ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தம் பெற பிரதமர் நரேந்திர மோடியையும், இந்த திட்டத்திற்கு புரவலரான ஸ்டேட் வங்கியின் தலைவரையும் தன் ’கையோடு’ கவுதம் அதானி அந்த நாட்டுக்கே அழைத்துச் சென்ற காட்சிகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அதெல்லாம் மோடியின் 1.0 ஆட்சிக் காலத்தில் நடந்த காவியங்கள். பிரதமரே கேட்டுக் கொண்டதால் அதானிக்கு நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தம் கிடைத்துவிட்டது. ஆனால், இன்றைய தேதி வரை உற்பத்தி துவங்கவில்லை. பிரச்சினைகளின் ஒரு நீண்ட வரிசை அதானியின் முன் அணிவகுத்து நிற்கின்றன.

முதலில், திட்டம் கையெழுத்தான போது அதானி குழுமம் சுமார் 16 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. கவுதம் அண்ணாச்சியின் சட்டைப் பை நிரந்தர ஓட்டை என்பதால் சுமார் 30 சர்வதேச வங்கிகளின் மூலம் இதற்கான நிதி திரட்ட திட்டமிட்டது அதானி குழுமம். எனினும், அதானி குழுமத்தின் மீதுள்ள கடன்கள் மற்றும் அதன் பூர்வீகம் உள்ளிட்ட யோக்கியதைகளை நன்கு தெரிந்து வைத்திருந்த வங்கிகள் நிதியளிக்க மறுத்துவிட்டன. இறுதியில் இந்திய வங்கிகள் மட்டுமே கைகொடுக்க முன் வந்த நிலையில் முதலீட்டை 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலராக குறைத்துக் கொண்டார் கவுதம் அதானி.
அடுத்ததாக, இந்த சுரங்கத்தை நடத்துவதால் எந்த லாபமும் கிடையாது என்பதை மார்கன் ஸ்டேன்லி, யு.பி.எஸ் போன்ற நிதிமூலதன நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒருவேளை சுரங்கம் செயல்பாட்டுக்கு வந்தால், ஒரு டன் நிலக்கரியின் விலை 110 டாலர்களாக இருந்தால் மட்டுமே ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்கிறது யு.பி.எஸ். ஆனால், 2012-ம் ஆண்டு ஒரு டன் நிலக்கரியின் விலை 140 டாலரில் இருந்து 2015-ல் 60 டாலராக வீழ்ந்து இப்போது சுமார் 88 டாலரில் நிற்கிறது. புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் மாற்று மின் உற்பத்தி திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதால் நிலக்கரியின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதன் விளைவாக சந்தையின் தேவைக்கும் அதிகமான நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் சர்வதேச சந்தையில் அதன் விலை குறைந்து வருகிறது.
படிக்க :
♦ தாஜ் கடற்கரை விடுதியில் குப்பை பொறுக்கிய மோடி !
♦ டிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது ஒன்று தான். அதாவது தனது மின் உற்பத்தி நிலையத்திற்கே அந்த நிலக்கரியைப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக விலையில் விற்பதன் மூலம் மட்டுமே லாபமீட்ட முடியும். எப்படியும் மோடி அதிகாரத்தில் இருப்பதால் இதற்கான சாத்தியக் கூறுகளை மறுத்து விட முடியாது.

இவையனைத்தும் நடக்க வேண்டுமானால் ஆஸ்திரேலிய சுரங்கத்தில் உற்பத்தி நடக்க வேண்டும். ஆனால், குவின்ஸ்லாந்தைச் சேர்ந்த பழங்குடிகள் மற்றும் ஆஸ்திரேலியாவெங்கும் உள்ள சூழலியல் ஆர்வலர்கள் அதானியின் சுரங்கத்திற்கு எதிராக போர்கோலம் பூண்டுள்ளனர். சூழலியல் செயல்பாட்டாளர்கள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை வெல்வதற்கு நிலக்கரிச் சுரங்கம் சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதை நிரூபித்தாக வேண்டும். இந்தியா என்றால் உச்சநீதிமன்றமே, “நிலக்கரியை எரிப்பதால் வரும் புகையும் யாகத்தில் இருந்து வரும் புகையும் ஒன்றுதான். இதை எதிர்ப்பது மதச் சுதந்திரத்துக்கே விரோதமானது, எனவே இது தேச விரோதமானது” எனத் தீர்ப்பளித்திருக்கும். ஆனால், வழக்குகள் நடப்பது ஆஸ்திரேலியாவில் என்பதால், இதையெல்லாம் அறிவியல்ரீதியில் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதானியின் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத்தால் ஏற்படக்கூடிய சூழலியல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது அந்நாட்டின் தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கழகமான காமென்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIRO: Commonwealth Scientific and Industrial Research Organization). சமீபத்தில் அதானி குழுமத்தின் நிலக்கரிச் சுரங்கத்தின் சூழலியல் பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மேற்படி ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள் குறித்த விவரங்களை கேட்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எழுதிய கடித விவரங்களை ”விவரங்களுக்கான சுதந்திரம்” (Freedom of information) எனும் தன்னார்வ அமைப்பு வெளியிட்டது.

இந்தியாவில் இது போன்ற செயல்பாடுகள் (அதுவும் குஜராத்தி தொழிலதிபர்களால் மேற்கொள்ளப்படும் போது) சகஜமானதுதான் என்றாலும் ஆஸ்திரேலியாவில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டன. இதற்கு அதானி குழுமத்தின் சார்பில் பதிலளித்த ஹமீஷ் மான்ஸி, ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சூழலியல் செயல்பாட்டாளர்களின் கருத்துக்களுக்கு ஆட்பட்டுள்ளனரா என்பதை அறிந்து கொள்வதற்காகவே விவரங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட்டுகளின் நோக்கம் லாபமீட்டுவது, அதற்காக எந்த எல்லைகளுக்கும் செல்வது என்றால், அதானி குழுமத்தின் வரலாறு கார்ப்பரேட் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக ஜொலிக்கும். அறிவியல் முடிவுகள் தமக்கு சாதகமாக வரும் போது அதைக் கொண்டாடுவது, பாதகமாக வரும் போது அதை “செயல்பாட்டளர்கள்” மேல் ஏற்றி காரணம் கற்பிப்பது என்பது கார்ப்பரேட்டுகளின் கைவந்த கலை. அதானி குழுமத்தைப் பொறுத்தவரை, வாய்ப்பிருந்தால் விஞ்ஞானிகளை விலைக்கு வாங்குவது என்பது அதன் நோக்கமாக இருக்கும் என்பதை தனியே விளக்கத் தேவையில்லை.
மேலும் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் சூழலியல் மற்றும் எரிசக்தித் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதிய அதானி குழுமம், அதில் அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வு முடிவுகளை பொதுவெளியில் வைப்பதையும், ஊடகத்தில் விவாதத்திற்கு விடுவதையும் தடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது என்பது மட்டுமல்ல, விஞ்ஞானிகளின் விவரங்களை கேட்டதையும் ஆதரித்துள்ளது. குவின்ஸ்லாந்து கவர்னரே அவ்வாறு கேட்பதில் எந்த தவறும் இல்லை என பத்திரிகைகளில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெருமை ”மென்சக்தி” என்றும், இதுவே பாரத கலாச்சாரம் உலகிற்கு வழங்கும் கொடை எனவும் சங்கிகள் அளந்து விடுவது வழக்கம். ஆனால், எதார்த்தத்தில் இந்திய பாணி வாழைப்பழ ஜனநாயகத்தைத் தான் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம் என்பதே அதானியின் ஆஸ்திரேலிய சாகசங்கள் உணர்த்தும் உண்மைகள்.
சாக்கியன்