திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வுக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
கிராமப்புற மாணவர்களின் குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் தடாலடியாக கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது, திருவள்ளுவர் பல்கலைக்கழகம்.
கல்வியை வியாபாரமாக்குவதை நோக்கமாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் போராடிவரும் சூழலில், பள்ளிக்கல்வித்துறையில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றங்கள் தொடங்கி, 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு வரையில் தேசியக் கல்விக் கொள்கையில் ஆலோசணைகளாகக் கூறப்பட்ட பல அம்சங்கள் சதித்தனமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சிதான் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் திடீர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு.
இத்தகைய சதிகளை அம்பலப்படுத்தியும், மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் மாணவர்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – திண்டிவனம் :
திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து நான்காவது நாளாக கடந்த செப்-20 அன்று, திண்டிவனம் கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பு.மா.இ.மு. ஒருங்கிணைப்பில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இம்மறியல் போராட்டத்தையடுத்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார் மாவட்ட துணை ஆட்சியர். ”எதிர்வரும் செப்-23 வரை யாரும் கட்டணம் கட்டத் தேவை இல்லை. கட்டணம் குறைக்கப்படும்” என்று அவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிடுவது என்றும்; கோரிக்கைகள் நிறைவேறாதபட்சத்தில் சென்னை-சேலம் புறவழிச்சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு – 91593 51158
அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி – விழுப்புரம் :
செப்-20 அன்று விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலிபெருக்கி ஏற்பாட்டோடு நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பாடல், கவிதை, கண்டன உரையின் வாயிலாக பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை அம்பலப்படுத்தினர். செப்-23 இன்றும் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்,
தொடர்புக்கு: 91593 51158
பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி – கடலூர்
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களும் நான்காவது நாளாக செப்-20 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்; 5,8 வகுப்புக்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும்; அமித்ஷா அறிவித்த நாடு முழுவதற்குமான ஒரே மொழி இந்திதான் என்ற ஆணவ பேச்சைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
படிக்க:
♦ ஃபைன் போடுறது இருக்கட்டும் ! மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா ? | காணொளி
♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்
மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த கல்லூரி முதல்வர் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் நோக்கில் அல்லாமல், எப்படியாவது போராட்டத்தை கைவிட வைக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு பேசினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய கடந்த செப்-20 அன்று கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார். எனினும், திருவள்ளூர் பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டத்தை தொடர்வது என்பதில் மாணவர்கள் உறுதியாக நின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 97888 08110
திருவள்ளுவர் கலைக் அறிவியல் கல்லூரி – குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடியில் செயல்பட்டுவரும் தனியார் கல்லூரியான திருவள்ளுவர் கலைக் அறிவியல் கல்லூரி மாணவர்கள் செப்-20 அன்று கல்லூரிக்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில் போலீசும் பின்னர் வட்டாட்சியரும் அதனைத்தொடர்ந்து ஊர்ப்பெரியவர்களும் போராட்டத்தைக் கைவிடுமாறு மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்கெனவே, தொட்டதுக்கெல்லாம் கல்லூரி நிர்வாகம் அபராதம் விதித்துவரும் நிலையில், திருவள்ளுவர் பல்கலைக் கழகமும் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது இதனை திரும்பப்பெறும்வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர், கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுரை வழங்குவதாக வட்டாட்சியர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர். பல்கலைக்கழகம் தனது அறிவிப்பைத் திருப்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கையோடு கலைந்து சென்றனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்,
தொடர்புக்கு: 97888 08110
மாணவரை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடு !
பு.மா.இ.மு ஒருங்கிணைப்பில் விழுப்புரம் SP – யிடம் மனு !
திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டண உயர்வுக்கு எதிராக திருவெண்ணெய் நல்லூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், பு.மா.இ.மு ஒருங்கிணைப்பின் கீழ், கடந்த 19.09.2019 அன்று சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தை கலைக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டனர். அப்போது கல்லூரி மாணவர் கவி நிலவனை அதிரடி படை காவலர் புஷ்பராஜ் தாக்கினார். இதனை போராட்டத்தின்போதே மாணவர்கள் கடுமையாக கண்டித்தனர்.
அதைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காவலர் புஷ்பராஜ் மீதும், காவல் ஆய்வாளர் லஷ்மி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி 20.09.2019 அன்று 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு, எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக SP ஜெயகுமார் அவர்கள் கூறி இருக்கிறார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.
தொடர்புக்கு : 91593 51158.