கடந்த இரண்டு மாதங்களாக ஸ்ரீநகருக்கு வெளியே உள்ள பல்போராவைச் சேர்ந்த மராசியின் குடும்பம் தங்களுடைய 17 வயது மகன் ஒசாயிப் அல்டாஃபின் இறப்பு சான்றிதழுக்காக அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கும் மோடி அரசாங்கத்தின் முடிவுக்குப் பின் ஆகஸ்டு 5-ம் தேதி பாதுகாப்புப் படையினர் துரத்தியதில் ஒசாயிப் அல்டாஃப் ஜெலூம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். ஆனால், காஷ்மீர் போலீசு இப்படியொரு மரணம் நிகழவேயில்லை என சாதிக்கிறது.
அல்டஃபின் தாய் சலீமா, ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனை நிர்வாகம், தனது மகன் நீரில் மூழ்கியதற்கான முதல் தகவல் அறிக்கை பதிந்திருந்தால் மட்டுமே, இறப்பு சான்றிதழ் தருவோம் என சொன்னதாகச் சொல்கிறார்.

“கடந்த இரண்டு மாதங்களாக, நாங்கள் தொடர்ச்சியாக காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. காவலர்கள் ஒரு வழக்காக பதிவு செய்யக்கூட மறுக்கிறார்கள்” என்கிறார் சலீமா.
ஒவ்வொரு முறையும் வழக்கு பதிவு செய்ய காவல் நிலையத்தை அணுகும்போதெல்லாம், இந்த சம்பவம் எந்த காவல் நிலையத்தின் எல்லைக்குள் நடந்தது என்கிற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
“கமார்வாரி காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், அந்தப் பகுதி சாஃபா கடல் காவல் நிலையத்துக்குள் வருவதாக சொல்கிறார்கள். அவர்களோ இது கமார்வாரி காவல் நிலையத்துக்குள் வருவதாகச் சொல்கிறார்கள்” என விரக்தியுடன் சொல்கிற சலீமா, “நாங்கள் இரண்டு காவல் நிலையத்துக்கும் மாறிமாறி அலைந்து கொண்டிருக்கிறோம்” என்கிறார்.
மனித உரிமைகள் அமைப்பொன்று தொடுத்திருந்த வழக்கில் செப்டம்பர் 26-ம் தேதி ஜம்மு காஷ்மீர் அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் காஷ்மீரில் இளம் சிறார்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்திருந்தது. அதோடு அல்டாஃபின் மரணத்தையும் அந்த அறிக்கை புறக்கணித்திருந்தது.
படிக்க:
♦ ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பற்றாக்குறை | வழக்குகள் தேக்கம் !
♦ ஜம்மு காஷ்மீர் : இரும்புத்திரையை கிழிக்கும் இளைஞர் !
“ஒசாயிப் அல்டாஃப் : களத்திலிருந்து பெறப்பட்ட போலீசு அதிகாரிகளின் தகவலின்படி இந்த மரணம் குறித்த தகவல் அடிப்படையற்றது” என அந்த அறிக்கை கூறுகிறார்.
அரசாங்கம் தங்களுடைய மகனின் மரணத்தை மறுப்பதை அல்டாஃபின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “இப்படிப்பட்ட பொய்யை அரசாங்கம் எப்படி சொல்லலாம்? அவர்கள் என் மகன் உயிரோடு இருக்கிறான் என சொல்கிறார்களா? அது உண்மையெனில் அவர்கள் அவனை வெளியே கொண்டு வரட்டும்” என கூறுகிறார் சலீமா.

அல்டாஃபின் இறுதி ஊர்வலம் வீடியோவாக இணையத்தில் உள்ளது என்றும் அவருடைய மரணம் செய்தித்தாள்களில் பதிவாகியிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். அல்டாஃபின் மரணம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் ஆனபோதும், அவருடைய இழப்பிலிருந்து அந்தக் குடும்பத்தால் இன்னமும் மீள முடியவில்லை. அல்டாஃபின் பாட்டி, தனது மருமகள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு, சட்டென்று வெடித்து அழுகிறார்.
“என்னுடைய ஒசாயிப், ஒரு பூக்கும் மொட்டு. வெட்கமேயில்லாமல் அவனுடைய மரணத்தை மறுக்கிற அரசாங்கம், அப்படியொருவன் வாழ்ந்திருக்கவேயில்லை என்கிறதா? அவர் பிறக்கவேயில்லை என்கிறதா? அரசின் தலைமை பதவியில் இருக்கும் நபர்கள் இதயமே இல்லாதவர்களா?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார் 67 வயதான நூரா.
12-ம் வகுப்பு மாணவனான அல்டாஃப், கால்பந்து விளையாடுவதில் ஆர்வம் உள்ளவர் என்றும் ஆகஸ்டு 5-ம் தேதி அருகில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடப் போயிருந்தான் என்றும் கூறுகிறார் அவருடைய சகோதரன் சுகைல் அகமது.
“அதுதான் அவனை கடைசியாக பார்த்தது” என்கிறார் அகமது.
படிக்க:
♦ சினிமா மற்றும் அறிவுத்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு !
♦ மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் !
“மதியம் ஒரு மணிக்கு நான் அவனுக்கு சாப்பிட வரும்படி போனில் அழைத்தேன். சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்றான்” என்கிறார் சலீமா. ஆனால், அல்டாஃப் அதன்பின் வீடு திரும்பவில்லை.

அல்டாஃபையும் அவருடன் விளையாடிக் கொண்டிருந்தவர்களையும் பாதுகாப்புப் படையினர் ஜுலூம் ஆற்றின் பாலத்தின் அருகே துரத்திச் சென்றதாக அங்கே வசிப்பவர்கள் அல்டாஃப் குடும்பத்திடம் தெரிவித்துள்ளனர்.
“மற்ற சிறுவர்கள் நீந்திவிட்டனர். என் மகனுக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீரில் மூழ்கிவிட்டான்” என்கிறார் சலீமா. சடலமாக மீட்டபோதும், மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அல்டாஃபின் மரணம் ஹஃபிங்டன் போஸ்ட், தி வயர் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஊடகங்களில் செய்தியாக வந்தது. தி வயர் அல்டாஃபின் இறுதி ஊர்வலத்தை வீடியோ பதிவாகவும் வெளியிட்டிருக்கிறது. 370-வது பிரிவு நீக்கத்துக்குப் பின், காஷ்மீரில் நடந்த முதல் மரணம் அல்டாஃபினுடையது.
பால்போராவிலிருக்கும் வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஈத்காவில் உள்ள ‘தியாகிகளின் கல்லறை’யில் அல்டாஃபின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.
“தயவுசெய்து அந்த கல்லறைக்குச் சென்று பாருங்கள். என் மகன் அங்கே புதைப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்” என்கிற சலீமா, “கல்லறைகள் பொய் சொல்லாது” என்கிறார்.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக காஷ்மீர் மக்களை சிறைப்படுத்தி, சிறுவர்களையும்கூட கைது செய்து சித்ரவதை செய்துகொண்டிருக்கிறது இந்திய அரசாங்கம். பாதுகாப்புப் படையினரின் அட்டூழியங்கள் ஊடகங்களில் ஆதாரத்தோடு வெளியானாலும் அதை மறுக்கிறது அரசாங்கம். உச்சநீதிமன்றமும் அதை ஏற்கிறது. மறுக்கப்பட்ட நீதியை எங்கே தேடிப் பெறுவது என கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது காஷ்மீர்.
அனிதா
நன்றி : தி வயர்.