‘நாட்டின் விருப்பத்துக்கு மாறாக இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் திட்டத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ஐ தடை செய்யவேண்டும்’ என சீக்கிய மத அமைப்புகளில் முதன்மையானதாக உள்ள அகாலி தக்த் தலைவர் தெரிவித்துள்ளார். அகாலி தக்த்-ன் பொறுப்பு தலைமை குருவாக உள்ள கியானி ஹர்ப்ரீத் சிங், ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகள் நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் என விமர்சித்துள்ளார்.
கடந்த விஜயதசமியின் போது ஆர்.எஸ்.எஸ். துவக்க நாள் நிகழ்ச்சியில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், இந்தியாவை ஒரு இந்துராஷ்டிரம் என அழைத்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில் அம்ரித்சரில் ஊடகங்களிடம் பேசினார் கியானி ஹர்ப்ரீத் சிங்.
Akal Takht Chief Giani Harpreet Singh: People of all religions and faiths live in India. This is the beauty of India. RSS (Rashtriya Swayamsevak Sangh) has said that India will be made a 'Hindu Rashtra'. It is wrong. This is not in the interest of the country. pic.twitter.com/K7oCOTjRs3
— ANI (@ANI) October 15, 2019
மோகன் பகத் பேச்சை ஏற்கனவே சிரோமனி குருத்வாரா பர்மந்தக் கமிட்டியின் தலைவர் கோபிந்த் சிங் லங்கோவால் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இந்துராஷ்டிரம் என்ற கருத்து கடும் கண்டனத்துக்குரியது. அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் மத சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது.
இந்த அமைப்பு சீக்கிய பாராளுமன்றம் என அழைக்கப்படுவதோடு அனைத்து குருத்வாராக்களையும் நிர்வகிக்கிறது. சீக்கிய மதம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இந்த அமைப்பே கையாள்கிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகளை சீக்கியர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மற்றொரு முக்கிய அமைப்பான அகாலி தக்த்-ம் காவிகளுக்கு எதிராகவே நிற்கிறது. முந்தைய காலங்களிலும் இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்த்து வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவாரங்கள் பரப்பிவரும் பரந்த இந்துத்துவத்தில் சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் உள்ளடங்கியவர்கள் என்கிற கருத்தை சீக்கிய மத அமைப்புகள் பிரச்சினையாகக் கருதுகின்றன. குரு கோவிந்த் சிங் உள்ளிட்ட சீக்கிய மதகுருக்களை இந்துக்களாக காட்ட சங்க பரிவாரங்கள் முனைவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

2004-ம் ஆண்டு அகாலி தக்த், ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான ராஷ்டிரிய சீக் சங்கத் – இடமிருந்து விலகியிருக்கும்படி’ சீக்கியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த அமைப்பை மதத்துக்கு எதிரான அமைப்பு எனவும் கூறியிருந்தது.
அதுபோல, 2017-ம் ஆண்டு அகாலி தக்த்-இன் தலைவர் கியானி, ராஷ்ரிய சீக் சங்கத் ஏற்பாடு செய்திருந்த குரு கோவிந்த் சிங்கின் 350-வது பிறந்த நாள் விழாவை விமர்சித்திருந்தார்.
“சீக்கியர்கள் தனித்துவமான இனம். அவர்களுக்கு தனித்துவமான அடையாளம் உள்ளது; தனித்துவமான வரலாறு உள்ளது. அவர்கள் மற்ற மதங்களின் எந்தவித சடங்குகளையும், நம்பிக்கைகளையும் நெறிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. தங்கள் தனிப்பட்ட நம்பிக்கையிலும் அதன் நெறிமுறைகளிலும் மற்றவர்களிடமிருந்து தலையீடு வருவதை அவர்கள் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்?” என கியானி கேட்டுள்ளார்.
காஷ்மீரில் 370-வது நீக்கப்பட்டதை எதிர்த்து சீக்கியர்கள் வீதிகளில் வந்து போராடினார்கள். காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்துகொள்ளலாம் என்ற பா.ஜ.க. தலைவர்களின் இழி கருத்துக்கு, அகாலி தக்த் எதிர்வினையாற்றியிருந்தது.
“இத்தகைய கருத்துக்கள் பெண்களை காட்சிப் பொருட்களாக்குகின்றன… காஷ்மீர் பெண்கள் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதி. அவர்களுடைய மரியாதையைக் காப்பது எங்களுடைய மதக் கடமை. காஷ்மீர் பெண்களின் மரியாதையைக் காக்க சீக்கியர்கள் முன்வர வேண்டும்” என கியானி தெரிவித்திருந்தார்.
படிக்க:
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !
♦ நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
பன்முகத்தன்மையான இந்திய கலாச்சாரத்தை, ஒற்றை இந்துத்துவ கலாச்சாரமாக்கவும் பல மதங்களை விழுங்கி ஒற்றை இந்து மதமாக்கவும் காவிகள் செயலில் இறங்கிவிட்டனர். தங்களது தனித்துவத்தைக் காத்துக்கொள்ள சீக்கியர்கள் துணிந்துவிட்டார்கள். அந்த வகையில் காவிகளை எதிர்ப்பதில் சீக்கியர்களின் போராட்டம் மற்றவர்களுக்கு முன்னுதாரணம்.
அனிதா
நன்றி : தி வயர்