கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனமும், அந்நிறுவனத்தின் கைக்கூலிகள் சிலரும் சேர்ந்து கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் உள்ளிட்ட அதன் நேரடி பாதிப்புகளை ‘அனுபவித்து’வரும் கிராமங்களுள் ஒன்றான காயலுரனி என்ற டி. குமாரகிரி கிராமத்தில் சொந்த செலவில் கோயில் கட்டி தருகிறோம் என்று கூறி கிராம மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

சாதி, மத வேறுபாடுகளை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை ஏற்படுத்தி நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். 14 பேரை சுட்டுக்கொன்ற பிறகும், ஸ்டெர்லைட் தியாகிகளின் முதலாமாண்டு நினைவுநாளை கடைபிடிக்கக்கூட விடாமல் பல்வேறு வகைகளில் நெருக்கடிகள் கொடுத்த போதிலும் இன்றுவரையில் எதிர்கொள்ளும் கொலைமிரட்டல்களையெல்லாம் பொருட்படுத்தாமல் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

எப்படியேனும் ஆலையைத் திறந்துவிட வேண்டுமென்று துடிக்கும் ஆலைநிர்வாகம் தனது கைக்கூலிகளைக் கொண்டு, மரக்கன்று நடுவது, தண்ணீர்த்தொட்டி அமைத்து தருவது, கோயில் கட்டி தருவது என எலும்புத்துண்டுகளைக் காட்டி மக்களின் ஒற்றுமையைக் குலைக்க கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டுவருகிறது.

போலீசின் அடக்குமுறையைக் கண்டு துவண்டுவிடாமல், ஸ்டெர்லைட் நிர்வாகம் வீசும் எலும்புத்துண்டுக்கு பலியாகாமல் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர், சுற்றுவட்டார கிராம மக்கள்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகள் அனைத்தையும் அவ்வப்போது எதிர்த்து முறியடித்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் கட்டித்தருகிறேன் என்று கூறி இரு தரப்பினர் இடையே குழு மோதல் உருவாக்கி அமைதியை கெடுப்பதை தடுக்க கோரியும்; மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஸ்டெர்லைட் ஆலையின் உதவிகளை தடுத்து நிறுத்தக்கோரியும்; ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காயலுரனி என்ற டி. குமாரகிரி மற்றும் மடத்தூர், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமரெட்டியாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரின் வழியாக தமிழக முதல்வருக்கும் தலைமைச் செயலருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

மக்கள் அளித்துள்ள மனு :

ஸ்டெர்லைட் ஆலையின் உதவிகளை தடுத்து நிறுத்தவும், ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து அகற்ற வேண்டுதல் – சம்பந்தமாக …

ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து பல்வேறு கிராம பகுதி மக்கள் இன்று மனு கொடுக்கிறார்கள். அவர்கள் மனுவின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் சரியானவை என்றும் கருதி எமது கூட்டமைப்பு சார்பில் மேற்படி மனுவை தங்களிடம் சமர்ப்பிக்கிறோம்.

1996ம் ஆண்டிலிருந்து செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையினால் நீர், நிலம், காற்று மிகவும் மாசுபாடு அடைந்தது. பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளினால் உயிர்க்கொல்லி நோய்களின் தாக்குதலுக்கு ஆளானார்கள். தங்களது சுகாதாரமான வாழ்க்கையை மீட்டெடுக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் அமைதியான முறையில் போராடி வந்தனர்.

மே-22-2018 அன்று நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 15 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் கை, கால் மற்றும் உடல் உறுப்புகளை இழந்தனர். இதன்பின்பு மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணையை பிறப்பித்தது. மேற்படி அரசாணையை ரத்து செய்ய ஸ்டெர்லைட் தரப்பில் சட்ட  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்டின் சட்ட விரோத செயல்பாடுகள் தவறுகள் போன்றவற்றை தமிழக அரசு விசாரணையின்போது தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை 15 வருடங்கள் அனுமதி இல்லாமல் நடத்தியதை நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக தமிழக அரசு நிறுவியுள்ளது.

தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு அதை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதனை உணர்ந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள மடத்தூர், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், சங்கரபேரி, காயலூரணி, சோரீஸ்புரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும், தூத்துக்குடியின் மாநகர பல்வேறு பகுதிகளிலும், மீனவர்கள் அதிகமாக வாழும் கடற்கரையோர பகுதிகளிலும் மரம் நடுவது, குடிதண்ணீர் விநியோகம், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்-நோட்டு புத்தகம் வழங்குதல், கிப்ட் வவுச்சர் கொடுப்பது, மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் கொடுப்பது, பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்குதல், சாலையோர சிறு வியாபாரிகளுக்கு நிழல் குடை வழங்குதல், பொதுமக்களுக்கான குடிநீர் கட்டணம் செலுத்துதல் உட்பட பல்வேறு விதமான உதவிகள் செய்து வருகிறது. ஸ்டெர்லைட்டை திறப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை நடத்திவரும் வழக்கில் வெற்றி கிடைக்காது என்று எண்ணி குறுக்கு வழியில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு இந்த உதவிகள் உதவிகள் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. அரசாணையின் மூலம் மூடப்பட்ட பின்பு இவ்வகையான நலத்திட்டங்களை செய்வதற்கு அரசிடமிருந்து சட்டப்படி அனுமதி இல்லை. சட்டவிரோதமாக மக்களை அணுகுகிறார்கள். பொது மக்கள் பலமுறை எழுத்துப் பூர்வமாகவும், நேரிலும் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிமுதல் ஸ்டெர்லைட் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கோருகிறோம்.

அடுத்ததாக, மக்களைப் பிளவுபடுத்தும் ஸ்டெர்லைட்டின் இவ்வகை நயவஞ்சக உதவிகளால் தூத்துக்குடி கிராமங்களில் அமைதி குலைவு உண்டாகிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தூண்டிவிடுகிறது. ஏற்கனவே ஸ்டெர்லைட் மூட மே-22-2018 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் 273 வழக்குகளும், அதற்கு முன்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும், மே -22-2018 பின்னர் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ளன. சிப்காட், தாளமுத்து நகர் காவல் நிலையங்கள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பல்வேறு புகார் மனுக்கள் வரப்பெற்று ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறாக தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செயல்படுவதால் குற்றவியல்  விசாரணை முறை சட்டம் பிரிவு-133 இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

♦ எங்கள் நிலத்தடி நீரைக் கெடுத்த ஸ்டெர்லைட்டின் குடிநீர் வேண்டாம்!
♦ தாமிரபரணியை சூறையாடும் வேதாந்தாவின் உதவிகள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!
♦ ஸ்டெர்லைட்டை சுற்றி மரம் நட்டி பசுமை வளையம் வைக்க துப்பில்லை!
ஊருக்குள் மரம் நடுவது ஒரு கேடா!

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு,
50-B,போல்டன் புரம்,3 ம் தெரு,
திருச்செந்தூர் மெயின் ரோடு,
தூத்துக்குடி – 628 003.


இதையும் பாருங்க :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க