உள்நாட்டுப் பொருளாதாரம் தேக்கமடைந்து ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்திய ஈகுவடார் நாட்டு அரசைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடன் பெறுவதற்காக ஈக்வடார் அதிபர் மொரினோ சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை இரத்து செய்வதாக அறிவித்தார்.

இதனால் வாகன எரிபொருட்களின் விலை இரு மடங்கு அதிகரித்த நிலையில், ஏற்கனவே பொருளாதார மந்த நிலையினால் பாதிப்புக்குள்ளான உழைக்கும் வர்க்கம் போராட்டத்தைக் கையிலெடுத்தது. ஐ.எம்.எஃப் நிறுவனமும், உலக வங்கியும் மூக்கை நுழைக்கும் நாடுகளிலெல்லாம் பொதுமக்களுக்கெதிராக வரிச்சலுகைகளை இரத்து செய்யுமாறு அரசுகளை வற்புறுத்துவது வழக்கமாகிவிட்டது.
அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2,100 பேர் காயமடைந்தோ அல்லது கைது செய்தோ முடக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 12.10.2019 அன்று தலைநகர் கீட்டோவில் உள்ள தொலைக்காட்சி நிலையமொன்றையும், செய்தி நிறுவனம் ஒன்றையும் அடித்து நொறுக்கிய போராட்டக்குழுவினர், தலைமைக் கணக்காயரின் அலுவலகத்துக்குத் தீ வைத்தனர். இதையடுத்த இராணுவத்துக்கும், போராட்டக்குழுவினருக்கும் மோதல் ஏற்பட்டது.
படிக்க:
♦ ஐ.டி. ரெய்டு : கல்கி பகவானின் குடுமி பாஜகவின் கையில் !
♦ தீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 ! தம்பி பர்சு பத்திரம் !
1960 மற்றும் 1970-களுக்குப் பின்னர் ஈக்வடார் நாட்டில் இப்போது தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தலைநகர் கீட்டோ இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற அதிபர் மொரினோ தலைமையிலான ஈகுவடார் அரசு ஐ.நா மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் மூலம் உள்ளூர் அரசியல் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நீடித்து வரும் நிலையில், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் உழைக்கும் வர்க்கத்தினரின் காசைப் பிடுங்கி, வங்கிகள் மற்றும் பணக்கார உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற வழிவகை செய்யும் அரசுக்கு எதிரான ஈகுவடார் நாட்டு மக்களின் போராட்டம் வெல்லட்டும்.
அமேசான் நதிக்கரையில் வசிக்கும் ஈகுவடார் பழங்குடி மக்களின் யுத்தக்குழுவினர் தலைநகர் கீட்டோவில் நடக்கும் போராட்டம் ஒன்றில் ஆக்ரோசமாகப் பங்கேற்கும் காட்சி
ஒரு வார காலமாக அரசு எந்திரத்தை முடக்கிய போராட்டக்குழுவின் தலைவர்கள் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை அமல்படுத்தவிடாமல் நாட்டைப் பாதுகாப்பதே எங்கள் இலக்கு என்கின்றனர்.
போராட்டக் குழுவினருடன் மோதலில் ஈடுபடும் இராணுவத்தினர்.
தலைமைக் கணக்காயரின் அலுவலகத்தை 12.10.2019 அன்று தீ வைத்து எரித்த போராட்டக்குழுவினர்.
கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக தலைநகர் கீட்டோவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கீட்டோ முழுவதும் பரவியுள்ள கலவரத்தின் காரணமாக தற்காலிக அரசாங்கத்தை இரண்டாம் நிலை நகரமான குவாவகில்லுக்கு மாற்றிவிட்டார் அதிபர் மொரினோ.
போராட்டக்காரர்களின் பிரதான இலக்கான எண்ணெய் நிறுவனங்கள். இரு மடங்கு விலையேற்றம் வந்தால் வெறுமனே வேடிக்கை பார்க்கவா முடியும்?
அதி நவீன பாதுகாப்புக் கருவிகளுடன் வலம் வரும் இராணுவத்தினருக்கு மத்தியில், வீட்டிலேயே நேர்த்தியாக மறு உருவாக்கம் செய்யப்பட்டு முகமூடிகளாக மாற்றப்பட்ட நெகிழிகள். மக்கள் நினைத்தால் புல்லும் ஆயுதமாக மாறும்.
ஆறு பேரின் உயிரைக் குடித்து சுமார் 2100 பேரை காயப்படுத்தியுள்ளது இப்போராட்டம்.
மக்கள் போராட்டத்தால் பின்வாங்கிய ஈகுவடார் அரசு இறுதியில் பேச்சுவார்த்தைக்கு வந்து எரிபொருள் விலையேற்றத்தை வாபஸ் பெற்றிருக்கிறது.
தமிழாக்கம் : வரதன்
நன்றி :aljazeera