Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாகும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

இந்தியாவில் நடைபெரும் கும்பல் கொலைகளுக்கும், கலவரங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் பொய்ச் செய்திகளை பரப்புபவர்கள் யார் ?

-

நாட்டில் நடக்கும் கும்பல் கொலைகளைத் தூண்டும் போலி செய்திகள் பரவ அறியாமையும் டிஜிட்டல் அறிவின்மையும் காரணமில்லை; சித்தாந்த மற்றும் தப்பெண்ணமே காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கும்பல் வன்முறைகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதில், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த படிக்காத பயனாளர்களே தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்கிற கணிப்பு தவறானது என தெரிவித்துள்ளனர்.

போலி செய்திகளை எப்படி கண்டுபிடிப்பது என்றும் டிஜிட்டல் கல்வியறிவை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் நாடு முழுவது வாட்ஸப் நிறுவனம் பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் கருத்துக்கு எதிரான கருத்தாக லண்டன் பொருளாதார பள்ளியின் ஆய்வு உள்ளது.

வாட்ஸப்பில் பொய் செய்திகள், வெறுப்பு பேச்சுக்களை பரப்புகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் ஆய்வு செய்துள்ளது இந்த ஆய்வு. வாட்ஸ்ப் பயனாளர் ஆணா, நகர்ப்புறத்தைச் சேர்ந்தவரா, ஊரகப் பகுதியைச் சேர்ந்தவரா, இளைஞரா அல்லது நடுத்தர வயதுடையவரா, தொழில்நுட்ப அறிவு பெற்றவரா, இந்து, உயர்சாதி அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரா எனவும் அது வகைப் பிரித்துள்ளது.

படிக்க:
நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் !
♦ மோடியின் அரை உண்மைகளும் முழு பொய்களும்

“எங்கள் களப்பணியில் கண்டறியப்பட்ட சில பயனர் விவரங்கள், தொழிற்நுட்ப அறிவுள்ள, ஆண், இந்து பயனர் சித்தாந்த ரீதியாக தவறான குற்றச்சாட்டுக்களை வைக்கும், தவறான தகவல்கள், வெறுப்புப் பேச்சுக்களை பகிரும் வாட்ஸப் குழுக்களை நிர்வகிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதைக் கூறுகின்றன” என்கிற இந்த ஆய்வறிக்கை.

“அதே சமயம், வாட்ஸப் பயனாளர் கீழ் சாதி, தலித் அல்லது முசுலீம் அல்லது பெண் அல்லது ஊரக, குறிப்பாக தொழிற்நுட்ப அறிவில்லாதவர் இதுபோன்ற சித்தாந்த ரீதியிலான பொய் தகவல்களை பரப்பும் வாய்ப்பு மிகவும் குறையும்” எனவும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

பல துறைகளைச் சார்ந்த பொய்யான தகவல் மற்றும் செய்தி பரவியதன் காரணமாக வாட்ஸப் மீது 2018-ஆம் ஆண்டும் கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இதன் காரணமாக நிறுவனம் ஆய்வு செய்ய 20 கல்வி திட்டங்களுக்கு நிதியளித்தது. அதில் ஒரு குழுதான் மேற்கண்ட ஆய்வைச் செய்திருக்கிறது.

கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் 250 பயனாளர்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்களின் மூலம் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கை என்பதால், இதிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பொதுமைப்படுத்தாமல், வாட்ஸப் கண்காணிப்பு குழுக்களின் பின்னால் உள்ள சமூக மற்றும் உளவியல் காரணங்களை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறது இந்த ஆய்வு.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸப் செய்திகள் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் சில கொலைகள் மற்றும் கும்பல் வன்முறைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது.

படிக்க:
நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள் !
♦ மக்களைக் கொல்லும் வாட்சப் வதந்திகளின் முன்னோடி பாரதிய ஜனதா !

அனைத்து கொலைகளும் ஒரேமாதிரியானவை இல்லை… சில கொலைகள் முசுலீம்கள் கால்நடைகளை கடத்தியதாகவும், குழந்தை கடத்தல் போன்ற பிற வதந்திகள் காரணமாகவும் நடந்துள்ளன. ஆனால், அவை அனைத்தும் வாட்ஸப்பின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமை குறித்த சர்ச்சைக்குரிய விவாதத்தில் தள்ளின.

சகுந்தலா பானஜி மற்றும் ராம் பட் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த ஆய்வறிக்கை, நகர்ப்புற, ஊரகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினர் , உயர் மற்றும் நடுத்தர சாதி ஆண்கள்-பெண்கள் ஆகியோர் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எதிரான செய்திகளை அப்படியே நம்புகிறார்கள் எனக் கூறுகிறது.

“முசுலீம்கள், கிறித்துவர்கள், தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் பரந்துபட்ட வெறுப்புணர்வும் பாகிஸ்தானியர், முசுலீம், தலித்துகள், விமர்சிக்கிற-எதிர்க்கிற குடிமக்கள் குறித்த சந்தேகம் போன்றவை ஊரக மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்க சாதி இந்து பெண்கள் மற்றும் ஆண்களிடம் உள்ளது. இவர்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்புவதோடு நேரிலும் வாட்ஸப் குழுக்களிலும் பரப்பவும் செய்கிறார்கள்” எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

உண்மையில் கல்வியறிவோ, ஊடக அறிவோ இதுபோன்ற வாட்ஸப் பயனாளர்களை வேரறுக்க முடியாது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பயனாளர்கள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளனர் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய வாட்ஸப் குழுக்களை தடுத்து நிறுத்த வாட்ஸப் நிர்வாகம், முறைப்படுத்துதல் மற்றும் தொழிற்நுட்ப ரீதியிலான தீர்வுகளை எட்ட வேண்டும் என ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், வாட்ஸப் செய்தி பகிர்ந்துகொள்தலில் கட்டுப்பாடு வேண்டும் எனவும் கூறியுள்ளது.

ஆனால், வெறுப்பு பேச்சுக்களை பதிவு செய்கிறவர்களை நீக்குவதே உடனடியாக செய்ய வேண்டியது எனவும் கூடவே, கண்காணிப்பு வன்முறை, கால்நடை கொலை அல்லது குழந்தை கடத்தல் போன்றவை பரப்பப்படும்போது எச்சரிக்கை தரும் அம்சம் ஒன்றையும் உருவாக்க வேண்டும் எனவும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்நுட்ப ரீதியாக கும்பல் வன்முறைகளை கட்டுப்படுத்த இந்த ஆய்வு வழி சொன்னாலும் இதை நடைமுறைப்படுத்தினாலும்கூட காவி சித்தாந்தத்திலிருந்து விடுபட்டால் தவிர, இவை தடுக்கப்பட வாய்ப்பில்லை.


– கலைமதி
நன்றி: த வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க