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் !

18.09.2019

டப்பு கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பொதுத் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களை 2021-22 வரை இடைநிறுத்தம் செய்யக்கூடாது எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வையும் சேர்த்து ஐந்து பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எழுத வேண்டும். இப்பொதுத் தேர்வுகள் பெரும்பான்மை மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கே சாதகமாக அமையும். எனவே உடனடியாக இவ்வரசாணையை திரும்ப பெறுமாறு பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு தமிழக அரசைக் கோருகிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை இல்லாத ஆரம்பப் பள்ளிகளை நூலகங்களாக மாற்றுவது, பத்துக்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் ஓராசிரியரை மட்டுமே நியமிப்பது, ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அப்பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவருவது, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு போன்றவைகளை உதாரணங்களாகக் கூறலாம். மேலும் ஒன்பதாம் வகுப்பில் இருந்து தொழிற்கல்வி வழங்கப் போவதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

மேற்கண்ட இவ்வறிவிப்புகள் அனைத்துமே இன்னும் விவாதத்தில் மட்டுமே உள்ள, சட்ட அங்கீகாரம் கூட பெறாத தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளாகும். இருந்தபோதிலும் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற போர்வையில் தனியார்மயத்தை தீவிரப்படுத்துவதற்காகவே இது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு செயல்பட்டுவருகிறது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !
♦ பல்கலை தேர்வுக் கட்டண உயர்வு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | திண்டிவனம், விழுப்புரம், கடலூர் மாணவர்கள் போராட்டம் !

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, படிப்பதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலிருப்பது போன்ற குறைபாடுகளை சரிசெய்ய வேண்டுமென கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்குறைபாடுகளை சரி செய்யாமல் 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு அதிக சுமையை உருவாக்கும். இது மாணவர்களை தனியார் பயிற்சி வகுப்புகளை (Tuition) நோக்கி செல்லுவதை கட்டாயமாக்கும். மேலும் இத்தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்கள் கட்டாய இடைநிற்றலுக்கும் தள்ளப்படுவர். குறிப்பாக கிராமப்புற மற்றும் சமுதாய – பொருளாதார நிலைமைகளில் பின்தங்கிய சூழலிருந்து வருகின்ற மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவர்.

மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காகவே நீட் தேர்வு என்ற பொய்யை சொல்லி கிராமப்புற மாணவர்களை மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றி பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.

அதுபோலவே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது எதார்த்தத்தில் பெரும்பான்மை மாணவர்களை பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கும், தனியார் கல்வி நிறுவனங்களின் வரைமுறையற்ற கொள்ளைகுமே சாதகமாக அமையும். ஆகையால் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக உள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொது தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

– பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு
தொடர்புக்கு : 94443 80211, 94892 35387, 96005 82228

1) பேரா. வீ. அரசு, ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.
2) பேரா. மன்சூர், திருச்சி, ஒருங்கிணைப்பாளர், CCCE – திருச்சி.
3) பேரா. அமலநாதன், ஒருங்கிணைப்பாளர், CCCE – நெல்லை.
4) பேரா. கதிரவன், சென்னை.
5) பேரா. சிவக்குமார், சென்னை.
6) பேரா. கருணானந்தன், சென்னை.
7) பேரா. அருணாச்சலம், திருச்சி.
8) பேரா. மருதை, திருச்சி.
9) பேரா. மதிவானன், திருச்சி.
10) பேரா. ஐயம்பிள்ளை , திருச்சி.
11) பேரா. சோமசுந்தரம், நெல்லை.
12) பேரா. சாம், திருச்சி.
13) முனைவர். ரமேஷ், சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க