பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ள அபிஜித் பானர்ஜி, மோடி அரசாங்கத்தின் பொருளாதாரச் சீரழிவுகளை தொடக்கம் முதலே விமர்சித்து வந்துள்ளார்.
2019-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் விருது அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுபஃல்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இணையரான அபிஜித் பானர்ஜியும் எஸ்தர் டுபஃல்லோவும் நரேந்திர மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து விமர்சித்து வந்துள்ளனர்.

நோபல் விருது அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புகூட அபிஜித் பானர்ஜி, தேசிய ஜனநாயக கூட்டணி – 2 மையப்படுத்தப்பட்ட முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்ததோடு, தொழில் வல்லநர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளில் பிரதமர் அலுவலகம் குறைவாக தலையிட வேண்டும் என்றும் பொதுவாக இந்திய அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் பேசியிருந்தார்.
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, தொலைக்காட்சிகளில் பேசிய பானர்ஜி, இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை தள்ளாட்டத்தில் உள்ளது எனவும் நிலையான வளர்ச்சி என்பதற்கான உறுதி தற்போது முற்றிலுமாக இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மோடியின் மிக மோசமான பொருளாதார பேரழிவுத் திட்டமான பணமதிப்பழிப்பை இந்த இணையர் கடுமையாக அப்போது விமர்சித்திருந்தனர்.
அரசாங்கம் செய்த விந்தையான செயல்களில் பணமதிப்பழிப்பும் ஒன்றாகும் எனக் கூறியிருந்தார். “தீவிரமாகக் கருதத்தக்க எந்தப் பொருளாதாரமும் இதில் இல்லை. இது மிகவும் நல்லது செய்யும் என்பதற்கு எந்தவித காரணமும் இல்லை” என தி வயர் இணைய ஊடகத்திடம் பேசியபோது அவர் தெரிவித்திருந்தார்.
“அமலாக்கப்படுவதற்கு முன் குறைந்த அளவே கவனம் செலுத்தப்பட்டதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது” என பணத்தாள் தடை குறித்து எஸ்தர் விமர்சித்திருந்தார்.
2016-ம் ஆண்டு டிசம்பரில் முறைசாரா பொருளாதாரத்திற்கு பணமதிப்பழிப்பு மூலம் ஏற்பட்ட சேதத்தை இந்தியா ஒருபோதும் அறியாது எனவும் மோடி அரசாங்கம் இதை தனது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் எனவும் அவர் கூறியிருந்தார்.
2018-ம் ஆண்டின் இறுதியில் பானர்ஜி உள்பட 13 பொருளாதார நிபுணர்கள் இந்திய பொருளாதாரத்துக்கான கொள்கை அறிக்கையை எழுதி வெளியிட்டனர். இதில் அரசாங்கம் தனது செலவினங்களில் சமூக நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் எனவும் தெளிவான மற்றும் வெளிப்படையான முதலீட்டு இடைவெளிகளை நிரப்ப வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிகச் சமீபமாக ‘ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் மக்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தம் வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
மார்ச் 2019-ம் ஆண்டு இந்திய புள்ளியியல் அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த மோடி அரசாங்கத்தைக் கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 108 கல்வியாளர்களுடன் இந்த இணையரும் கையெழுத்திட்டிருந்தனர்.
படிக்க:
♦ மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்
♦ கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலர் மோடியின் முதல் ஆட்சிகாலத்தின் பொருளாதாரச் சீரழிவுகளை விமர்சிக்கத் தவறியதில்லை. முழுக்க முழுக்க முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களான அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டஃபல்லோ இருவருமே மோடியின் பணமதிப்பழிப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் மோசமானது என விமர்சிப்பதில் இருந்து, நாம் எப்படிப்பட்டவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
கலைமதி
நன்றி : தி வயர்.