இந்துத்துவ ஆட்சியில் முசுலீம்கள் எத்தகைய ஒடுக்குமுறையை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஃபர்கான் அலி மற்றுமொரு உதாரணம் ஆகியிருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் பிலிபித்தில் உள்ள அரசாங்க தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஃபர்கான் அலி. கடந்த வாரம் வழக்கமாக பள்ளி காலை வணக்கக் கூட்டத்தில் புகழ்பெற்ற கவிஞர் முகமது இக்பாலின் ‘லப் பே ஆத்தி ஹய் துவா’ என்ற பாடலை குழந்தைகள் பாடினர். இந்தக் காட்சி வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் பரவியது.

உடனே காவி கும்பல், இந்தப் பாடல் மதராசாக்களில் பாடப்படுவது என்றும் ‘இந்தியாவுக்கு எதிரானது’ என்றும் பரப்பத்தொடங்கினர். விசுவ இந்து பரிசத் புகார் அளித்ததன் பேரில் உடனடியாக தலைமை ஆசிரியர் எவ்வித விசாரணையும் இன்றி நீக்கப்பட்டார்.
பள்ளி மதிய உணவில் ரொட்டிக்கு, தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியான போது, அதை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப் போட்டது ரவுடி சாமியார் ஆதித்யநாத் அரசு. இந்தச் செய்தி கண்டனத்துக்குள்ளான பின், இதை விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது காவி அரசு.
ஆனால், காவி கும்பலின் புகாருக்கு உடனடியாக வினையாற்றும்விதமாக, எவ்வித விசாரணையும் இன்றி ஃபர்கான் அலி நீக்கப்பட்டுள்ளார். ‘மதரசா’, ‘இந்தியாவுக்கு எதிராக’, ‘ஃபர்கான் அலி என்ற இசுலாமிய பெயர்…’ இவை மட்டுமே ஒருவரை எந்தவித விசாரணையும் இன்றி நீக்கப் போதுமானவையாக உள்ளன. காவி அரசாங்கத்தின் அதிரடி தீர்ப்பு இது.
படிக்க:
♦ ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !
♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
உண்மையில், ஃபர்கான் அலி பள்ளி குழந்தைகளை மதராசாவில் பாடப்படும் பாடலை பாடச் சொன்னாரா? கவிஞர் முகமது இக்பால், குழந்தைகளுக்காக 1902-ம் ஆண்டு இயற்றிய பாடல் இது. ‘இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வர கடவுளிடம் வேண்டுவது’ போல இயற்றப்பட்டது இந்தப் பாடல். இந்தப் பாடல் பல புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் பாடப்பட்டு வந்தது, பாடப்படுகிறது.
கவிஞர் முகமது இக்பால், இந்திய தேசியவாதியாக இருந்தவர். இவர் தீவிர இந்திய தேசியவாதியாக இருந்தபோது இவர் இயற்றியதே ‘சாரே ஜஹான் சே அச்சா’ (1904) என்ற புகழ்பெற்ற பாடல். சுதந்திர தினத்தின்போதும், குடியரசு தினத்தின் போதும் இந்தப் பாடல் இசைக்கப்படாமல் இருந்ததில்லை. இத்தகைய பின்னணி உள்ளவரின் பாடலை பாடக்கூடாது என்பது ‘முசுலீம்- இசுலாம்’ இவற்றின் மீது காவிகளுக்குள்ள ஆழமான வெறுப்புணர்வையே காட்டுகிறது.

ஃபர்கான் அலி, கவிஞர் இக்பால் அகமதுவின் பாடலை மட்டும் பாடவில்லை. இந்து கடவுளான சரஸ்வதி துதிக்கும் பாடலையும் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்ற முழக்கத்தையும் பள்ளியில் காலை வணக்கக்கூட்டத்தில் வழக்கமாகக் கூறி வந்துள்ளனர் பள்ளி குழந்தைகள்.
இவை எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஃபர்கான் அலி இசுலாமியர் என்பதாலேயே பணி நீக்கம் செய்யப்பட்டார். இது கண்டனத்துக்குள்ளான நிலையில், அந்தப் பள்ளியில் பணி ஒதுக்காமல், வேறொரு பள்ளிக்கு பணி மாற்றி உத்தரவிட்டுள்ளது ஆதித்யநாத் அரசாங்கம்.
“நானும் அந்தப் பள்ளியில் சேருவேன்” என்கிறார் ஃபர்கான் முன்பு பணியாற்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவர்.
“அவர் ஒரு சிறந்த ஆசிரியர். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். அவர் அனைவரிடத்திலும் அன்பாக நடந்துகொள்வார். எங்களை அவர் அடிக்கவே மாட்டார்” என்றும் அந்த மாணவர் ஃபர்கான் குறித்து பேசுகிறார்.
படிக்க:
♦ நூல் அறிமுகம் : தமிழக சூரிய மின் கொள்கை ஓர் ஆய்வு
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
“என்னுடைய குழந்தைகள் மாஸ்டர் சாகேப் தன்னுடைய கைக் காசைப் போட்டு காய்கறிகளை வாங்கி வருவார் என சொல்வார்கள். அவர் பணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாள் காலையிலும் குழந்தைகள் எழும்போது அழத் தொடங்கி விடுகிறார்கள்; பள்ளிக்குச் செல்ல மறுக்கிறார்கள்” என்கிறார் கவிதா. இவருடைய மகன் இரண்டாவது வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
மற்றொரு பெற்றோரான பூனம், வட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் ஒன்றை அளிக்க இருப்பதாக தெரிவிக்கிறார். “நாங்கள் படித்தவர்கள் இல்லை. ஆனால், அவரை பள்ளிக்கு அழைக்க என்ன செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம்” என்கிறார் அவர். இவருடைய மகன் இரண்டாவது படிக்கிறார்.
இளம் வயதில் போலியோ தாக்குதலால் கால் பாதிப்புக்குள்ளானவர் அலி. இதனால் இளம் வயதிலேயே அமைதியாக புத்தகங்களுடன் பொழுதை கழிப்பார் அலி என்கிறார் அவருடைய தந்தை இர்ஃபான் அலி.

“அவன்தான் என்னுடைய மருத்துவ செலவை கவனித்துக் கொள்கிறான். அவனுடைய ஆறு தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை” என்கிறார் அவர்.
“எங்களுக்கெல்லாம் பெரியவர் என்பதால் எங்களை அவர் கவனித்துக்கொள்வார். அவருக்கு குழந்தைகள் என்றால் பிரியம் அதிகம். குழந்தைகளும் இவரிடம் உடனடியாக ஒட்டிக்கொள்வார்கள். இதனால்தான் பள்ளியிலும் குழந்தைகளிடம் அவர் நல்லபடியாக நடந்துகொள்கிறார்” என்கிறார் ஃபர்கானின் தங்கை கஜாலா.
“குழந்தைகளை அவர் நிற்கச் சொன்னால், உடனே நிற்பார்கள். காரணம் பயத்தினால் அல்ல, அன்பினால். அவர் நீக்கப்பட்டதிலிருந்து பள்ளியில் மாணவர்களின் வருகை குறைந்துபோயிருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு ஆசிரியர் 150-200 மாணவர்களை கட்டுப்படுத்தியது பெரிய விசயம்” என்கிறார் கடைநிலை ஊழியர் பிரேம் நாராயணன்.
ஃபர்கான் நீக்கப்பட்ட அடுத்த நாள் பள்ளிக்கு ஐந்து மாணவர்களே வந்திருந்தனர். தன்னுடைய குழந்தைகள் பள்ளிக்குப் போவதற்கு மறுப்பதாகச் சொல்லும் கவிதா, “இந்த நிர்வாகம் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடுகிறது. நாங்கள் ஏழைகள் என்பதற்காக எங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை” என்கிறார்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்குவதில் மோசடி செய்து பச்சிளம் குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. காவி அரசாங்கம், குழந்தைகள் காப்பாற்ற முனைந்ததற்காக மருத்துவர் கபீல் கானை பணி நீக்கி, இன்னமும் பணி வழங்காமல் அலைக்கழிக்கிறது. அவர் முசுலீம் என்பதற்காகவே பழிவாங்குகிறது ரவுடி சாமியார் அரசாங்கம். அதேபோலத்தான் தற்போது தலைமை ஆசிரியர் ஃபர்கான் அலிக்கும் நடந்துகொண்டிருக்கிறது.
– அனிதா
நன்றி: ஸ்க்ரால், இந்தியன் எக்ஸ்பிரஸ்.