ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியபின், அம்மாநிலத்தை முடக்கி வைத்துள்ளது மோடி அரசாங்கம். சர்வதேச சமூகம் காஷ்மீர் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறை குறித்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத மத்திய அரசாங்கம், பூசி மெழுகும் பல வேலைகளைச் செய்து வருகிறது. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முசுலீம் வெறுப்பு கொண்ட, வலதுசாரி எம்.பி.-க்களை காஷ்மீருக்கு அழைத்திருக்கிறது இந்திய அரசாங்கம்.
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 27 எம்.பி.-க்கள் காஷ்மீரில் ‘ஆய்வு’ செய்ய இந்தியா வந்துள்ளனர். இதில், அகதி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சிகளான ஜெர்மன் ஆல்டர்நேடிவ் ஃபார் ஜெர்மனி மற்றும் ஃபிரான்சின் ரசெம்பிள்மெண்ட் நேஷனல் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் அடங்குவர்.
மட்டுமல்லாது, இந்த 27 எம்.பி.க்களில் 22 எம்.பி.க்கள் அவர்களுடைய நாட்டில் பாஜக-வைப் போன்ற வலதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஃபிரான்சிலிருந்து தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement party-யிலிருந்து ஆறு பேரும், போலாந்திலிருந்து தீவிர வலதுசாரி Prawo i Sprawiedliwość கட்சியிலிருந்து ஐந்து பேரும், இங்கிலாந்தின் வலதுசாரி கட்சியான பிரக்ஸிட் பார்ட்டியிலிருந்து நால்வரும், இத்தாலியின் தீவிர வலதுசாரி கட்சியான லிகா பார்ட்டி மற்றும் ஜெர்மனியின் Alternative für Deutschland -லிருந்து தலா இருவரும், செஸ் குடியரசிலிருந்து வலது மைய KDU-ČSL கட்சி, பெல்ஜியத்தின் வலதுசாரி கட்சியான Vlaams Belang, ஸ்பெயினின் தீவிர வலதுசாரி கட்சியான VOX ஆகிய கட்சியிலிருந்தும் எம்பி-க்கள் வந்துள்ளனர். இவை அகதி குடியேற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருபவை. இவர்களில் சிலர் இஸ்லாமிய வெறுப்பையும் உமிழ்பவர்கள்.
இத்தாலியின் லிகா பார்ட்டி, முசுலீம் நாடுகளிலிருந்து அகதிகள் வருவதை கடுமையாக எதிர்த்து வரும் கட்சியாகும்.
இந்தியா வந்துள்ள 27 பேரில் மைய வலதுசாரிகளும் லிபரல் ஜனநாயகவாதிகளும் அடங்குவர். ஜம்மு – காஷ்மீரில் இந்தியாவின் அடக்குமுறையை அங்கீகரித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசிய வலதுசாரி எம்.பி.-க்களும் இந்தியா வந்துள்ளனர்.
படிக்க:
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – அக்டோபர் 2019 நான்காம் பாகம் | டவுண்லோடு
♦ சிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் !
அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரிடம் காஷ்மீரின் நிலைமை குறித்து விளக்கங்களை கோரியிருந்த நிலையில், ஐரோப்பிய வலதுசாரி எம்.பி.க்களை இந்தியாவுக்கு அழைத்துள்ளது மோடி அரசாங்கம்.
இந்திய அரசாங்கம் தரும் தகவல்களை நம்பாது சர்வதேச ஊடகங்கள் காஷ்மீரின் மோசமான அடக்குமுறை நிலைமையை ஆதாரத்துடன் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், தனக்குத் தோதான சித்தாந்தம் உள்ள எம்.பி.க்களை அழைத்து, காஷ்மீர் ‘இயல்புநிலை’யில் இருப்பதாக காட்ட முயற்சிக்கிறது இந்த அரசாங்கம்.

இந்திய ஊடகங்களும் அரசாங்கத்தின் செய்தியும் ‘ஐரோப்பிய யூனியனால் அனுப்பப்பட்ட எம்.பி.க்கள்’ என்றே சொல்கின்றன. ஆனால், இதற்கு விளக்கமளித்துள்ள ஐ.யூ. அலுவலகம், தனிப்பட்ட முறையில் இந்த எம்.பி.க்கள் இந்தியா சென்றிருப்பதாகவும் இந்த பாராளுமன்றத்தின் சார்பாக அல்ல எனவும் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 17-ம் தேதி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் போலாந்தைச் சேர்ந்த Ryszard Czarnecki மற்றும் Fulvio Martusciello ஆகிய இருவரும் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கிய இந்தியாவின் முடிவை வரவேற்று பேசினர்.
“இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை நாம் பார்க்க வேண்டும். அந்தத் தீவிரவாதிகள் நிலவிலிருந்து வரவில்லை; அவர்கள் பக்கத்து நாட்டிலிருந்து வருகிறார்கள். நாம் இந்தியாவை ஆதரிக்க வேண்டும்” என Czarnecki பேசினார்.
கடந்த மூன்று மாதங்களாக இந்திய அரசாங்கம், வெளிநாட்டு பத்திரிகையாளர்களையும் வெளிநாட்டு அதிகாரிகளை காஷ்மீருக்குள் அனுமதிக்க மறுக்கிறது. அக்டோபர் 3-ம் தேதி, அமெரிக்க எம்.பி. கிறிஸ் வான் ஹோலன் ஸ்ரீநகர் செல்ல அனுமதி கேட்டபோது, அதை மறுத்தது இந்திய அரசு. ஐநாவைச் சேர்ந்த மனித உரிமை கவுன்சில் விடுத்த அனுமதி கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
படிக்க:
♦ அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
♦ காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !
ராகுல்காந்தி உள்ளிட்ட இந்திய அரசியல்வாதிகளுக்கும் காஷ்மீர் செல்ல அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் இந்திய பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கும் விதமாக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூரும், ஜெய்ராம் ரமேஷும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் எங்கள் உள்நாட்டு விசயம் எனக் கூறிக்கொண்டு, அதற்கு முரண்பாடாக வெளிநாட்டு எம்.பி.-க்கள் காஷ்மீருக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதென்ன தேசியவாதத்தின் புதிய பதிப்பா எனக் கேட்டுள்ளார் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா.
ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா, கைதாகியிருக்கும் தனது தாயின் ட்விட்டர் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார், ‘மாநிலத்துக்குள் பாசிஸ்டுகள் மட்டுமே வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளனர்’.
In its desperation to convince international community that ‘normalcy’s restored in Kashmir, GOIs making incessant foreign policy gaffes. From endorsing a Republican as US President to engaging with what seem like pro fascist, right leaning and anti immigrant EU MPs. Royal mess
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 28, 2019
பாசிஸ்டு எம்.பி.-க்களுக்கு தனது அடக்குமுறையை சுற்றிக்காட்டப் போகிறது மோடி அரசாங்கம். இஸ்லாமிய வெறுப்பு கொண்ட பாசிஸ்டுகள்… பாசிஸ்டுகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்காமல், விமர்சிக்கவா போகிறார்கள்?
கலைமதிநன்றி : டெலிகிராப் இந்தியா.