Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாகவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !

கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !

நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புக்குரலை எழுப்பிவருபவர். அவரது ‘நியாய பாதை’ இதழில் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.

-

ந்துத்துவ காவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளையின் செயலாளர் நரசிம்ம மூர்த்தியை, தேசத்துக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி கைது செய்துள்ளது கர்நாடக பாஜக அரசாங்கம்.

கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு, அவருடைய எழுத்துக்களை பதிப்பிக்கும் வகையில் துவக்கப்பட்டது கவுரி மீடியா டிரஸ்ட். இதன் செயலாளராக உள்ள நரசிம்ம மூர்த்தி, ‘நியாய பாதை’ என்கிற பெயரில் இதழ் ஒன்றையும் பதிப்பித்து வருகிறார். பாஜக அரசாங்கத்துக்கு எதிராக இந்த இதழில் எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில், நரசிம்ம மூர்த்தி கைதாகியுள்ளதாக இதழ் சார்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் நரசிம்ம மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளது, பாஜக அரசாங்கத்தின் நோக்கத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறது. போலீசு தரப்பில் சொல்லப்பட்டுள்ள தகவல், ‘1994-ம் ஆண்டு முதல் நரசிம்ம மூர்த்தி தேடப்படும் நபர். அவர் ஒரு நக்ஸலைட்; தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்; ராய்ச்சூர் மாவட்டத்தில் அவர் மீது வழக்கு உள்ளதால், ராய்ச்சூரில் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்கிறது.

நரசிம்ம மூர்த்தி.

நரசிம்ம மூர்த்தி மீது குற்றச் சதி, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கவுரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு, வெளிப்படையாகவே பல்வேறு நிகழ்ச்சிகளில், பத்திரிகையாளர் சந்திப்புகளில் நரசிம்ம மூர்த்தி கலந்துகொண்டார். ஆனால், அவரை 25 ஆண்டுகளாகத் தேடிவருகிறோம் என வாய்கூசாமல் பொய் சொல்கிறது போலீசு என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

“போலீசார் இத்தனை ஆண்டுகளும் அவர் தலைமறைவாக இருந்ததாகக் கூறுகின்றனர். பத்திரிகையாளர் சந்திப்பு, சமூக நிகழ்வுகளில் பங்கேற்க இதே ராய்ச்சூருக்கு பலமுறை நரசிம்ம மூர்த்தி வந்திருக்கிறார். இப்போது கைது செய்யப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தைக் கிளப்புகிறது.  அவரை கைது செய்ய நினைத்திருந்தால் அவருடைய படத்தை வெளியிட்டிருந்தால் உடனடியாக கைது செய்திருக்கலாம். ஆனால், இப்போது ஏன் இந்த கைது?” என நரசிம்ம மூர்த்தியுடன் கவுரி மீடியா டிரஸ்டில் பணியாற்றும் குமார் சமதலா கேட்கிறார்.

நரசிம்ம மூர்த்தி ராய்ச்சூரில் கைதாகும் முன் ‘மாற்று ஊடகம்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் பேச வந்திருந்தார்.  அக்டோபர் 25-ம் தேதி கைதான அவர், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

படிக்க:
பேராசிரியர் கிலானியின் மனித உரிமைப் பணிகளை முன்னெடுப்போம்! பாசிச சூழலை திடமாக எதிர்கொள்வோம் !
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்ததிலிருந்து பாஜக-வை எதிர்த்துப் போராடுகிறவர்கள், தலித் வன்முறைகளுக்கு எதிராக போராடுகிறவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள்.  இந்த நிலையில் நரசிம்ம மூர்த்தியின் கைது முற்போக்கு, லிபரல், ஜனநாயக, அம்பேத்கரிய செயல்பாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் ஆளும் அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதற்காகவே இந்தக் கைதுகள் நடப்பதாகவும் ’நியாய பாதை’ சார்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.

மேலும், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மீது பொய்யான வழக்குகளைப் போட்டு, கைது செய்வது அதிகரித்து வருகிறது. இந்த அவசரக் கைதுகள் மூலம், ஆளும் கட்சி அதற்கு எதிராக பேசும் மக்களை அடக்க முயற்சிக்கிறது.  கருத்து வேறுபாட்டின் குரல்களை ஒடுக்குவது ஜனநாயகத்திற்கு கடுமையான பின்னடைவு’ எனவும் அந்த அறிக்கை கண்டித்துள்ளது.

நரசிம்ம மூர்த்தி கைதை கண்டித்து, பெங்களூரு டவுன்ஹால் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

நரசிம்ம மூர்த்தியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்த யோகேந்திர யாதவ் தொடங்கிய ஸ்வராஜ் இந்தியா என்ற அரசியல் அமைப்பின் கர்நாடக பொது செயலாளராகவும் நரசிம்ம மூர்த்தி இருந்தார்.

“நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையான எதிர்ப்புக்குரலை எழுப்பியவர்.  நாட்டில் ஆளும் அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை ஒடுக்கும் நிலை, இவருடைய விசயத்தில் நடந்துள்ளதைப் பார்க்க முடிகிறது” என யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.  எந்தவித விசாரணையும் பின்னணியும் இல்லாமல் நரசிம்ம மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் கண்டித்துள்ளார்.

கவுரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட முற்போக்காளர்களின் படுகொலையில் ‘சனாதன சன்ஸ்தா’ என்ற காவி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குள்ள தொடர்புகள்  விசாரணையில் தெரியவந்த நிலையில், ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக அரசு இந்தக் கைதை நடத்தியிருக்கிறது என்பது தெளிவாகப் புலனாகிறது. கவுரி லங்கேஷ், கல்புர்கி கொல்லப்படவேயில்லை; தானாகவே சுட்டுக்கொண்டார்கள் என்றும்கூட பாஜக தீர்ப்பெழுத வாய்ப்பிருக்கிறது !


கலைமதி
நன்றி : தி வயர், நியூஸ் க்ளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க