Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாPMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்

PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்

வங்கி மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட்களும், தரகு முதலாளிகளும் அவர்களுக்குத் துணைபுரிந்த பிற அரசியல்வாதிகளும் சுருட்டிய பணத்தோடு கொண்டாட மக்கள் மரணிக்கின்றனர்.

-

ரூ. 4355 கோடி முறைகேட்டை செய்த பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில், தாங்கள் டிபாசிட் செய்த பணம் கிடைக்காத சூழலில் இரு வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளனர். ஒருவர் மாரடைப்பு வந்தும் இன்னொருவர் தற்கொலை செய்துகொண்டும் இறந்துள்ளனர்.

சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்த மக்களைப் போல, நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்த மக்கள் வங்கியின் முன் பணத்தைக் கேட்டுப் போராடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் நிறுவனமான எச்.டி.ஐ.எல், பாஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் 70 சதவீத கடனான ரூ. 9000 ஆயிரம் கோடியை பெற்றிருந்தது. இந்தக் கடன் வாராக்கடன் ஆன நிலையில், இதை ரிசர்வ் வங்கிக்கு அளித்த அறிக்கையில் மறைத்திருந்தது வங்கி நிர்வாகம். இந்த முறைகேடு தெரியவந்து தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைகேடு காரணமாக ரிசர்வ் வங்கி டெபாசிட் பணத்தை எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. ஆறு மாதங்களுக்குள் ரூ. 40,000 மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதித்தது. இது மக்களிடையே மேலும் பீதியை உண்டாக்கியது.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ. 90 லட்சம் டெபாசிட் செய்திருந்த சஞ்சய் குலாடி (51) நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மாரடைப்பு வந்து இறந்தார்.  மருத்துவரான நிவேதா பிஜிலானி (39) ரூ. 1 கோடிக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருந்த நிலையில், பணத்தை எடுக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

திவாலானதன் காரணமாக மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தனது பணியை இழந்தவர் சஞ்சய் குலாடி. இவருக்கு சிறப்பு குறைபாடு உள்ள குழந்தை உள்ளது. குழந்தையின் மருத்துவ செலவுக்கு ரூ. 25,000 மாதம் தேவையாக இருப்பதாகவும் பள்ளிக் கட்டணத்தைக் கட்டக்கூட அவர்கள் சிரமப்பட்டதாகவும் அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது 80 வயதான தந்தையுடன் சஞ்சய் காலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். பிற்பகல் உணவு உண்ட நிலையில், தடுமாறி விழுந்திருந்த அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளது அவருடைய குடும்பம். ஆனால், அழைத்து வரப்பட்டபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படிக்க :
♦ கருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் !
♦ பார்ப்பனர்களின் முகத்தில் கரியைப் பூசும் பிரம்மா !

“வங்கி முறைகேடு தெரியவந்த பிறகு, அவர் கடந்த சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்தார். எங்களுடைய பணம் எதுவும் திரும்பிவராது என அவர் பயத்துடன் இருந்தார்” என்கிறார் குலாடியின் மனைவி பிந்து குலாடி.

“ஓய்வுபெற்ற மக்கள் நிறைய பேர் தங்களுடைய பணத்தை வங்கியில் வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எப்படி தங்களுடைய குடும்பத்தை நடத்துவார்கள்? பி.எம்.சி வங்கியில் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை டெபாசிட் செய்துள்ளனர். என்னுடைய ஒரு நண்பருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அவர் என்ன செய்வார்?” என்கிறார் குலாடியின் வீட்டுக்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மூத்த குடிமகன் ஒருவர்.

மக்களின் உழைப்பை, வாழ்நாள் சேமிப்பை தனியார் நிறுவனங்களுக்கு அளித்து வாராக்கடனாகக் காட்டும் வங்கிகளின் மோசடி தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. வங்கி மோசடியாளர்களின் கூட்டாளியான பாஜக அரசாங்கம் இதற்கான தீர்வினை காணும் என ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.


அனிதா
நன்றி: தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க