Saturday, April 19, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுவடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !

வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளி மரணம் !

பாதுகாப்பு குறைபாட்டினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் 24 வயதான ஒப்பந்த தொழிலாளி ஜீவானந்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.

-

டசென்னை-எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான யாதாவர்சிங் இரண்டாம் நிலை சாம்பல் கழிவு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருடைய மரணம் பாதுகாப்பு குறைபாட்டினாலேயே நடந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் அதே பாதுகாப்பு குறைபாட்டினாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இறந்திருக்கிறார் மற்றொரு ஒப்பந்தத் தொழிலாளி 24 வயதான ஜீவானந்தம்.

கடந்த 22-ம் தேதி அனல் மின்நிலையம்-1  ஸ்விட்ச் யார்டில் பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது ரிட்டன் சப்ளை வந்ததால் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். அங்கிருந்த சக தொழிலாளிகள் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் தீவிர சிகச்சைப் பிரிவில் இருந்த அவர் 24.09.2019 அன்று மரணமடைந்து விட்டார். தொழிலாளர்கள் மரணமடைவது ஒரு தொடர்கதையாகி வருகிறது.

இது குறித்து சகதொழிலாளர்களிடம் தொலைபேசியில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது; “ஜீவானந்தம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார். அவருடைய வேலை சுத்தம்  (Cleaning)  செய்வது மட்டும்தான். ஆனால் அதிகாரிகள் ஸ்விட்ச் யார்டு பணியில் அனுபவம் இல்லாத தொழிலாளியான ஜீவாவை செய்யச் சொன்னதுதான் இந்த மரணத்துக்கு காரணம். அதிகாரிகளைப் பொருத்தவரை வேலை நடந்தால் போதும் என்றுதான் இருக்கிறார்கள். இங்கு பணி புரியும் பல ஒப்பந்த தொழிலாளர்களும் இப்படித்தான் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் கொடுப்பது இல்லை.

படிக்க:
பாஜக சின்மயானந்த் கைது : ஆனால் பாலியல் வல்லுறவு வழக்கு இல்லை !
♦ “உன் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை” – ஒரே வாரத்தில் 17 தொழிலாளர்கள் மரணம் !

கால்வாய் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலி பெறுகிறார்கள். ஆனால் நாங்கள் மாதம் ரூ.7000 பெற்று மாடாக உழைக்கிறோம். எங்களுக்கு என்று தனி அடையாள அட்டைக்கூட கொடுப்பது கிடையாது.  சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களுக்கு கொடுத்திருக்கும் பார்கோடு மாதிரி தருகிறார்கள். அதனை காட்டிவிட்டு செல்ல வேண்டும். அதேபோல பணி முடிந்து இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்லும்போது போலீசும் பிடிக்கிறது. வேலை செய்துவிட்டு வருகிறோம் என்றால் அடையாள அட்டை கேட்கிறார்கள். தொடர்ந்து இதுஒரு பிரச்சனையாகவே இருக்கிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள்மீது அக்கறை செலுத்த யாரும் இல்லை.

ஜீவானந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இது வரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. ஒப்பந்தம் எடுத்தவர்கள் கூட வரவில்லை. ஆனால் நியாயம் கேட்டு போராடிய 500-க்கும் மேற்பட்ட தொழிலாளிகளை போலிசு வந்து மிரட்டுகிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

வீட்டில் ஒரே பையனை இழந்த வேதனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருடைய தாயார் அடிக்கடி மயக்கமடைந்து விடுகிறார். “இருக்கின்ற ரெண்டு பொண்ணையும் எப்படி கரை சேர்ப்பேன்னு தெரியல.. அவன் இருக்க வரைக்கும் ஒரு வேளையாவது சோறு சாப்பிட்டோம். இனிமே என்ன பண்ணப் போறோம்னு தெரியல” என்று சொல்லி அழுகிறார். அதிகாரிகளிடம் வீட்டில் உள்ள ஒருவருக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டால் அதுவும் தர முடியாது என்று சொல்கிறார்கள். மாறாக, தற்போது ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் இரண்டு லட்சம் தருவதாகப் பேசி உள்ளார்கள்.

எங்கள் கோரிக்கை, இறந்துபோனவரின் வயதைக் கணக்கிட்டு அதற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும். அவருடையை வீட்டில் உள்ள ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.. இனி எந்த ஒரு தொழிலாளியும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்கிறார்கள் தொழிலாளர்கள்.

– வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க