1776-ம் வருடத்தின் மார்ச், ஏப்ரல் மாதங்களின் போது ஹியூம் மரணப் படுக்கையிலிருந்தார், அது அவருக்குத் தெரியும் என்பதால் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை மிக வேகமாக எழுதி முடித்தார். அதன் பிறகும் நான்கு மாதங்கள் வரை அவர் உயிரோடிருந்தார். அவருடைய மரணத்துக்குப் பிறகு, கால்நூற்றாண்டுக் காலம் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்த ஆடம் ஸ்மித் சுருக்கமான அறிமுகக் கடிதத்தோடு அவருடைய சுயசரிதையை வெளியிட்டார்.
அந்தத் தத்துவஞானியின் கடைசி மாதங்களை ஸ்மித் வர்ணித்திருந்தார். ஹியூம் மற்றவர்களுக்குக் கிடைக்காத மனஅமைதியோடும் அசாதாரணமான உறுதியோடும் மரணத்தை வரவேற்றார். அவர் உற்சாகமானவர், எல்லோருடனும் நன்கு பழகியவர்; நோயின் விளைவாக அவருடைய பருமனான உடல் எலும்புக்கூடாக மாறிவிட்ட போதிலும் அவர் கடைசிவரையிலும் இந்த குணங்களைக் கைக்கொண்டிருந்தார்.
ஸ்மித் எழுதிய அறிமுகக் கடிதம் அரசியல் பொருளாதாரத்தில் அசாதாரணமான பாத்திரத்தை வகித்தது . ஹியூம் ஒரு நாத்திகர் என்பது முன்பே அனைவருக்கும் தெரியும்; அவர் மரணத்தின் தறுவாயில் கூட கடவுளை ஏற்றுக் கொண்டு உண்மையான கிறிஸ்தவராக மரணமடையவில்லை என்பதை அது சந்தேகத்துக்கு இடமில்லாதபடி வெளியிட்டது. ஸ்மித்திடமும் இத்தகைய சமயப்பற்றில்லாத நிலை இருந்தது. திருச்சபை செத்துப் போய்விட்ட ஹியூமின் மீதும் உயிரோடிருந்த ஸ்மித் மீதும் சீறிப் பாய்ந்தது. அண்மையில் ஸ்மித் வெளியிட்டிருந்த நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை முதலில் கல்விச் சிறப்புடைய ஒரு சிறு குழுவினர் மட்டுமே கவனித்தார்கள்.
ஆனால் ஹியூம், ஸ்மித் ஆகியோர் பற்றிச் செய்யப்பட்ட, கண்டனம் அந்தப் புத்தகத்தின் மீது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஸ்மித் ஜாக்கிரதையாக நடந்து கொள்பவர், ஒதுங்கி வாழ்பவர். எனவே அந்தக் கண்டனம் அவருக்கு எதிர்பாராத மனக்கசப்பைக் கொடுத்தது. ஆனால் புத்தகத்திற்கு அடுத்தடுத்துப் பதிப்புகள் வெளிவந்தன. சுமாராகப் பத்து வருடங்களில் நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வேத புத்தகமாயிற்று.
டேவிட் ஹியூம்
ஹியூம் இன்னொரு அர்த்தத்திலும் ஸ்மித்துக்கு வழி வகுத்துக் கொடுத்தார் என்று கூறலாம். அவருடைய அற்புதமான சிறு கட்டுரைகள் – இவை பிரதானமாக 1752-ம் வருடத்தில் வெளிவந்தன – வாணிப ஊக்கக் கொள்கையினரோடு ஸ்மித்துக்கு முந்திய மூலச் சிறப்புடைய மரபினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட சில சாதனைகளைச் சுருக்கமாக எடுத்துரைத்தன. நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதில் இக்கட்டுரைகள் வகித்த பாத்திரம் முக்கியமானதாகும்.
டேவிட் ஹியூம் 1711-ம் வருடத்தில் எடின்பரோவில் உயர் குடியிலே பிறந்து பின்னர் ஏழையாகிவிட்ட ஒரு கனவானின் கடைசி மகனாகப் பிறந்தார். அவர் வாழ்க்கையில் பாடுபட்டு முன்னேற வேண்டியிருந்தது. அதற்கு அவர் தன்னுடைய அபாரமான எழுத்துத் திறமையைத்தான் நம்பினார். ஸ்காட்லாந்துக்காரர்களுடைய மரபு வழிப்பட்ட அருங்குணங்களான உழைப்பும் சிக்கனமும் அவரிடம் நிறைந்திருந்தன.
ஹியூம் தனக்கு இருபத்தெட்டு வயதாகும் பொழுது, தன்னுடைய முக்கியமான தத்துவஞான நூலாகிய மனித இயல்பைப் பற்றிய ஆராய்ச்சி என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதன் மூலமாகவே பிற்காலத்தில் அவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலத் தத்துவஞானிகளில் அதிகமான சிறப்புடைய சிலரில் ஒருவராகக் கருதப்பட்டார். அவருடைய தத்துவஞானம் பிற்காலத்தில் ”அறியொணாவாதம்” என்று அழைக்கப்பட்டது. லாக்கைப் போல அவரும் பருப்பொருள் சார்ந்த பொருள்களைப் பற்றிய மனிதனுடைய அறிவின் மிக முக்கியமான தோற்றுவாய் உணர்ச்சியே என்று வாதாடினார்; ஆனால் இந்த அந்நியப் பொருள்களை (அதாவது பருப்பொருளை) அடிப்படையில் அவற்றின் முழு நிறைவோடு அறியக் கூடியவை அல்ல என்று கருதினார்.
பொருள்முதல் வாதத்துக்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் இடையில் எங்காவது ஒரு இடத்தைக் கண்டு பிடிப்பதற்கு அவர் முயன்றார்; ஆனால் உலகம் அறிய முடியாதது என்று வாதிட்ட காரணத்தால் அவர் தவிர்க்க முடியாத வகையில் கருத்துமுதல் வாதத்தை நோக்கிச் சென்றார். அவர் மதத்தைப் பற்றிச் செய்த விமரிசனம் பத்தாம் பசலித்தனத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கு வகித்தது. ஆனால் அவர் முரண்பாடற்ற நாத்திகவாதி அல்ல; அவருடைய தத்துவஞானத்தில் விஞ்ஞானத்தையும் மதத்தையும் “சமரசப்படுத்தக் கூடிய” இடைவெளியை விட்டிருந்தார்.
ஹியூம் எழுதிய புத்தகம் உடனே பிரபலமடையவில்லை. இதற்கு அந்தப் புத்தகத்தின் செறிவான தன்மையே காரணம் என்று அவர் கருதினார். எனவே அந்தக் கருத்துக்களை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சிறு கட்டுரைகளை எழுதினார். இதனோடு கூடுதலாக, சமூகத்தின் தத்துவத்தைப் பற்றியும் எழுதினார். அவருடைய ஆரம்ப வெற்றி அவர் எழுதிய அரசியல், பொருளாதாரப் புத்தகங்களின் மூலமாகக் கிடைத்தது; இங்கிலாந்தின் வரலாறு என்ற தலைப்பில் பல பகுதிகளைக் கொண்ட புத்தகத்தையும் எழுதினார்; இப்புத்தகம் அவருக்கு ஐரோப்பாவில் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.
வரலாற்றாசிரியர் என்ற முறையில் ஹியூம் டோரிகளை, நிலவுடைமையாளர்களுடைய கட்சியை ஆதரித்தார்; இந்தக் கட்சி பழமைவாத முதலாளி வர்க்கத்தினரின் ஆதரவைப் பெற்றிருந்தது. அவர் பண்பட்ட அறிவுஜீவி, “ஆன்மாவின் உயர் குடியினர்”. அவருக்கு “விக் கட்சியின் கீழ்மக்கள் கும்பலைப் பிடிக்க வில்லை” கடைக்காரர்களின் முரட்டுத்தனத்தையும் பரிசுத்த வாதிகளின் முட்டாள்தனத்தையும் வெறுத்தார்; லண்டனைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களை ”தேம்ஸ் நதிக் கரையிலிருக்கும் காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டார்.
1763 – 65ம் வருடங்களில் ஹியூம் பாரிஸ் நகரத்தில் இங்கிலாந்தின் தூதரகத்தில் செயலாளராகப் பணியாற்றினார். அங்கே கலை, இலக்கிய வட்டாரங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது; பிரான்சின் அறிவியக்கத்தைச் சேர்ந்த பல அறிஞர்களோடு அவர் நட்புக் கொண்டு பழகினார். பிறகு இங்கிலாந்தில் ஒரு தூதரகப் பதவிக்கு மாற்றப்பட்டார். அவருடைய கடைசி வருடங்களை எடின்பரோ நகரில் அறிவாளிகளும் இலக்கிய மேதைகளுமான நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கழித்தார்.
அவருடைய பொருளாதாரக் கட்டுரைகள் பல சுவாரசியமான காட்சிப் பதிவுகளையும் கருத்துக்களையும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, செலாவணியிலுள்ள பணத்தின் அளவு அதிகரிப்பதன் விளைவாக விலைகள் மேலே போகின்ற நிகழ்ச்சிப் போக்கில் கால இடைவெளிகள் இருப்பதை முதன் முதலாகச் சுட்டிக் காட்டியது அவர்தான் என்று தோன்றுகிறது, எல்லாப் பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கும்பொழுது “உழைப்பின் விலை”, அதாவது தொழிலாளர்களுக்குத் தரப்படுகின்ற கூலி மட்டும் கடைசியாகத்தான் அதிகரிக்கிறது என்பதை அவர் குறிப்பாகச் சுட்டிக் காட்டினார். காகிதப் பணம் பயன்படுத்தப்படும் பொழுது, பண வீக்கம் ஏற்படும் பொழுது நடைபெறுகின்ற சமூக பொருளாதார நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கு இந்த முக்கியமான விதிகள் உதவி செய்கின்றன.
எல்லா நாடுகளுக்கிடையேயும் தங்கமும் வெள்ளியும் இயற்கையான வகையில் பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றன ; கடைசியாகப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு நாட்டின் வர்த்தகத்திலும் ஏற்றுமதி, இறக்கும்தியின் சமஈடானது இயற்கையாகவே சமநிலையை நோக்கிச் செல்கிறது என்ற கருத்தை 18ம் நூற்றாண்டில் வேறு யாரையும் காட்டிலும் ஹியூம் வளர்த்துச் சென்றார். மூலச் சிறப்புடைய மொத்த மரபுக்குமே குறியடையாளமாக இருக்கின்ற ‘இயற்கைச் சமநிலை’ என்ற கருத்தை ஹியூம் தம்முடைய எழுத்துக்களில் வன்மையாக எடுத்துரைத்தார், வாணிப ஊக்கக் கொள்கையினர் விலையுயர்ந்த உலோகங்களைச் செயற்கையாகக் கவர்ந்திழுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையைக் கூறியதை அவர் விமரிசனம் செய்ததற்கு இது அடிப்படையாகும். வர்த்தக சம ஈடுகள் (அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் வழங்கீடுகளின் சரியீடுகள்) சம நிலையை நோக்கி இயற்கையாக முன்னேறுகின்றன என்ற கருதுகோளை ரிக்கார்டோ மேலும் வளர்த்துச் சென்றார். அவரைப் பற்றி எழுதவிருக்கும் அத்தியாயத்தில் இதைப் பற்றிக் கூறுவோம்.
ஹியூம் சரியான கருத்துக்களையே கூறினார்; எனினும் அவை பணம் பற்றிய அவரது பொருள் விளக்கத்தோடு இணைந்திருக்கின்றன; ஆனால் அது உழைப்பளவை மதிப்புத் தத்துவத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஹியூம் பிரெஞ்சுக் காரர்களைப் போல மதிப்புத் தத்துவம் இல்லாமலேயே சமாளித்துவிட்டார். அவருடைய தத்துவமான அறியொணாவாதம், ஐயுறவுக் கோட்பாட்டின் விளைவாக இது ஏற்பட்டிருக்கக் கூடும்.
அரசியல் பொருளாதாரத்தில், பிரதானமாக பணத்தின் அளவுத் தத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் என்ற முறையில் தான் அவர் சிறந்து விளங்குகிறார். ஒரே மாதிரியான கருத்துக்களை நோக்கி ஹியூமும் மற்றவர்களும் விலைப் புரட்சி என்று சொல்லப்படுகின்ற வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். 16 முதல் 18ம் நூற்றாண்டு வரையிலும் தங்கமும் வெள்ளியும் அதிகமான அளவில் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்கு வந்த பிறகு, அங்கே பண்ட விலைகளின் மட்டம் படிப்படியாக அதிகரித்தது. அங்கே விலைகள் சராசரியாக மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்தன என்று ஹியூம் மதிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து வெளிப்படையாகத் தோன்றிய ஒரு முடிவுக்கு ஹியூம் வந்தார், அதிகமான பணம் (உண்மையான உலோகப் பணம்!) இருந்ததனால் விலைகள் அதிகரித்தன என்பதே அந்த முடிவு.
ஆனால் தோற்றங்கள் உண்மையல்ல. ஏனென்றால் இந்த நிகழ்வுப் போக்கு முழுவதையுமே வேறு விதத்தில் விளக்கக்கூடும், அவ்வாறு விளக்குவதும் அவசியமே. இந்த விலையுயர்ந்த உலோகங்கள் அதிகமாக அகப்படுகின்ற இடங்களைக் கண்டு பிடித்ததன் விளைவாக இவற்றை வெட்டியெடுக்கும் உழைப்புச் செலவு குறைந்தது; அதன் காரணமாக அவற்றின் மதிப்பும் கீழே இறங்கியது. பண்டங்களோடு ஒப்பிடும் பொழுது பணத்தின் மதிப்பு குறைந்து விட்டபடியால், பண்டங்களின் விலைகள் அதிகரித்தன.
செலாவணி நிகழ்வின் போது பண்டங்களின் தொகுதி பணத்தின் தொகுதியை எதிரிடும் பொழுது பணத்தின் ”மதிப்பு” (அல்லது அதிக எளிமையாகச் சொல்வதென்றால் பண்ட விலைகள்) நிறுவப்படும்; செலாவணியிலிருக்கின்ற உண்மையான உலோகப் பணத்தின் அளவுக்கு இதில் சம்பந்தமில்லை என்று ஹியூம் கருதினார்.
உண்மையில் பணம், பண்டங்கள் ஆகிய இரண்டுமே, சமூகத்துக்கு அவசியமான உழைப்பின் செலவினால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகளோடு தான் செலாவணிக்குள் போகின்றன. ஆகவே பணப் பரிமாற்றத்தின் குறிப்பிட்ட வேகத்தில், நிர்ணயம் செய்யப்பட்ட அளவு பணம் தான் செலாவணியிலிருக்க முடியும். மிகையாக இருக்கும் பணம் அந்நிய நாடுகளைச் சென்றடையும் அல்லது பதுக்கி வைக்கப்படும்.
காகிதப் பணம் வேறு விஷயமாகும். அது ஒருபோதும் செலாவணியை விட்டுப்போகாது. காகிதப் பணத்தின் ஒவ்வொரு அலகின் வாங்கும் சக்தியும் (மற்ற காரணிகளோடு சேர்ந்து) உண்மையிலேயே அவற்றின் அளவைப் பொறுத்திருக்கிறது. செலாவணிக்கு அவசியமான உண்மையான உலோகப் பணத்தின் அளவைக் காட்டிலும் கூடுதலான காகிதப் பணம் வெளியிடப்படுமானால், அவை தம்முடைய மதிப்பை இழந்துவிடும். இது பண வீக்கம் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரியும். ஹியூம் தங்கத்தையும் வெள்ளியையும் ஆராய்கின்ற பொழுது (உண்மையில் வர்ணித்தது) காகிதப் பணச் செலாவணி நிகழ்வையே.
அரசியல் பொருளாதாரத்தில் முக்கியமான பாத்திரத்தை இன்னும் வகிக்கின்ற பிரச்சினைகளின் மீது கவனத்தைத் திருப்பியதே ஹியூமின் சேவையாகும். செலாவணிக்கு அவசியமான பணத்தின் அளவை நிர்ணயிப்பது எப்படி? பணத்தின் அளவு விலைகளை எப்படி பாதிக்கிறது? பணம் அதன் மதிப்பை இழக்கின்ற பொழுது விலையின் உருவாக்கத்தின் தனிவகையான கூறுகள் யாவை? இவையே அந்தப் பிரச்சினைகளாகும்.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983