
குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 5 | பாகம் – 01
பள்ளி நாளின் முழு இசைக் குறியீடு (122-வது நாள்) இசையும் ஆசிரியரியலும்
அன்றாடம் காலை நான் பள்ளிக்குச் செல்லும்போது புதிய பள்ளி நாளுக்கான திட்டத்தை என்னுடன் எடுத்துச் செல்கிறேன். முதல் நாள் இரவு இதை நான் தயாரிப்பேன். முந்தைய நாட்களை நன்கு சீர்தூக்கிப் பார்த்து விட்டு, பின் எனது சின்னஞ்சிறு மாணவர்களின் அடுத்த தினத்தை எனக்கே உரித்தான போதனை நயங்களுடன் நான் கற்பனையில் பார்ப்பேன். ஒவ்வொரு பள்ளி நாளையும் பற்றிய இந்த சிம்பனி இசை என் காதுகளில் இனிமையாக ஒலிக்கிறது. நாள் பூராவும் நான் குழந்தைகளுடன் எப்படிக் கலந்து பழகப் போகிறேன் என்பதும் அவர்களுடைய பள்ளி வாழ்வின் காட்சிகளும் என் மனக் கண்ணில் நிழலாடுகின்றன.
இதற்கெல்லாம் என்னை நானே தயார்படுத்திக் கொள்ளும்போது நான் மிகவும் ஒன்றிப் போவதால், யதார்த்தத்தில் இவற்றைச் சந்திக்கும் போது ஏதோ நன்கு பழக்கமானவற்றைச் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுவதால் உறுதியோடு செயல்படுகிறேன். இந்த யதார்த்தத்தை எனது ஆசிரியரியல் எண்ணங்களைச் செயல்படுத்தும் களமாக நான் கருதுவதால் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக, உற்சாகமாகக் கலந்து பழகுகிறேன். இந்த யதார்த்தம் மானுட மனதை மேம்படுத்தப் போவதாக நான் கருதுவதால் முழுப் பொறுப்புணர்வோடு செயல்படுகிறேன்.
அடுத்த பள்ளி நாளைத் திட்டமிடுகையில் பார்க்கும் போது, என் வகுப்புக் குழந்தைகள் பெரியவர்களாகும் நிகழ்ச்சிப் போக்கை, அறிவையும் ஒழுக்க அடிப்படைகளையும் கற்கும் பொருட்டு இவர்கள் முன்னோக்கி நடைபோடுவதை என் மனக் கண்ணில் காண விரும்புகிறேன். எனது போதனை முறையை நாளைய தினத்தின் ஊடாகப் பார்த்து, இதைப் புதுப்பிக்கவும் அதன் மூலம் என்னை நானே புதுப்பித்துக் கொள்ளவும், கடந்த காலத்திலிருந்து அல்லாமல் எதிர்காலத்திலிருந்து என் வகுப்பறையில் நுழையவும் நான் விரும்புகிறேன். நான் அடிக்கடி ஆசிரியரை எதிர்கால மனிதனாகத் தான் பார்க்கிறேன்.
தன்னால் எவற்றையெல்லாம் இனி அடைய முடியாதோ அவற்றை நோக்கி தன் மாணவர்களைத் தள்ளுபவர் உண்மையான நவீன ஆசிரியர் அல்ல. தன் மாணவர்களை ஊக்குவித்து எதிர்காலத்திற்குத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, எதிர்கால இலட்சியங்களை நிலைநாட்ட இவர்களுக்குச் சொல்லித் தருவதற்காக அந்த எதிர்காலத்திலிருந்து “வந்தவர் தான்” உண்மையான நவீன ஆசிரியர் – என்று எனக்குத் தோன்றுகிறது.
கல்வி – வளர்ப்புப் பணியின் அன்றாட திட்டத்தை நான் ஏன் முழு இசைக்குறியீடு என்கிறேன்? இசை அகராதியிலிருந்து எடுக்கப்பட்ட இவ்வார்த்தை எனக்குப் பிடித்துள்ளதாலா?
ஆம், இச்சொல்லும் இதன் உள்ளடக்கமும் எனக்குப் பிடித்துள்ளது. ஒரு இசைக் குழு, பாட்டிசைக் குழு, வாத்திய இசைக் குழுவிற்கான இசை படைப்பின் எல்லா பாத்திரங்கள் அல்லது குரல்களுக்காகவும் எழுதப்பட்ட முழுப் பதிவை இது குறிக்கிறது. குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு கல்வி சொல்லித் தருவதற்கான எல்லா அவசியமான, சாத்தியமான விஷயங்களின் பதிவையும் நான் பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டில் பார்க்கிறேன். இவ்விஷயங்களை நிறைவேற்றும் கலையை, திறமையை நான் இதில் பார்க்கிறேன்; இதையும் இசையுலகச் சொற்களால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தலாம்.
கேள்வி கேட்பது, விளக்குவது, மனதில் பதியச் செய்வது, வீட்டு வேலை தருவது என்ற வழக்கமான பாணியில் நான் பாட திட்டங்களைத் தீட்டி வந்த எனது பழைய நடைமுறையை நினைத்து இப்போது வியப்படைகிறேன், மேற்கூறிய அம்சங்கள் ஒவ்வொன்றிற்காகவும் ஒரு சில கேள்விகளையும் வேலைகளையும் நான் யோசித்து வைப்பது வழக்கம். இதில் சிக்கலானது ஒன்றுமேயில்லையென பெரும்பாலும் நம்பினேன். பாடம் நடக்கும் போதே உள்ள நிலவரத்தைக் கொண்டு அங்கேயே நேரடியாகக் கூடுதல் கேள்விகளையும் மற்ற வேலைகளையும் என்னால் சிந்தித்துக் கேட்க முடியாதா என்ன? உண்மையைச் சொன்னால், இத்தகைய மேற்போக்கான திட்டங்களுக்குக் கூட நான் எதிராக இருந்தேன்: “இவையெல்லாம் எனக்கு எதற்கு? இவையெல்லாம் சம்பிரதாயமாயிற்றே! பூர்வாங்கத் தயாரிப்பின்றி ஆரம்ப வகுப்புகளில் எந்த ஆசிரியரால் பாடம் நடத்த முடியாது!”
ஆசிரியரியலில் எளிய விஷயங்களே கிடையாது என்று குழந்தைகளும் பள்ளி வாழ்க்கையும் எனக்குச் சொல்லித் தரும் வரை நான் இப்படி நினைத்தேன். குழந்தைகள் எனது ஆசிரியர்கள். அவர்களுடன் கலந்து பழகுவது எவ்வளது சிக்கலானது என்று பல ஆண்டுகள் அவர்கள் எனக்குப் பொறுமையாகச் சொல்லித் தந்தனர். அவர்களை வளர்ப்பது எளிதாக வேண்டுமெனில், ஒவ்வொரு பள்ளி நாளையும் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமெனில், எனது முயற்சிகள் நல்ல பயன்களைத் தர வேண்டுமெனில் நாளைய தினத்தை நான் முன் கூட்டியே திட்டமிட வேண்டும், இயன்ற அளவு தெட்டத் தெளிவாக, செயல் முனைப்போடு இதற்குத் தயாராக வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
ஆனால் இது மட்டும் போதாது. இதையெல்லாம் எப்படி நடைமுறையில் நிறைவேற்றுவது என்பதைப் பற்றியும் முன் கூட்டியே தீவிரமாகச் சிந்திக்க வேண்டும், ஏனெனில் குழந்தைகள் தாம் கற்றுக் கொள்ளும் விஷயங்களை, இவ்வாறு புதியவற்றை அறிவதை, தம் ஆசிரியரை எப்படி அணுகுகின்றனர் என்பது மேற்கூறியதைப் பொறுத்துள்ளது. விஷயங்கள் எவ்வளவு சுவாரசியமானவையாகவும் முக்கியமானவையாகவும் இருந்தாலும் இவற்றைக் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லித் தருகின்றோம் என்பது பெரிதும் முக்கியமானது. ஆசிரியர் குழந்தைகளை நேசிப்பது மட்டும் போதாது, இந்த நேசத்தை வெளிப்படுத்தத் தெரிந்தவராயும் அவர் இருக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு வேண்டும். குழந்தை வளர்ப்புக் கலை, கல்வி போதிக்கும் கலை பற்றிச் சிந்திக்க வேண்டும். இதைப் பற்றி நேரடியாக பாடத்தின் போது சிந்திப்பதானது பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஒரு கலைஞன் ரசிகர்களின் முன் மேடையில் எப்படி நடிக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால் எப்படியிருக்குமோ அதே போல் இருக்கும். பள்ளி நாளின் முழு இசைக் குறியீட்டில் அன்றைய தினத்திற்கான திட்டம் மட்டும் அடங்கியிருக்கவில்லை, குழந்தைகளின் மீது எப்படி அக்கறை செலுத்துவது, அவர்களுக்கு எப்படி சந்தோஷத்தை அளிப்பது, எனது ஆசிரியர் வாழ்க்கையில் நான் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய எண்ணங்களும் இவற்றில் அடங்கியுள்ளன.
இசையும் குழந்தை வளர்ப்பும்! இசையும் கல்வி போதனையும்! இங்கே இசை எதற்கு?
ஆம், இசைத் தத்துவத்தால், குழந்தை வளர்ப்புத் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் மனிதாபிமான சாரத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்க முடியும். பள்ளி வாழ்க்கையை, குழந்தைகளுக்கு புத்தி சொல்லிக் கொடுப்பதற்காக ஆசிரியருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் நடக்கும் முடிவற்ற போராட்டமாகப் பார்க்காமல் நேர்மையான மனதையும் மென்மையான இதயத்தையும் படைக்கும் மாபெரும் இசைப் படைப்பாக ஏன் பார்க்கக் கூடாது? இந்த இசை பெரும்பாலும் ஓங்கியும் சில சமயங்களில் சுருதி தாழ்ந்தும் ஒலிக்கும், சோகமும் சில நேரங்களில் தலை தூக்கும். ஆனால் இந்த இசை கண்டிப்பான, அதிகாரத் தொனியிலான, பதட்டமான, எரிச்சலூட்டக் கூடிய, முரட்டுத்தனமான இசையாக இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட தன்மைகள் இசைக்குத் தேவையே இல்லை, ஆசிரியரியலுக்கும் இவை அவசியமில்லை .
இசை மானுட மனதில் உள்ள மனிதாபிமானத்தின் அடிப்படை. பள்ளி நாளின் முழு இசைக் குறியீடுகளுடன் குழந்தைகளை நோக்கிச் செல்லும் ஆசிரியர், இந்த இசையைக் கேட்கும் போது, குழந்தை வளர்ப்பு எனும் மந்திரக் கோலோடு தான் நிற்பதைக் கற்பனை செய்து பார்க்கையில், தன்னைத் தானே குழந்தைகளுக்கு அர்ப்பணித்துள்ளதில் தான் குழந்தை வளர்ப்பின் ரகசியம் உள்ளது என்று நம்பும் போது – இதை விட ஆசிரியருக்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியாது.
ஒரு ஆசிரியர் தீய எண்ணங்களோடு பள்ளிக்குச் செல்லாமலிருப்பது நல்லது, அப்போது தான் குழந்தைகளின் மனதைப் பாழ்படுத்தாமலிருக்கலாம்; தெளிவான இலட்சியங்களும் வளர்ப்பு எண்ணங்களும் இல்லாமல் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது நல்லது, அப்போது தான் மலைப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் விஷயங்களைக் குழந்தைகள் மீது திணிக்காமல் இருக்கலாம்; நேற்றைய தினத்திலிருந்து, தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளாமல் பள்ளியினுள் நுழையாமலிருப்பது நல்லது, அப்போது தான் சலிப்பையும் ஒரே மாதிரியான அலுப்பேற்படுத்தும் தன்மையையும் விட்டொழிக்க முடியும்; ஆசிரியரியல் மீது நம்பிக்கையின்றி குழந்தைகளிடம் வராமலிருப்பது நல்லது, அப்போதுதான் தம் மீதும் தம் ஆசிரியர் மீதும் உறுதியின்மையை அவர்கள் மனதில் விதைக்காமலிருக்கலாம். இதெல்லாம் நல்லது, ஏனெனில் ஆசிரியர் என்பவர் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையின் துவக்கத்தில் நிற்கிறார், தன் சொந்தக் கரங்களால், தன் நடவடிக்கையால் எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை இடுகிறார். உற்சாகம், உறுதி, அர்ப்பணிப்பு இல்லாமல் எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை அமைக்க முடியாது.
படிக்க:
♦ ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி !
♦ மோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் !
நான் பாடவேளைகளுக்கு மட்டுமின்றி, பள்ளி நாள் முழுவதற்குமான முழு இசைக் குறியீட்டை உருவாக்குவதையே விரும்புகிறேன். பாடங்கள் தான் பள்ளி நாளின் அடிப்படை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் குழந்தைகள் பாடங்களுக்காக மட்டுமே பள்ளிக்கு வரவில்லை என்பது தெளிவு. இவர்கள் இடைவேளைகளுக்காகவும், பள்ளியில் தங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதியவற்றிற்காகவும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஆசிரியரைச் சந்திக்கவும், பொதுவில் சுவாரசியமான பள்ளி விஷயங்களுக்காகவும் பள்ளிக்கு வருகின்றனர். பாடவேளைகளில் மட்டுமின்றி பள்ளி வாழ்க்கைச் சூழல் முழுமையாலும் பள்ளியில் கலந்து பழகுவதாலும் பள்ளி விஷயங்களாலும் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.
(தொடரும்)
முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!