Thursday, April 17, 2025
முகப்புசெய்திஇந்தியாஉ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.

-

தலித்துகளுக்கு ஆதரவாக எழுதினால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும் : பத்திரிகையாளர்களை ஒடுக்கும் ஆதித்யநாத் அரசாங்கம் !

ருத்து சுதந்திரம் அனைவரது அடிப்படை உரிமை; அதுபோலத்தான் பத்திரிகையாளர்களுக்கும். ஆனால், இந்தியாவின் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில், பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஊடகங்களில் எந்தவிதமான விமர்சனமும் கூடாது என்கிறது.

விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால், உத்தர பிரதேச காவலர்களைப் பொறுத்தவரை விமர்சிப்பவர்கள், பழிவாங்கப் படுவார்கள். உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.

சமீபத்தில் மாநில தலைநகரில் பிரபலமான சுயாதீன பத்திரிகையாளரான ஆசாத் ரிஸ்வி கடந்த வாரம் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 107, 116 மற்றும் 151-ன் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்து சொன்ன காவல் ஆய்வாளர், “தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட வழக்கு இது. ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்றிருக்கிறார்.

ரிஸ்வி செய்ததெல்லாம் காவல்துறையில் கையாலாகத்தனம் குறித்து எழுதியதே. அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளபடி, இது அமைதி மீறல் குறித்த அச்சத்திற்கு வழிவகுக்கும் என நிச்சயம் சொல்ல முடியாது. அவர் உள்ளூர் போலீசாரால் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்பதை, ஒரு மாலைப் பொழுது துணை ஆய்வாளர் ஒருவர் அவருடைய வீட்டின் கதவைத் தட்டி எச்சரித்தபோது தெரிய வந்திருக்கிறது.

“சோக் கட்வாலி காவல் ஆய்வாளர் என்னை அனுப்பினார். நீங்கள் உங்களுடைய எழுத்துக்களை சரிபார்க்க வேண்டும்; நீங்கள் காவலர்கள் குறித்து தவறாக சித்தரிக்கிறீர்கள்” என்பதாக அந்த எச்சரிக்கை இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை, காவல்துறையினரின் எண்ணத்தை வெளிப்படுத்தியது, போலீசின் கத்தி இப்போது பத்திரிகையாளரின் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

படிக்க:
கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !
♦ இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

ஆசாத் ரிஸ்வியின் மட்டும் போலீசு மிரட்டலுக்கு ஆளாகவில்லை.

கடந்த மாதம் மட்டும் ஐந்து பத்திரிகையாளர்கள் மீது குண்டர்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது நொய்டா போலீசு. இதுகுறித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டபோது, நொய்டா காவல் கண்காணிப்பாளர் பூமிக்கும் ஆகாயத்துக்குமாக குதித்தார். பத்திரிகையாளர்கள் ‘வஞ்சகர்கள்’ என முத்திரை குத்தினார். இவர்களில் நான்கு பத்திரிகையாளர்கள் மீது ‘தனிப்பட்ட லாபங்களுக்காக காவல்துறைக்கு தேவையற்ற அழுத்தம் கொடுத்ததாக’ வழக்கு போடப்பட்டுள்ளது.

ஊடக நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பெயர்போனது நொய்டா போலீசு. மூத்த காவல்துறை அதிகாரிகள் கூட தங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் மீது விரோதம் காட்டத் தயங்குவதில்லை.

கடந்த வாரம், ஒரு முன்னணி தேசிய நாளிதழின் பெண் பத்திரிகையாளர் நொய்டாவின் தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது, தாக்கப்பட்டார். இவரை மூத்த கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா சந்திக்க மறுத்துவிட்டார். காயத்தை மேலும் ஆழமாக்குவதுபோல், கையறு நிலையில் இருந்த அந்தப் பத்திரிகையாளரைத் தாக்கிய நபர்கள் மீது எஸ்.எஸ்.பி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு முன்னதாக, பினோர் மாவட்டத்தின் பசி கிராமத்தில் உள்ள பொதுக்கிணற்றில் தலித்துகள் தண்ணீர் எடுக்க மறுக்கப்படுவதாக செய்தி வெளியிட்ட ஐந்து பத்திரிகையாளர்கள் மீது வழக்கு போடப்பட்டது. அவர்கள் மீது சமூக நல்லிணத்துக்கு ஆபத்து, சாதி பதட்டத்தை உருவாக்குதல் மற்றும் தேச பாதுகாப்புக்கு ஆபத்து போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டப்பட்டன.

மதிய உணவில் ரொட்டிக்கு உப்பு கொடுத்த ஆதித்யநாத் அரசை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பவன் ஜெஸ்வால்.

கடந்த செப்டம்பர் மாதம், பத்திரிகையாளர் பவன் ஜெஸ்வால், மிர்சாபூர் கிராமத்து பள்ளியில் சப்பாத்திக்கு உப்பைத் தொட்டுக்கொண்டு உண்ட குழந்தைகள் குறித்த வீடியோவை வெளியிட்டதற்காக ‘குற்றச் சதி’ வழக்குப் போடப்பட்டது நினைவிருக்கலாம்.

மிர்சாபூர் மாவட்ட நீதிபதி, பத்திரிகையாளரின் கைதை நியாயப்படுத்தும் விதமாக ஒருபடி மேலே போய், “பவன் ஜெஸ்வால், ஒரு அச்சு பத்திரிகையாளர், அவர் ஏன் வீடியோ எடுத்தார்? அவர் புகைப்படங்கள் எடுத்திருக்கலாம், ஆனால் வீடியோ எடுத்து அதை வைரலாக்கிவிட்டார். அவர் குற்றச்சதி வழக்கு பதிய தகுதியானவர்தான்” என்றார்.

படிக்க:
அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !
♦ பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !

வெட்கக்கேடான இந்தக் குற்றச்சாட்டுக்களை கண்டித்த எடிட்டர்ஸ் கில்டு, ‘செய்தியாளரை சுட்டுக்கொல்வது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது’ எனக் கூறியது. பத்திரிகையாளருக்கு எதிராக உடனடியாக வழக்கு திரும்பப் பெற வேண்டும் எனவும் அது வலியுறுத்தியிருந்தது.

கிரிமினல்கள் என்ற பெயரில் 67-க்கும் அதிகமானவர்களை என்கவுண்டர் செய்த, அதே போலீசு மனநிலையை நான்காவது தூணின் உறுப்பினர்களை கண்மூடித்தனமாக குறிவைப்பதிலும் காண முடிகிறது.

காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒவ்வொருவரும் மோசமான கிரிமினல்கள் என சொல்லப்பட்டாலும் அதில் பலர் சிறு சிறு குற்றங்களைச் செய்தவர்கள். அவர்களை பெரிய கிரிமினல்கள் போல சித்தரிக்க அவர்களுடைய தலைகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அவர்கள் இரத்த வெள்ளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டப் பிறகு, சுவாரஸ்யமாக இது அரசாங்கத்தின் ‘சாதனை’பட்டியலில் இடம்பெற்றது.


கட்டுரையாளர் : சரத் பதான் (லக்னோவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்)
அனிதா
நன்றி : தி வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க