‘பூலோக சொர்க்கமாம்’ அமெரிக்காவிலே ஹவுஸ்டன் மாநகரத்தில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொண்ட “ஹவ்டி மோடி” நிகழ்ச்சி பற்றி புகழாரம் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன இந்திய ஊடகங்களும், சங்கபரிவாரத்தினரும். மோடியை வாழ்த்தி வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

பல்வேறு மதங்கள், சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த இந்திய அமெரிக்கர்களுக்கான அமைப்புகள் ஒன்றிணைந்த, “நீதி மற்றும் பொறுப்பேற்புக்கான கூட்டணி” இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது.

“மனித உரிமைக்கான இந்துக்கள்” (Hindus for Human Rights – HHR) , இந்திய அமெரிக்க முசுலீம் கவுன்சில் (Indian Amedican Muslim Council – IAMC), இந்திய சிறுபான்மையினருக்கான அமைப்பு (Organisation for Minorities of India), உள்ளிட்ட அமைப்புகள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர். இந்த போராட்டம் இந்தியாவில் பாஜக மற்றும் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயகப்பூர்வமற்ற, மக்கள் விரோத மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்ச்சி நிரலைக் கண்டித்து நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டு மோடி மற்றும் டிரம்பின் அடாவடித்தனத்திற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். கும்பலாக அடித்துக் கொலை செய்தல், சட்டவிரோதக் கொலைகள், மதரீதியான துன்புறுத்தல், சாதிய ஒடுக்குமுறை, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக் கணக்கெடுப்பு மற்றும் காஷ்மீரில் சரத்து 370 நீக்கம் ஆகியவற்றை எதிர்த்து முழக்கங்களை எழுப்பி அணிதிரண்டிருந்தனர். அனைவரின் கைகளிலும் இந்த முழக்கங்களைப் பறைசாற்றும் பதாகைகள் இருந்தன.

இது தவிர சஞ்சய் பட் உள்ளிட்டு கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறும் முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன.

இது குறித்து “மனித உரிமைக்கான இந்துக்கள்” அமைப்பின் இணை நிறுவனர் சுனிதா விஸ்வநாதன் கூறுகையில் இந்திய அமைப்புகள் தவிர ஒடுக்கப்பட்டவர்களுக்கான பல்வேறு சர்வதேச அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். “ஜூவிஷ் வாய்ஸ்” (Jewish Voice), “பிளாக் லைவ்ஸ் மேட்டர்” (Black Lives Matter) உள்ளிட்ட அமைப்புகளும் இதில் கலந்து கொண்டன என்றார்.

படிக்க:
ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்
♦ ஐதராபாத் : இந்துத்துவப் பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அரங்கம் !

“இந்தியாவில் நிலைமைகள் மோசமாக இருக்கின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் அசாமில் முசுலீம்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை தடுப்பு முகாமில் அடைக்கும் வேலைகளைச் செய்து வருகிறது மோடி அரசு. அதற்காக தடுப்பு முகாம்களைக் கட்டிவருகிறது. முசுலீம்கள் மீதும் தலித்துகள் மீதும் இந்தியா முழுவதும் தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் இன்றளவும் இந்தியப்படைகளால் முற்றுகையிடப்பட்டு தொலைதொடர்பு தடைசெய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் மோடியோ இந்தியாவில் வளர்ச்சி குடிகொண்டிருப்பதாக கூசாமல் பொய் சொல்கிறார்” என்கிறார் சுனிதா விஸ்வநாதன்.

இந்தக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கும் 40 இலட்சம் சட்டப்பூர்வ குடியேறிகளுக்காக தாம் வேலை பார்க்க இருப்பதாகவும், மெக்சிகோவில் இருந்து வந்திருக்கும் சட்டவிரோத குடியேறிகளைப் புறந்தள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இனவெறியும், இடம்பெயர்பவர்களுக்கு எதிரான கருத்தும் கொண்ட அரசாங்கங்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வது நடக்கத்தான் செய்யும் என்கிறார் சுனிதா.

இந்தியாவில் நிலவும் நிலைமைகளை 1975-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட  அவசரநிலை காலகட்டத்தோடு ஒப்பிட்டு நினைவுகூர்கிறார் சுனிதா. அக்காலகட்டத்தைப் போன்றே தற்பொதும் காஷ்மீரில் தொடர்ச்சியான ஒடுக்குமுறை சுமார் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருவதாகக் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், அங்கிருக்கும் மக்கள் மருத்துவம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். அரசுப் படைகளின் பெல்லட் குண்டுதாக்குதல், படுகொலைகள் மற்றும் சித்திரவதை குறித்த செய்திகள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. மத வழிபாட்டிற்கான உரிமை கூட பல இடங்களில் முடக்கப்பட்டிருக்கிறது. அங்கு காஷ்மீரிகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்கு மோடி காஷ்மீரிகள் தங்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளை அள்ளித் தரவிருக்கும் உய்விப்பாளர்களை வரவேற்க வீதியில் பூக்களோடு காத்திருப்பதாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் காஷ்மீர் சுற்றுலா சொர்க்கமாக மாறும் என்றும் கூறிவருகிறார்.

இடம்பெயர்ந்து வந்த தாய்மார்களையும் குழந்தைகளையும் பிரித்ததைத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரும் சாதனையாகக் காட்டி வரும் டிரம்பைப் போல 70 லட்சம் குடிமக்களை முடக்கி வைத்திருக்கும் காஷ்மீரின் கொடுமையான நிலைமை மோடியின் உலகில் இயல்பு நிலைமையாகப் படுகிறது.

காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மோடி அரசை இரு கடினமான பாறைகளுக்கு இடையே சிக்கவைத்துள்ளது. அங்கு இயல்பு நிலைக்கு தகவல் தொடர்பையும் போக்குவரத்தையும் கொண்டுவந்தால், மீண்டும் காஷ்மீர் கொந்தளிக்கும். இதே நிலையை நீடித்தால், அதுவும் மக்களிடம் கூடுதலான கொந்தளிப்பை ஏற்படுத்தும். தற்போது என்ன செய்வது என்று தெரியாமல், காஷ்மீர் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் காஷ்மீரில் நடக்கும் நிலைமைகளை வெளியே தெரியவிடாமல் முடக்கியிருக்கிறது மோடி அரசு, என்கிறார் சுனிதா விஸ்வநாதன்.

இந்த நிலையை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தவே இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடியை “இந்தியாவின் தந்தை” என்று கொஞ்சுகிறார் டிரம்ப். டிரம்பை மீண்டும் அதிபராக வாழ்த்துகிறார் மோடி. “ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்” என்று புளகாங்கிதமடைகிறார். பாசிஸ்ட்டுகள் தங்களுக்கு இடையில் சொரிந்து கொள்ளுதலில்தான் எவ்வளவு சுகம் கண்டுகொள்கிறார்கள்?

ஹவுஸ்டன் மைதானத்திற்க் எதிரே குழுமி நிற்கும் போராட்டக்காரர்களின் ஒரு பகுதி

கும்பல் படுகொலைகளை நிறுத்து என முழக்கமிடும் போராட்டக்காரர்கள்

“உண்மையான இந்துக்கள் அடித்துக் கொல்ல மாட்டார்கள்” என்ற பதாகையுடன் ஒரு போராட்டக்காரர்.

முடக்கப்பட்ட காஷ்மீரின் நிலையை அம்பலப்படுத்தும் முழக்கங்களும் ஒலித்தன.

போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட சஞ்சீவ்பட்டை விடுவிக்கக் கோரி பதாகையுடன் ஒரு போராட்டக்காரர்.

இந்துக்களும் முசுலீம்களும் சகோதரர்கள், இந்துத்துவ ராஜியமே வெளியேறு என்ற பதாகைகளுடன் போராட்டக்காரர்கள்.

“ஹவுஸ்டன் நகரமே, நமக்கு ஒரு பிரச்சினை வந்திருக்கிறது. அது மோடி”

மாற்றுப் பாலினத்தவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டனர்.

“இந்தியாவே, காஷ்மீரில் இனப்படுகொலையை நிறுத்து”

“சுதந்திர காஷ்மீரின்” (Azad Kashmir) கொடிகளை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்ட காஷ்மீரிகள்

“மோடியே வெளியேறு” – தமிழகத்தில் மட்டுமல்ல – ஹவுஸ்டனிலும்.

“ஒரு பாசிஸ்டை விரும்பும் இன்னொரு பாசிஸ்டும் பாசிஸ்டே. – ஒரே பாசிச இறகைக் கொண்ட இரு பறவைகள் ஒன்றாக பாசிசத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்” என்று மோடி – டிரம்ப் நட்பின் பின்னணியை வார்த்தைகளில் செதுக்கியிருக்கும் போராட்டக்காரர்கள்.

“இந்து பாசிசத்தை நிறுத்து” – போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர்.

நாடு இனம் மொழி தாண்டி பாசிசத்திற்கு எதிராக பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்தனர்

ஹவுஸ்டனில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்க கறுப்பின மக்கள் பிரதிநிதி.


தமிழாக்கம் : நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ Indian-American Coalition Protests ‘Bigoted and Oppressive’ Modi, Trump in Houston
Why We, as Hindu Americans, Are Opposed to Modi’s Undeclared Emergency 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க