சிலி நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத அளவுக்கு சுமார் 12 இலட்சம் பேர் பங்குபெற்ற பிரம்மாண்ட பேரணி முதலாளித்துவத்தின் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
உலக கந்துவட்டிக் குழுமத்தின் தலைமையகமான சர்வதேசிய நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) கொடுத்த அழுத்தத்திற்கு உடன்பட்ட சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா, மேற்கொண்ட பொருளாதார சிக்கன நடவடிக்கையினால் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துவிட்டன. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தையே நம்பியிருந்த மாணவ மாணவிகள் பெரும் போராட்டத்தை அரசுக்கெதிராக நடத்தத் தொடங்கினர்.
மேலும் படிக்க :
♦ சிலி மக்கள் புரட்சி – கம்யூனிசம் 2.0 | கலையரசன்
ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இது மக்கள் போராட்டமாக மாறி சுமார் 12 இலட்சம் மக்கள் இப்போது வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அகுஸ்டோ பினோச்சே-யின் சர்வாதிகார ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டமாக இந்தப்போராட்டம் வர்ணிக்கப்படுகிறது. பிஞேரா-வின் அரசோ ஒரு யுத்தத்திற்குத் தயாராவதைப் போன்று ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, பீரங்கிகளையும், இராணுவத்தையும் குவித்து போராட்டத்தை முடக்க நினைக்கிறது.
18 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்து கொண்ட அதிபர் பிஞேரா தொலைக்காட்சி மூலம் பேசுகையில், மக்களின் கோரிக்கைகள் என்னவென்று தெளிவாகப் புரிந்து கொண்டேன்; நடந்தவற்றிற்காக மன்னிப்பு கோருகிறேன்; மேலும் மின்சாரக் கட்டண உயர்வை இரத்து செய்ய இருக்கிறேன். அதோடு கூட குறைந்தபட்ச வருமானமாக மாதத்திற்கு 480 டாலர்கள் கிடைப்பதை உறுதி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆனால் இவை எதுவும் வேண்டாம் என்று கோரும் மக்கள், பிஞேரா ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்கின்றனர். சிலி நாட்டு மக்களில் 29% மக்கள் மட்டும் பிஞேரா-வின் ஆட்சி மீது நல்ல அபிப்ராயம் கொண்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் சர்வே ஒன்றில் 83% மக்கள் போராட்டத்திற்கு தங்களின் பேராதரவைத் தருவதாக அறிவித்துள்ளனர். சிலி மக்களின் போராட்டம் வெல்லட்டும், முதலாளித்துவமும் அதன் தீய சக்திகளும் ஒழியட்டும்.
அக்டோபர் 23, 2019 அன்று நடந்த ஒரு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ‘ என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா, எனக்கு என் எதிர்காலம்தான் மிக முக்கியம்’ என்று எழுதிய பதாகையுடன் போராட்டக்களத்தில் இருக்கும் காட்சி.
மெரினா எழுச்சி போன்றதொரு மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் சிலி நாட்டின் தலைநகரம் சான்டியாகோ.
ஐ.எம்.எஃப் மற்றும் சிலி அதிபர் பிஞேரா இருவரும் 12 இலட்சத்திற்கும் அதிகமானோரை வீதிக்கு வரவழைத்துவிட்டனர்
மக்கள் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் எடுக்கப்பட்ட மிக நேர்த்தியான புகைப்படம் ஒன்று . சிலியின் மப்பூச்சே பழங்குடியினரின் கொடி உச்சத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
சாட்டிலைட் புகைப்படம்.
சிலி-யைப் புரட்டிப் போடும் மக்கள் சூறாவளி.
வீதிகளில் பாயும் மக்கள் பெருங்கடல்.
புதிய உலகை காணத்துடிக்கும் விழிகளே! சிலியைப் பார்.!
தங்கள் வாழ்வுக்காக களமிறங்கியுள்ள இளம் தலைமுறை.
போராட்டத்தின் ஒற்றைக் குரல் கூட ஓங்கி ஒலிக்கும்.
ஒரு கையில் ஆண்ட்ராய்ட் போன்; மறு கையில் தேசியக் கொடி. கண்முன்னே போராட்டத் தீ.
– வரதன்
நன்றி : Redfish