வாட்சப் செயலியைப் பயன்படுத்துவோருக்கு மாதம் 6 டாலர் கூடுதல் வரியை வசூலிக்கும் அரசுக்கெதிரான போராட்டம் செறிவடைந்து, இப்போது ஊழலுக்கெதிரான போராட்டமாக மாறி உக்கிரமடைந்துள்ளது.
லெபனான் நாடு சிரியா, இசுரேல் நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இங்கு இசுலாமிய, கிறித்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
மாணவர்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகளிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் அபகரிப்பதற்காக அரசு மேற்கொண்ட நரித்தந்திரமே இந்த வரி விதிப்பு நடவடிக்கை என்கின்றனர் லெபனான் நாட்டு இளம் தலைமுறையினர்.

“நாங்கள் நடத்தும் போராட்டத்தை வாட்சப் வரி விதிப்புக்கு எதிரானது என்று மட்டும் நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது; நெடுங்காலமாக நாங்கள் ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டும், நாடு ஊழல் மயமாகி பொருளாதாரம் நலிந்து வருவதைக் கண்டித்தும் போராடுவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம்” என்கிறார் போராட்டத்தில் பங்குபெறச் சென்றுகொண்டிருக்கும் மாணவர் ஜெரெமி ஊவே.
தலைநகர் பெய்ரூட்டில், முதல் இரண்டு நாட்களாக நடைபெற்ற போராட்டத்தை பாதுகாப்புப் படையினரைக் கொண்டு தடியடி நடத்தி கலைத்தது ஆளும் அரசு. மூன்றாவது நாள் மத்தியில் சுமார் 10 இலட்சம் மக்கள் ஒன்றுகூடிய போது, காவல்துறையினரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த ஒரு புரட்சிகரமான போராட்டமாக மாறிவிட்டது. இனப்பாகுபாடுகளை ஒதுக்கிவிட்டு லெபனான் தேசியக்கொடியின் கீழ் அரசுக்கெதிரான ஒன்றுபட்ட போராட்டக்களமானது லெபனானின் தலைநகரம் பெய்ரூட்.
படிக்க:
♦ ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !
♦ அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !
லெபனானில் நடந்த உள் நாட்டுப் போரின் போது சிதிலமடைந்து பயன்பாட்டில் இருந்திராத கட்டிடங்கள் இப்போது தங்குமிடங்களாகிவிட்டன. பணக்காரக் குடியிருப்புக்கள் நிறைந்த நகர வீதிகளின் வெளிச்சுவர்கள் இப்போது அரசைத் தூக்கியெறிவதற்கான பிரச்சாரக் களமாக மாறி நிற்கின்றன.
வீதியில் இறங்கிப் போராடினால்தான் விடுதலை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாய் நிற்கிறது லெபனான் மக்களின் போராட்டம்.
எதிர்காலம் என்ற ஒன்றே நிரந்தரமில்லாத நிலையில் கற்ற கல்வியினால் என்ன பலன் ஏற்பட்டுவிடப்போகிறது என்ற பதாகையை ஏந்தி நிற்கும் பெண்மனி ஒருவர்.
சிகப்பும், வெள்ளையும், பச்சையும் இணைந்து மதங்களுக்கு அப்பாற்பட்டு நாங்கள் அனைவரும் லெபனான் குடிமக்கள் என்று ஆர்ப்பரிக்கும் கூட்டம்.
பெரிய மசூதி ஒன்றின் வாசற்பகுதியில் நின்று உரையாற்றுபவர்களைக் காண்பதற்காக, பழுதடைந்த இரும்பு வேலியின்மீது ஏறி நின்று பார்க்கும் இளைஞர்கள்.
அரசுக்கெதிரான முழக்கங்களுடன் நீண்ட லெபனான் கொடியுடன் ஆர்ப்பரித்துச் செல்லும் போராட்டக் குழுவினர் .
தடுப்பரண்களுடன் போராட்டக்குழுவை முன்னேற விடாமல் தடுக்கும் இராணுவ வீரர் ஒருவரின் கைகளை, போராட்டக்காரர் ஒருவர் பிடித்து நிற்கும் காட்சி. இராணுவத்தினரைத் தாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கல்ல என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறார் போராட்டக்காரர்.
முதல் இரண்டு நாட்களில் யாருமே நுழையாத இடமாக இருந்த இந்த பாழடைந்த கட்டிடங்கள் மூன்றாம் நாளில் நூற்றுக்கணக்கானோரின் புகலிடமாகிவிட்டது
போராட்டக்களத்தில் ஆடல் பாடல்களுக்குப் பஞ்சமா என்ன? முதியவர் ஒருவரின் ஆடல் பாடலுக்கு இசையுடன் கூடிய வரவேற்பு
போராட்டக்காரர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காகப் போடப்பட்ட முள்வேலிகளில் தங்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்யும் இளைஞர்கள், இளம்பெண்கள். ஆண்-பெண் சமவாய்ப்பு, வாக்களிக்கும் வயதில் மாற்றம், குடியுரிமை சட்டத்திருத்தம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள்.
நள்ளிரவிலும் ஓயாத போராட்டம்.
லெபனான் தேசியக்கொடியுடன் முகமூடி அணிந்து நிற்கும் வாலிபர்.
ஊழலைத் தவிர இந்த நாட்டில் வேறொன்றுமில்லை. ஊழலற்ற லெபனான் நாடே எங்கள் கோரிக்கை என்கின்றனர் ஹலா மற்றும் ஓமர்.
ஜெரெமி ஊவேயுடன், மிஷெல் காரா. லெபனானில் சாதாரண வாழ்க்கை வாழ்வதே மிகவும் சிரமமான ஒன்றாகிவிட்டது. உலகத்திலேயே மிகவும் நலிவுற்ற நாடுகளில் ஒன்றாக லெபனான் இருக்கும் அதே தருணத்தில், உலகிலேயே மிகவும் பணக்கார அரசாங்கங்களில் எங்கள் நாடும் ஒன்று. இனியும் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை என்கிறார் ஜெரெமி ஊவே.
உள்நாட்டுப் போர் நடந்த காலம் தொட்டு இன்றுவரை எங்கள் நாடு கிரிமினல்களாலேயே ஆளப்பட்டு வந்துள்ளது. எங்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்தனர், எங்களை ஏமாற்றி திருடி விட்டனர். எம் சகோதர சகோதரிகள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தினர்; இனியும் இந்த ஆட்சியாளர்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஊழலற்ற, ஜனநாயகம் வேண்டுமென்பதற்காகவே போராடுகிறோம்; இங்கிருந்தே மடிவோம்; எங்கள் குழந்தைகளுக்கும் போராடக் கற்றுக் கொடுப்போம் என்கிறார் யாரா-எல்-பன்னா.
– வரதன்
நன்றி : அல்ஜசீரா