
உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 10-அ
“சரி, தோழர் சீனியர் லெப்டினன்ட்” என்று அவனை உற்சாகப்படுத்தினார் கப்பூஸ்தின். “இப்போது உட்காருங்கள். கலந்து ஆலோசிப்போம்” என்றார்.
“எதைப் பற்றி?”
“நாம் என்ன செய்வது என்பது பற்றி, வெளியே போவோமா? எனக்குப் புகை குடிக்க வேண்டும் போல இருக்கிறது, இங்கே குடிக்கக்கூடாது.”
மறைத்து மூடப்பட்டிருந்த விளக்குகளின் மங்கிய நீல வெளிச்சத்தில் அரையிருட்டாக இருந்த ஆளோடிக்கு வந்து ஜன்னல் அருகே நின்றார்கள் அவர்கள். கப்பூஸ்தின் சுங்கானை வாயில் வைத்து உறிஞ்சலானார். புகை இழுக்கும் போது சுங்கான் கனிகையில், அவரது சிந்தனை நிறைந்த அகன்ற முகம் அரையிருட்டிலிருந்து நொடிப்பொழுது வெளித் தெரிந்தது.
“உங்கள் குழு ஆசிரியருக்கு இன்று தண்டனை விதிக்கப் போகிறேன்” என்றார் அவர்.
“எதற்காக?”
“பள்ளித் தலைமை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் உங்களை விமானமோட்ட விட்டதற்காக … ஆமாம். என்னை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? உண்மையைச் சொன்னால் நான் இதுவரை உங்களுடன் அளவளாமல் இருந்ததற்காக என்னையே தண்டித்துக் கொள்ளவேண்டும். நேரமே கிடைக்கவில்லை, ஒழிவு இல்லை, உங்களோடு பேச வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்… நல்லது, அது கிடக்கட்டும். விஷயம் என்னவென்றால் விமானம் ஓட்டுவது உங்களுக்கு அவ்வளவு லேசான காரியம் அல்ல. ஆமாம்… அதனால் தான் உங்கள் ஆசிரியருக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்கிறேன்.”
அலெக்ஸேய் பேசாதிருந்தான். சுங்கானைப் புகைத்தவாறு தன்னருகே நிற்கும் இந்த ஆள் எப்படிபட்டவர்? இவருக்கு என்ன வேண்டும், என்பதற்காக இவர் வந்திருக்கிறார்? இவர் இல்லாமலே மனது புளித்துப் போய்த் தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறதே…….
அலெக்ஸேய்க்கு உள்ளூற ஆத்திரம் மண்டியிட்டுக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டான். அவன் துன்பத்தில் உழன்ற மாதங்கள் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்யாதிருக்கக் கற்பித்திருந்தன. தவிரவும், கமிஸார் வரபியோவை, அலெக்ஸேய் மனதுக்குள் எவரை உண்மை மனிதர் என்று அழைத்தானோ அந்தக் கமிஸாரை நினைவுபடுத்தும் இனந்தெரியாத ஏதோ ஒரு விஷயம் அசட்டுப்பிசட்டான இதே கப்பூஸ்தினிடம் இருந்தது. சுங்கானில் நெருப்பு பிரகாசமாகச் சுடர்விட்டு அணைந்தது. ஊடுருவி நோக்கும் அறிவார்ந்த விழிகள் கொண்ட, அகன்று பருத்த முகம் நீல மங்கலிலிருந்து வெளிப்பட்டுவிட்டு மறுபடி அதில் கரைந்தது.
“இதோ பாருங்கள் மெரேஸ்யெவ், நான் உங்களுக்குப் புகழுரை கூற விரும்பவில்லை. ஆனால் எப்படித்தான் சுற்றி வளைத்தாலும் முடிவில் கால்கள் இல்லாமல் சண்டை விமானம் ஓட்டும் ஒரே மனிதர் உலகில் நீங்கள் மட்டுமே. ஒரே மனிதர்!” சுங்கான் குழியில் துளைக்குள் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் பார்த்து விட்டுக் கவலையுடன் தலையை அசைத்தார் கப்பூஸ்தின். பின்பு பேச்சைத் தொடர்ந்தார்: “சண்டை விமானப் படைக்குத் திரும்புவதற்காக நீங்கள் செய்யும் பெருமுயற்சியைப் பற்றி இப்போது நான் பேசவில்லை. இது சந்தேகமின்றி அருஞ்செயல். ஆனால் இதில் தனிப்பட்டது எதுவும் இல்லை. இப்போது காலம் அத்தகையது – வெற்றியின் பொருட்டுத் தன்னால் முடிந்ததை எல்லாம் ஒவ்வொருவனும் செய்கிறான்…. அட இந்தப் பாழாய்ப் போகிற சுங்கானில் எது போய் அடைத்துக் கொண்டிருக்கிறது?”
அவர் மறுபடியும் சுங்கான் குழாயை நோண்டத் தலைப்பட்டார். இந்த வேலையில் அவர் ஒரேயடியாக ஆழ்ந்து விட்டார் போலத் தோன்றியது. அலெக்ஸேயோ, தெளிவற்ற முன்னுணர்வால் உந்தப்பட்டு அவர் என்ன சொல்லப் போகிறார் என்று இப்போது ஆவலே வடிவாய் எதிர்பார்த்தான்.
சுங்கானுடன் மல்லுக்கட்டுவதை நிறுத்தாமலே, தமது சொற்கள் எத்தகைய உளப்பதிவு ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய கவலை இன்றி, கப்பூஸ்தின் மேலே சொன்னார்:
“இங்கே விஷயம் உங்களை, சீனியர் லெப்டினன்ட் அலெக்ஸேய் மெரேஸ்யெவைப் பற்றியது அல்ல. மிகவும் உடல் நலம் வாய்ந்தவர்கள் மட்டுமே, அவர்களிலுங்கூட அதிகமாய்ப் போனால் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே அடைய முடியும் என்று உலகு எங்கும் இதுவரை எண்ணப்பட்டு வந்த சிறந்த தேர்ச்சியைக் கால்கள் இல்லாமலே நீங்கள் பெற்றுவிட்டீர்கள் என்பதுதான் விஷயம். நீங்கள் வெறும் பிரஜை மெரேஸ்யெவ் அல்ல, நீங்கள் மாபெரும் சோதனையாளர்… அப்படி வா வழிக்கு, கடைசியில் சுத்தமாகிவிட்டாயா? எதைப் போட்டு நான் இதை அடைத்துக்கொள்ளச் செய்யாதேனோ?… ஆக, விஷயம் இதுதான்: சாதாரண விமானி போன்று உங்களை நாங்கள் நடத்த முடியாது, அதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது. நீங்கள் மகத்தான சோதனை ஒன்றைத் திட்டமிட்டிருக்கிறீர்கள். முடிந்த வகையில் எல்லாம் உங்களுக்கு உதவ நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம். ஆனால் எந்த வகையில்? அது தான் கேள்வி. நீங்களே சொல்லுங்கள், உங்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?”
படிக்க:
♦ காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?
♦ இனி 5 ரூபாய் இரயில் பயணம் வாய்ப்பேயில்ல ராஜா : இரயில்வே தனியார்மயம்
கப்பூஸ்தின் மீண்டும் சுங்கானில் புகையிலையை நிரப்பி அழுத்திப் புகைக்கத் தொடங்கினார். சுங்கானில் செவ்வொளிர்வு கனிந்து படர்வதும் மங்கிப் போவதுமாக, பருத்த மூக்குள்ள அந்த அகன்ற முகத்தை அரையிருட்டிலிருந்து வெளிக் கொணர்வதும் மறுபடி அதிலேயே ஆழ்த்திவிடுவதுமாக இருந்தது.
மெரேஸ்யெவின் பறப்பு எண்ணிக்கையை அதிகமாக்கும் படி பள்ளித் தலைவரிடம் பேசுவதாகக் கப்பூஸ்தின் வாக்களித்தார். தனக்குரிய பயிற்சித் திட்டத்தைத் தானே அமைத்துக் கொள்ளும் படி அவனுக்கு யோசனைக் கூறினார்.
“ஆனால் இதற்கு ஏகப்பட்ட பெட்ரோல் வீணாகுமே?” என்று தயக்கப்பட்டான் அலெக்ஸேய். பாந்தமற்ற இந்தச் சிறு மனிதர் தனது சந்தேகங்களை எவ்வளவு சுளுவாக, காரியரீதியாகத் தீர்த்து வைத்துவிட்டார் என்று வியந்தான்.
“பெட்ரோல் முக்கியமான பொருள் தான் – அதிலும் முக்கியமாக இப்போது. ஆனால் பெட்ரோலைவிட மதிப்புயர்ந்த பொருள்கள் உள்ளனவே.” இவ்வாறு சொல்லிவிட்டுக் கப்பூஸ்தின் வளைந்த சுங்கானிலிருந்து வெதுவெதுப்பான சாம்பலைத் தமது பூட்சுக் குதியில் அடித்து வெளியேற்ற முற்பட்டார்.
மறுநாள் முதல் அலெக்ஸேய் தனியாகப் பயிற்சி செய்யலானான். நடக்கவும் ஓடவும் நடனமாடவும் கற்றுக் கொண்ட போது செய்தது போல வெறும் பிடிவாதத்துடன் மட்டும் அவன் பாடுபடவில்லை. உண்மையான அகத்தூண்டல் அவனை ஆட்கொண்டுவிட்டது. பறப்புத் தொழில் நுட்பத்தைப் பகுத்தாயவும், அதன் எல்லா அம்சங்களையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கவும், மிக மிகச் சிறு இயக்கங்கள், அசைவுகளாக அதைப் பாகுபடுத்தவும், ஒவ்வொரு அசைவையும் தனியாகப் பயின்று தேறவும் அவன் முயன்றான். பாலப் பருவத்தில் தானாகவே புரிந்துகொண்ட விஷயங்களை இப்போது ஆராய்ந்து கற்றான். ஆம், ஆராய்ந்து கற்றான். முன்பு அனுபவத்தாலும் பழக்கத்தாலும் தேர்ந்து கொண்டவற்றை இப்போது அறிவால் நுணுகித் தெரிந்து பயின்றான். விமானம் ஓட்டும் செயல்முறையை உறுப்பு அணைப்புள்ள அசைவுகளாகக் கூறுபடுத்தி, காலின் செயல் உணர்ச்சிகள் எல்லாவற்றையும் பாதங்களிலிருந்து கெண்டைக் கால்களுக்குக் கொண்டு வந்து, ஒவ்வோர் அசைவிலும் தனக்குத் தனிப்பட்ட தேர்ந்த திறமையை முயன்று ஏற்படுத்திக் கொண்டான்.
இது மிகவும் கடினமான, சள்ளைபிடித்த வேலையாக இருந்தது. அதன் விளைவுகள் தொடக்கத்தில் அனேகமாகத் தட்டுப்படவில்லை. எனினும் தடவைக்குத் தடவை விமானம் தன்னோடு மேலும் மேலும் இணைந்து ஒன்றாவது போலவும் தன் விருப்பத்திற்கு இணங்கச் செயல்படுவது போலவும் அலெக்ஸேய் உணர்ந்தான்.
“என்ன, எப்படியிருக்கிறது விஷயம், கலைவாணரே?” என்று அவனைத் தற்செயலாகச் சந்தித்தபோது வினவினார் கப்பூஸ்தின்.
மெரேஸ்யெவ் பெருவிரலை உயர்த்திக் காட்டினான், நன்றாக இருக்கிறது என்பதற்கு அறிகுறியாக. அவன் மிகைப்படுத்தவில்லை. விஷயம் நிரம்பச் சரளமாக இல்லவிடினும் நம்பிக்கையுடனும் திண்ணமாகவும் முன்னேறிக் கொண்டு தான் இருந்தது. எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவெனில், வெறிகொண்டு விரைந்தோடும் குதிரைமேல் ஒன்றும் ஏலாத, திராணியற்ற சவாரிக்காரன் அமர்ந்திருப்பது போன்று விமானத்தில் உணர்வதை இந்தப் பயிற்சிகளின் விளைவாக அலெக்ஸேய் விட்டுவிட்டான். தனது தேர்ந்த திறமையில் அவனுக்கு மீண்டும் நம்பிக்கை உண்டாயிற்று. விமானமோ, உயிர்ப் பிராணிபோல, தன்னை ஓட்டுபவன் நல்ல சவாரிக்காரன் என உணரும் குதிரை போல, வர வர அதிகக் கீழ்படிவு உள்ளதாயிற்று. தனது பறப்புப் பண்புகள் யாவற்றையும் விமானம் அலெக்ஸேய்க்குப் படிப்படியாக வெளிக்காட்டியது.
(தொடரும்)
முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை