அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 39

பொருளியலாளர் பிராங்க்ளின் – பாகம் 2

அ.அனிக்கின்

பிராங்க்ளின் தன்னுடைய நூல்கள் பலவற்றிலும் “பொருளாதார உபரியை, ஈட்டப்பெறாத வருமானத்தை -அடிப்படையில் உபரி மதிப்பை- பல்வேறு கோணங்களிலிருந்து அணுகினார். அவர் மனிதாபிமானி, பகுத்தறிவுவாதி என்பதால் பலர் வியர்வை சிந்திப் பாடுபடுகின்ற உழைப்பின் பலன்களைச் சிலர் சோம்பேறித்தனமாக வீணாக்குவதென்றால் அந்த சமூக அமைப்பு எவ்வளவு “முட்டாள் தனமானது” என்பதை உணர்ந்தார். சோர்வில்லாத உழைப்பாளியான பிராங்க்ளின் இதை மனிதகுல நீதியை அவமதிப்பதாகக் கருதினார். அவர் பின்வருமாறு எழுதினார்:

”இவ்வளவு அதிகமான அளவில் ஏழ்மையும் துன்பமும் ஏற்படக் காரணமென்ன? வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களையோ அல்லது வசதிப் பொருள்களையோ உற்பத்தி செய்யாத வேலைகளில் (1) ஆண்களும் பெண்களும் ஈடுபடுத்தப்படுவது தான் இதற்குக் காரணம்; அவர்களும், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களும் சேர்ந்து அதிகமாக உழைப்பவர்கள் உற்பத்தி செய்த அவசியப் பொருள்களைச் சாப்பிட்டு விடுகிறார்கள்… ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் ஏதாவதொரு பயனுள்ள உழைப்பில் ஈடுபட்டால் அந்த உழைப்பு வாழ்க்கைக்குத் தேவையான அவசியப் பொருள்களையும் வசதிப் பொருள்களையும் உற்பத்தி செய்வதற்குப் போதுமானது; ஏழ்மை, துன்பம் ஆகியவற்றை உலகத்திலிருந்தே விரட்டி விடலாம்; இருபத்து நான்கு மணி நேரத்தில் எஞ்சியிருக்கும் காலம் ஓய்வும் மகிழ்ச்சியுமாக இருக்கும் என்று ஒரு புள்ளியியலாளர் கணக்கிட்டிருக்கிறார்”. (2) 

இந்தப் பொற்காலத்தை எப்படி ஏற்படுத்துவதென்பது பிராங்க்ளினுக்குத் தெரிந்திருக்கவில்லை. அது இயற்கையே. அவருடைய உன்னதமான கருத்துக்கள் ஒரு பக்கத்தில் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ள கற்பனை உலகங்களை நினைவுபடுத்துகின்றன; மறுபக்கத்தில் பிறரைச் சுரண்டி வாழ்வதையும் பயனில்லாத உழைப்பையும் பற்றி ஆடம் ஸ்மித்தும் அவரைப் பின்பற்றியவர்களும் செய்த நிதானமான விமரிசனத்தை நினைவு படுத்துகின்றன.

slavery in america political economyபிராங்க்ளினுக்கு ஏற்பட்ட ஆத்திரம் நிச்சயமாக முதலாளிகளைக் குறியாகக் கொண்டிருக்கவில்லை. அவர் முதலாளித்துவ உறவுகளின் முழுவளர்ச்சி இன்னும் ஏற்படாத அந்தக் காலத்தின் குழந்தை. அவர் சுரண்டல்காரர்களையும் பிறரை அடித்துப் பிழைப்பவர்களையும் தாக்கி எழுதினாலும் மூலதனத்தின் மீது கிடைக்கின்ற வட்டியை மிகவும் நியாயமான வருமானமாக, சிக்கனத்துக்குத் தரப்படுகின்ற வெகுமதியாகக் கருதினார். அவர் நிலவாரத்தையும் அதே மாதிரியாகவே கருதினார். நிலத்திலிருந்து கிடைக்கும் வாரத்துக்கும் மூலதனத்திலிருந்து வரும் வட்டிக்கும் இடையே அளவுரீதியான இடை இணைப்பை நிறுவுவதற்கு முயற்சித்தார். ”நியாயமான” வட்டி விகிதம் ஒன்று இருப்பதாக அவர் அனுமானித்துக் கொண்டார். இந்த நியாயமான அல்லது “இயற்கையான” வட்டி விகிதம் வருடத்துக்கு 4 சதவிகிதம் என்று அவர் மதிப்பிட்டார். இந்த வட்டி விகிதம் கடன் வாங்கியவர்கள், கடன் கொடுத்தவர்கள் ஆகியோருடைய நலன்களுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தி வர்க்க அமைதியை ஊக்குவிப்பதாக அவர் கருதினார்.

படிக்க:
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை
♦ உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !

முதலாளி தொழிலாளியின் உழைப்பை விலைக்கு வாங்கும் பொழுது அவனைச் சுரண்டுவதாக பிராங்க்ளின் நிச்சயமாகக் கருதவில்லை. அவர்களுக்கிடையே உள்ள சமூக முரண்பாட்டை அவர் உணரவில்லை; ஏனென்றால் அவர் எதிர்காலத் தொழிலாளியை தந்தைவழிச் சமூகத்தின் விவசாயத் தொழிலாளியாக அல்லது பயிற்சியாளராக மட்டுமே பார்த்தார், அந்தத் தொழிலாளிக்குப் பக்கத்திலேயே அந்தப் பண்ணை அல்லது பட்டறையின் உடைமையாளரும் வியர்வை சிந்திப் பாடுபடுவது போலவும் கற்பனை செய்தார்.

அவருடைய வாழ்நாளில் “மின்னலை அடக்கியவர்”, புரட்சி செய்த குடியேற்றங்களின் பிரதிநிதி என்ற வகையில் மட்டும் பிராங்க்ளின் உலகப் புகழ் அடையவில்லை; ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கம் என்ற வெளியீட்டின் ஆசிரியராகவும் அவர் அதிகமான புகழைப் பெற்றிருந்தார். 1733-ம் வருடம் முதல் 1757 வரை அவர் ஃபிலடெல்ஃபியாவில் ரிச்சர்டு ஸான்டர்ஸ் என்ற புனை பெயரில் வருடப் பஞ்சாங்கத்தை வெளியிட்டு வந்தார். அதில் வானஇயல் மற்றும் இதர தேவையான விவரங்களோடு பல விதமான மூதுரைகளும் குட்டிக்கதைகளும் இருந்தன. இவற்றில் பல வற்றை பிராங்க்ளினே எழுதியிருந்தார், மற்றவைகளை நாட்டுப் பாடல்கள், இன்னும் மற்றவைகளிலிருந்தும் எடுத்துப் பயன்படுத்தியிருந்தார்.

1757-ம் வருடத்தில் வெளிவந்த பஞ்சாங்கத்தின் கடைசிப் பதிப்பில் அவர் ஒரு முன்னுரை எழுதியிருந்தார். அதில் சுருக்கமான வடிவத்தில் “ஏழை ரிச்சர்டின்” மூதுரைகள் இடம் பெற்றிருந்தன. செல்வத்தை அடைவது எப்படி என்பதைப் பற்றி தந்தை ஆபிரகாமின் சொற்பொழிவு என்ற தலைப்புக் கொண்ட இந்தச் சிறு நூல் இலக்கியத்தில் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை முடிவு செய்வது கடினமே. இந்த நூல் 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அதிகமாக விரும்பிப் படிக்கப்பட்டது ; ருஷ்ய மொழி உள்பட பல அந்நிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

Benjamin-Franklin-Poor-Richard-Almanac“ஏழை ரிச்சர்டின்” மூதுரைகள் என்பவை வாழ்க்கையில் முன்னேற விரும்புகின்ற ஒரு ஏழையின் செறிவு மிக்க அறிவுத் திரட்டாகும். உழைப்பு, சிக்கனம், விவேகம் வளத்தையும் வெற்றியையும் ஏற்படுத்துகின்ற மூன்று பெரும் உறுதிகள் இவை. “தன்னைக் காத்துக் கொள்பவர்களைக் கடவுள் காத்தருள்வார்”, “கைகளில் உறை மாட்டிக் கொண்ட பூனையால் எலியைப் பிடிக்க முடியாது”,(3)  “பணம் சேர்க்க வேண்டுமென்றால் சம்பாதிப்பதைப் போலவே சிக்கனத்தையும் பின்பற்று”, ”சிறு துளி பெரு வெள்ளம்”.

இங்கே சில உதாரணங்களை மட்டுமே கொடுத்திருக்கிறோம். இதைக் காட்டிலும் அசாதாரணமான வடிவத்தில் ஒரு பொருளாதாரப் புத்தகத்தைப் பார்ப்பது கடினம். ஆனால் இது உண்மையில் ஒரு பொருளாதாரக் கட்டுரையே. முதலாளிகள் ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் உருப்பெற ஆரம்பித்த யுகத்தின் அரசியல் பொருளாதாரத்தின் எளிமையான மூதுரைகள் நாட்டுக் கதை, அன்றாட அனுபவச் செல்வம் ஆகியவற்றோடு கலந்து வழங்கப்படுகின்றன. இத்தகைய மூதுரைகளைப் பற்றி மார்க்ஸ் பின் வருமாறு எழுதினார்: “திரட்டு! திரட்டு! இங்கே நாம் மோசஸையும் தீர்க்க தரிசிகளையும் காண்கிறோம். ”சேமிப்பு திரட்டுகின்ற பொருளை உழைப்பு படைக்கின்றது” எனவே சேமிப்புச் செய், சேமிப்புச் செய், அதாவது உபரிப் பொருள் அல்லது உபரி மதிப்பில் சாத்தியமான அளவுக்கு அதிகப் பகுதியை மீண்டும் மூலதனமாக மாற்று!” (4)

பிராங்க்ளின் மூலதனத் திரட்டலின் முக்கியத்துவத்தைப் பற்றி ஓரளவுக்குக் கறாரான வடிவத்தில் தம்முடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் பிற்காலத்தைச் சேர்ந்த கட்டுரைகளில் அவர் அநேகமாக அவருடைய உள்ளார்ந்த பரிசுத்த வாதத்தை விட்டு விலகி மூலதனத் திரட்டலின் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது வளமான வசதிப் பொருள்களும் தார்மிக அடிப்படையில் நியாயமானவையே என்று எழுதினார்.

படிக்க:
குழந்தைகளுக்கு சுமை தெரியாமல் கணிதம் கற்றுத்தர இயலுமா ?
♦ அறிவியலின் கதியும் அறிவியலாளனின் நிலையும்

ஏனென்றால், வளமான வசதிப் பொருள்களை அடைய வேண்டும் என்ற ஆசையும் – நம்பிக்கையும் உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் மாபெரும் தூண்டு தலாகப் பயன்படும் என்பது அவருடைய கருத்து. வளமான வசதிப் பொருள்களின் “பயனைப் பற்றி” பிராங்க்ளின் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில மான்டெவிலை நினைவு படுத்துகின்றன. – பிராங்க்ளின் தன்னுடைய வாழ் நாள் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றியே சிந்தித்தார். அவர் யதார்த்தவாதியாகவும் பயனீட்டுவாதத்தில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தபடியால் அந்தப் பிரச்சினைகளை ஸ்தூலமான நிலைக்குத் தகுந்தாற் போலவும், அந்தக் குறிப்பிட்ட சமயத்தின் அரசியல் தேவைகளை ஒட்டியும் கூட வெவ்வேறு வழிகளில் அடிக்கடி தீர்த்துக் கொண்டார், அவருக்கு அடிப்படையாக இருந்த முதலாளித்துவ ஜனநாயகக் கோட்பாடுகள் மட்டுமே மாறாதபடி இருந்தன.

1760-ம் வருடத்தில் அவர் வெளியிட்ட பிரசுரத்தில், அமெரிக்கக் குடியேற்றங்களில் பட்டறைகளின் வளர்ச்சி அவசியமல்ல, அவை சமூக அடிப்படையில் ஆபத்தை உண்டாக்கக் கூடியவை என்றும் குறிப்பாக அவர் எழுதினார். விவசாயம் மட்டுமே உண்மையிலேயே மேன்மையான தொழில் என்றும் அமெரிக்காவில் அதன் வளர்ச்சிக்கு முடிவில்லாத வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் எழுதினார். அவர் ஐரோப்பாவிலிருந்த பொழுது தெரிந்து கொண்ட பிஸியோகிராட்டுகளின் கருத்துக்களின் தாக்கமே இதற்குக் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்து நியாயமானது அல்ல என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அதே சமயத்தில் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருப்பது போல இந்தப் பிரசுரத்தில் பிராங்க்ளின் தந்திரமாக எழுதியிருந்தார்; ஆங்கில அரசாங்கத்தின் அச்சங்களைப் போக்கி, பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து வெற்றி கொள்ளப்பட்டிருந்த கனடாவை அமெரிக்க மாநிலங்களோடு சேர்க்குமாறு ஊக்கப்படுத்துவது அவருடைய நோக்கமாகும்.(5)

Benjamin Franklinபிராங்க்ளினிடம் வாணிப ஊக்கக் கொள்கையினரின் கருத்துக்கள் சிறிதும் இல்லாதிருந்தன என்று சொல்ல முடியாது. இது தர்க்கரீதியாக இயற்கையானதே. அவருடைய மற்ற புத்தகங்களில், அமெரிக்காவில் தொழில் வளத்தைப் பெருக்க வேண்டியது அவசியமென்று – முன்பு தெரிவித்த கருத்துக்கும் இதற்குமுள்ள முரண்பாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் – வாதாடுகிறார்; அதற்குரிய வழிகள் என்று வாணிப ஊக்கக் கொள்கையினரின் மருந்துப் பட்டியலைத் தருகிறார். இறக்குமதி வரிகள், பொருளாதாரத்தில் அதிகமான பணம் இருக்க வேண்டும், அரசாங்கம் தீவிரமாக ஆதரவு கொடுக்க வேண்டும், புதிய குடியேற்றங்களை ஏற்படுத்துதல் முதலிய வழிகளைச் சிபாரிசு செய்கிறார்.

18, 19-ம் நூற்றாண்டுகளில் அவருடைய நாட்டினர் பலரிடத்தில் குறுகிய எண்ணமுடைய, பிராந்திய ரீதியான, தொலை நோக்கு இல்லாத வாணிப ஊக்கக் கொள்கை காணப்பட்டது. ஆனால் இதுவும் அப்படிப்பட்ட கொள்கை என்று கூற முடியாது. உலகச் சந்தையை ஆதாரமாகக் கொண்டு சிந்திக்கும் பொழுது சர்வதேச ரீதியில் உற்பத்தியின் தனித்துறை வளர்ச்சியும் சுதந்திரமான வர்த்தகமும் அமெரிக்காவில் தொழில்துறை வளர்ச்சியைத் தடை செய்யாது என்றும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற எல்லா நாடுகளுக்குமே அது லாபகரமாகவும் இருக்கும் என்றும் அவர் அனுமானித்துக் கொண்டார்.

நாம் முன்னர் குறிப்பிட்ட அமெரிக்க எழுத்தாளர், இந்தக் கொள்கையிலிருந்த தனி வகையான அமெரிக்கத் தன்மையைச் சுட்டிக்காட்டிய பிறகு, இதற்கு “சுதந்திர வர்த்தக வாணிப ஊக்கக் கொள்கை என்று புதிரான வகையில் பெயர் சூட்டுகிறார்.” (6) எனினும், அமெரிக்கக் குடியேற்றங்களின் தொழில்துறை வளர்ச்சியைப் பற்றி பிராங்க்ளின் அளவுக்கு ஹியூமும் ஸ்மித்தும் அக்கறை எடுத்துக் கொண்டவர்களல்ல என்ற போதிலும், அவர்களுடைய கருத்துக்கள் பிராங்க்ளினுடைய கருத்துக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன என்பதைக் கூறுவது அவசியம். சுதந்திரமான வர்த்தகத்தை ஆதரிக்கின்ற பொழுது அவர்கள் அந்தப் பொருளை வறட்டுத்தனமாக அணுகவில்லை, பொது அறிவின்பாற்பட்டே அதைப் பற்றிச் சிந்தித்தார்கள்.

படிக்க:
முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
♦ நூல் அறிமுகம் : இந்திய பொருளாதார மாற்றங்கள் – ஜெ. ஜெயரஞ்சன் கட்டுரைகள்

இந்தத் தனி வகையான பொது அறிவு ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது; மற்றவற்றைக் காட்டிலும் இதுதான் பிராங்க்ளினை அந்த மாபெரும் ஸ்காட்லாந்துக்காரரோடு இணைக்கிறது. பிராங்க்ளின் ஸ்மித்தைக் காட்டிலும் பதினேழு வருடங்கள் மூத்தவர்; அவர்களுடைய தனிப்பட்ட தொடர்புகளில் அவர் ஸ்மித்திடம் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 1773-75-ம் வருடங்களில் லண்டனில் ஸ்மித் தன்னுடைய புத்தகத்தை எழுதி முடித்துக் கொண்டிருந்த பொழுது பிராங்க்ளின் அதைப் பரிசீலனை செய்து திருத்தங்கள் சொல்லி உதவியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

அவர்கள் இருவரும் மரணமடைந்த பிறகு (இருவருமே 1790-ம் வருடத்தில் மரண மடைந் தார்கள்) பிராங்க் ளினுடைய நண்பராக இருந்த மருத்துவரும் அரசியல்வாதியுமான ஜியார்ஜ் லோகான் பிராங்க்ளினிடமிருந்து தான் கேள்விப்பட்டதாகப் பின் வரும் செய்தியைத் தன்னுடைய உறவினர்களிடம் கூறியிருக்கிறார். அவர்கள் பிற்காலத்தில் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் அதைப் பரப்பிவிட்டார்கள். “புகழ் மிக்கவரான ஆடம் ஸ்மித் நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த பொழுது அதில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவரிடமும் (பிராங்க்ளின்-ஆ-ர்), டாக்டர் பிரைஸ், மற்ற கல்வி மிக்கோரிடமும் படித்துக் காட்டுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார்; அவர்களுடைய அபிப்பிராயத்தைப் பொறுமையோடு கேட்டு அங்கே நடைபெறும் விமரிசனம், விவாதம் ஆகியவற்றால் பயனடைந்தார்; சில சமயங்களில் அத்தியாயங்களை மறுபடியும் திருத்தி எழுதுவதற்கும் தம்முடைய கருதுகோள்களில் சிலவற்றைத் தலைகீழாக மாற்றுவதற்கும் கூட அவர் சம்மதிப்பதுண்டு.”

மேலே தரப்பட்டிருக்கும் கூற்றில் எது உண்மை , எது கற்பனை என்று எடுத்துக் கூறுவது கடினமானதாகும். பிராங்க்ளின் சொன்னவற்றை லோகான் குடும்பத்தினர் திரித்துக் கூறியிருக்கலாம், அந்த நூலை முழுமையாக்குவதில் பிராங்க்ளின் வகித்த பாத்திரத்தை மிகைப்படுத்திச் சொல்லியிருக்கலாம். அவர்கள் இருவருக்குமிடையே அவ்வளவு நெருக்கமான உறவு நெடுங்காலமாக இருந்திருக்குமானால் அதைப் பற்றி இன்னும் அதிகமான ஆதாரங்கள் கிடைத்திருக்கும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  வீடுகளில் வேலை பார்க்கின்ற எண்ணற்ற உதவியாளர்கள், வேலைக்காரர்கள் மற்றும் அதிகாரிகள், மதகுருக்கள் முதலியோரைக் குறிப்பிடுகிறார்.

(2)  Quoted from V. Parrington, Main Currents in American Thought, N.-Y., 1930, Vol. 1, part 2, p. 174.

(3) இங்கே மார்க்ஸ் ஆடம் ஸ்மித்திடமிருந்து மேற்கோள் காட்டுகிறார்; இந்தப் பிரச்சினையைப் பற்றி அவருடைய கருத்துக்கள் அதிகமான அளவுக்கு பிராங்க்ளினுடைய கருத்துக்களைப் போலவே இருக்கின்றன.

(4) K. Marx, Capital, Vol. 1, 1972, p. 558.

(5) P. Conner, Poor Richard’s Politics. Benjamen Franklin and His New American Order, London, 1965, p. 73.

(6) Ibid., p. 74.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க