Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாவாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.

-

ருபதுக்கும் மேற்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், தலித் செயல்பாட்டாளர்களின் வாட்சப் கணக்கு அதி நவீன உளவு மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளது. மே 2019-வரை இவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம் 1400 வரையிலான வாட்சப் பயனாளர்களை உளவு பார்த்ததாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனத்தின் மீது வாட்சப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த உளவு மென்பொருள் மூலம் இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.

எவரெல்லாம் கண்காணிக்கப்பட்டார்கள் என தகவல் அளிக்க மறுத்துவிட்ட வாட்சப் நிறுவனம், தொடர்புடையவர்களிடம் அவர்கள் கண்காணிக்கப்பட்ட தகவலை சொல்லிவிட்டதாகத் தெரிவிக்கிறது.

“இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கண்காணிப்பின் இலக்காக இருந்தனர். அவர்களுடைய அடையாளங்களையும் சரியான எண்ணிக்கையையும் என்னால் வெளிப்படுத்த முடியவில்லை என்றாலும், அது ஒரு சிறிய எண் அல்ல என்று என்னால் கூற முடியும்” என்கிறார் வாட்சப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்.

‘பெகாசஸ்’ எப்படிப்பட்ட உளவு மென்பொருள் ?

குறிப்பிட்ட இலக்கை கண்காணிக்க, பெகாசஸ் செயல்படுத்துநர் அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ‘இணைப்பு’ ஒன்றை அனுப்புவார். இந்த இணைப்பை திறந்தாலே போதும், குறிப்பிட்ட நபரின் அனுமதியோ, அவருக்குத் தெரியாமலேயே இந்த உளவு மென்பொருள் போனில் நிறுவப்பட்டுவிடும். அதன்பின், பெகாசஸ் செயல்படுத்துநர் குறிப்பிட்ட நபரின் போனுக்குள் ஊடுருவி கடவுச் சொல், தொடர்பு எண்கள், நடப்பு நிகழ்வு விவரங்கள், குறுஞ்செய்திகள், நேரடி குரல் அழைப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

படிக்க:
மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
♦ கீழடி அகழாய்வும் அதன் முக்கியத்துவமும் ! சென்னையில் CCCE அரங்கக் கூட்டம் !

மட்டுமல்லாமல், பெகாசஸ் நடத்துநரால் மொபைல் போனின் கேமராவையும் மைக்ரோ போனையும் இயக்கி போன் உள்ள இடத்தில் நடப்பவற்றை அறிந்துகொள்ள முடியும். இந்த உளவு மென்பொருளின் மேம்படுத்தப்பட்ட பதிப்பில், ‘இணைப்பை’ திறப்பதுகூட தேவையில்லை, வாட்சப்பில் தவறவிட்ட வீடியோ அழைப்பை செய்தால்கூட குறிப்பிட்ட நபரின் போனில் இது இன்ஸ்டால் ஆகிவிடும்.

இதுபோன்ற துஷ்பிரயோகத்தை தடைசெய்யும் வாட்சப்பின் விதிகளை மீறிவிட்டதாக, என்.எஸ்.குழுமம் மற்றும் கியூ சைபர் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வாட்சப் வழக்கு தொடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்களில் தவறவிட்ட அழைப்பின் மூலமாக இந்த உளவு மென்பொருள் ஊடுருவிள்ளதாக கூறியுள்ளது.

“இந்த உளவு மென்பொருள் தாக்குதலில் பொது சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது நூறு பேராவது பாதிக்கப்பட்டிருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சொன்னால் இந்த எண்ணிக்கை மேலும் கூடலாம்” எனவும் வாட்சப் கூறியுள்ளது.

என். எஸ். ஓ. நிறுவனம் இந்த குற்றச்சாட்டுக்களை வேறு வழியின்றி மறுத்தாலும், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தங்களுடைய வணிக மற்றும் நிர்வாக அமைப்புகளில் ‘மனித உரிமை கொள்கை’யை அமலாக்கியிருப்பதாகச் சொன்னது அந்நிறுவனத்தின் சந்தேகத்தில் தள்ளியது. மேலும், இந்நிறுவனம் அரசாங்க முகமைகளுக்கு மட்டுமே தங்களுடைய ‘தயாரிப்புகளை’ விற்பதாகச் சொல்கிறது.

படிக்க:
கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?
♦ கொலை செய்தது போலீசுதான் – மதுரை படுகொலையில் முதல் திருப்பம் !

கடந்த செப்டம்பர் 2018-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு குழு, ‘சிட்டிசன் லேப்’, “இந்தியா உள்ளிட்ட 45 நாடுகளில் 33 பெகாசஸ் நடத்துநர்கள் பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தியதைக் கண்டறிந்தோம்” எனக் கூறியிருந்தது. 2018-ம் ஆண்டின் அறிக்கை ஜூன் 2017 முதல் செப்டம்பர் 2018 வரை இந்திய இணைப்பு செயலில் இருந்ததை சுட்டிக்காட்டியது.

“ஆசியாவில் கவனம் செலுத்திய ஐந்து நடத்துநர்களை நாங்கள் அடையாளம் கண்டோம். அரசியலை கருப்பொருளாகக் கொண்ட ஒரு நடத்துநர் ‘கங்கை’ என்ற பெயரில் ஒரு டொமைனை பயன்படுத்தினார்” எனவும் சிட்டிசன் லேப் தெரிவித்திருந்தது.

பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர் ஜமால் கசோகியை சவுதி அரேபியா கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பயங்கரவாதிகளை உளவு பார்க்க எனக் கூறிக்கொண்டு அரசாங்கங்களுக்கு இத்தகைய உளவு மென்பொருள்கள் விற்கப்படுகின்றன. பெரும்பாலும் தங்களை விமர்சிப்பவர்கள், மாற்று கருத்து உள்ளவர்களை உளவு பார்க்கவே இவை பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு சவுதியும் இந்தியாவுமே உதாரணங்கள். இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்களை ‘பயங்கரவாதிகளைவிட மோசமான எதிரிகளாகவே’ பார்க்கிறது மோடி அரசாங்கம்!

இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்களின் கைபேசி தகவலை திருடும் வேலையை, பத்திரிகையாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் காவிகளைத் தவிர வேறு யார் கொடுத்திருக்கக் கூடும்?


கலைமதி
நன்றி :  இந்தியன் எக்ஸ்பிரஸ். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க