திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், செய்யாறு பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிராக நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இக்கல்லூரியில் காலை மற்றும் மாலை சேர்த்து 5000 மாணவர், மாணவியர்கள் படிக்கின்றனர். ஆண்களை விட பெண்களே அதிகம் படிக்கிறார்கள். திடீரென திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை கடந்த செப்15 -ம் தேதி உயர்த்தி உத்தரவிட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.
மூன்றாவது நாள் நடத்திய போராட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகமோ மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல், போராட்டக் களத்திலேயே மாணவர்கள் மயங்கி கீழே விழுந்த பிறகும் , மூன்று மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட பிறகும், ஆர்.டி.ஓ. மட்டுமே மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். அவர் திங்கள்கிழமை வரை மாணவர்களிடம் அவகாசம் கேட்டார்.
திங்கட்கிழமை கட்டணத்தை குறைப்பார்கள்; இல்லை எனில் நீங்கள் பழைய கட்டணத்தையே செலுத்துங்கள் என்று கூறினார். அதற்கு மாணவர்கள் அனைவரும் திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்குகிறோம் புதிய கட்டண உயர்வை ரத்து செய்யவில்லை எனில் மீண்டும் திங்கட்கிழமை போராட்டம் தொடரும் என்று ஆர்டிஓ-விடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், செப்- 23 அன்று காலை மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் போலீசு வாகனத்தை கல்லூரி நுழைவாயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த போலீசார் மாணவர்கள் ஒன்று திரண்டு போராடிவிடாதபடி அவர்களை மிரட்டத் தொடங்கினர். மாலை 4 மணிக்கு கட்டண உயர்வு குறித்த பல்கலைகழகத்தின் நிலையை கல்லூரி முதல்வர் அறிவிப்பார் என்றும் அனைவரும் வகுப்புக்குச் செல்லுமாறு பேராசிரியர்களை வைத்து மாணவர்களை விரட்டினர் போலீசார்.
படிக்க:
♦ கேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்
♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?
இவற்றையெல்லாம் மீறி, அணிதிரண்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு வெளியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தேர்வு கட்டண உயர்வு மட்டுமின்றி கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையை மாற்ற வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தகவல் :
பு.மா.இ.மு.,
காஞ்சிபுரம் மாவட்டம்,
தொடர்புக்கு : 9445112675.