Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஉலகம்HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !

HSBC வங்கியில் 10,000 பேர் பணி நீக்கம் | நெருக்கடியில் முதலாளித்துவம் !

உலகு தழுவிய அளவில் வங்கித் துறை வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து. ஹெச்.எஸ்.பி.சி வங்கி ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

-

ஹெச்.எஸ்.பி.சி (HSBC) வங்கி தனது மொத்த ஊழியர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை (அதாவது 10,000 பணியிடங்கள்) பணி நீக்கம் செய்வதென முடிவு செய்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வங்கியின் இடைக்கால தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள நோயல் குவின், வங்கியின் செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்த நிலையில் இச்செய்தி வெளியாகி உள்ளது.

ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் தலைமைச் செயலாளராக இருந்த ஜோன் ஃபிலிண்டின் சமீபத்தில் திடீரென பதவி விலகிய நிலையில் தற்காலிகமாக அந்தப் பதவிக்கு நோயல் வந்தார். முந்தைய தலைமைச் செயல் அலுவலர் ஜோன் ஃபிலிண்ட்டின் பதவிக் காலத்திலேயே ஆட்குறைப்பு நடவடிக்கை சிறிய அளவில் துவங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

HSBC Bankஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய வங்கியின் உயரதிகாரி ஒருவர், ”எங்களுடைய செலவுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பது எங்களுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும். எங்கள் செலவுகளில் ஒரு பெரும் பகுதி ஊழியர்களுக்கே செல்கிறது. கடைசியாக அந்த கசப்பான முடிவை எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

பிற ஐரோப்பிய வங்கிகளுடன் ஒப்பிடும் போது ஹெச்.எஸ்.பி.சி ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது அரிதானது. இவ்வங்கியின் ஐரோப்பிய பிரிவுகள் கடும் நட்டத்தை சந்தித்து வந்த நிலையிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை சிறிய அளவிலேயே வைத்திருந்தார் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர். இதே காரணங்களுக்காகவே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என குறிப்பிடும் சந்தை வல்லுநர் மைக்கேல் ஹூவ்ஸன், தற்போதைய இடைக்கால தலைமைச் செயல் அலுவலருக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட எந்த தயக்கமும் இல்லை என்கிறார்.

படிக்க:
டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !
♦ 18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !

சமீபத்தில் டாயிட்ஸ்சே வங்கி 18,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்து அறிவித்தது. இது அவ்வங்கியின் மொத்த ஊழியர்களில் ஐந்தில் ஒரு பங்காகும். அதே போல், ஜெர்மனியின் இரண்டாவது பெரிய வங்கியான காமர்ஸ்பேங்க் 4300 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. இது அவ்வங்கியின் மொத்த ஊழியர்களில் பத்தில் ஒரு பங்காகும். அதே போல் காமர்ஸ்பேங்க் தனது 200 கிளைகளையும் மூடியது. அதே போல், பிரான்சின் ஜெனரல் சொசைட்டி வங்கி 1600 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இப்படி விசமாக பரவி வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த பார்க்லே வங்கி, தானும் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே 3000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

job-cutsஉலகு தழுவிய அளவில் வங்கித் துறை வீழ்ச்சியை சந்தித்து வருவதை அடுத்து ஜே.பி மார்கன் மற்றும் வெல்ஸ் பார்கோ வங்கிகள் 2019-ம் நிதியாண்டுக்கான தமது லாப இலக்கை குறைத்துள்ளன. நட்டத்தை சமாளிக்க தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த பன்னாட்டு வங்கிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு வங்கிகள் இந்தாண்டின் இறுதிக்குள் மொத்தம் சுமார் 60,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவிருப்பதாக பொருளாதார பத்திரிகைகள் எழுதுகின்றன.

சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதாரப் பெருமந்தத்திற்கு பிரெக்சிட், அமெரிக்க சீன வர்த்தகப் போர், மற்றும் நிதிமூலதனத்தின் தலைமையகமாக விளங்கி வரும் ஹாங்காங்கில் நிலவும் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவைகளே காரணம் என்கின்றனர் முதலளித்துவ அறிஞர்கள். ஆனால் சொல்லி வைத்தாற் போல் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகைப் பிடித்து உலுக்கும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தின் அடித்தளத்தையே அசைக்கும் விதமாக இந்த மந்த நிலை தோன்றுவதற்கு என்ன காரணம் என்பதை அவர்கள் விளக்குவதில்லை.

அதிலும், சென்ற 2008 – 2009ல் துவங்கிய பொருளாதார கட்டமைப்பு நெருக்கடியில் இருந்து மீளாத நிலையிலேயே அடுத்த பெருமந்தம் துவங்கி உள்ளது. கடந்த முறை பொருளாதார நெருக்கடியின் போது மக்களின் சேமிப்புகளைப் பறித்து வங்கிகளின் வாயில் போட்டன மேற்கத்திய நாடுகள். ஏற்கனவே மக்களின் சேமிப்புகள் துடைத்து எடுக்கப்பட்டு விட்ட நிலையில் இந்த முறை வங்கிகளைக் காப்பாற்ற என்ன செய்யப் போகின்றனர் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


சாக்கியன்

செய்தி ஆதாரம் :
HSBC plans to cut 10,000 more jobs worldwide, says report