பரி மதிப்பை உற்பத்தி செய்தல் : ஓர் உழைப்பாளியின் தினசரி அத்தியாவசியப் பொருள்களின் சராசரி அளவை உற்பத்தி செய்ய ஆறு மணி நேர சராசரி உழைப்பு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். மேலும், 3 ஷில்லிங் பெறுமான அளவு தங்கத்தில் ஆறு மணி நேரச் சராசரி உழைப்பு செயலாக்கப்பட்டிருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது, 3 ஷில்லிங் என்பது அந்த உழைப்பாளியினுmடைய உழைக்கும் சக்தியின் ஒரு நாள் மதிப்பின் விலையாக அல்லது பணக்குறியீடாக இருக்கும். அவன் தினசரி ஆறு மணி நேரம் வேலை செய்தால் தினமும் தனக்குத் தேவையான சராசரி அளவு அத்தியாவசியப் பொருள் களை வாங்குவதற்கு, அதாவது தன்னை ஓர் உழைப்பாளியாக உயிர்வாழச் செய்து கொள்வதற்குப் போதுமான மதிப்பை தினசரி உற்பத்தி செய்வான்.

ஆனால் நமது உழைப்பாளியோ கூலி உழைப்பாளி. எனவே அவன் தன் உழைக்கும் சக்தியை ஒரு முதலாளிக்கு விற்க வேண்டும். அதை அவன் தினசரி 3 ஷில்லிங்குக்கோ, அல்லது வாரம் 18 ஷில்லிங்குக்கோ விற்றால், அதை அதனுடைய மதிப்புக்கு விற்றவனாகிறான். அவன் ஒரு நூற்பாளி என்று வைத்துக் கொள்வோம். அவன் தினசரி ஆறு மணி நேரம் வேலை செய்தால், பஞ்சின் மீது அனுதினமும் 3 ஷில்லிங் மதிப்பைக் கூட்டுவான். அவனால் தினசரி கூட்டப்படும் இந்த மதிப்பு தினசரி அவன் பெறும் அவனுடைய கூலி அல்லது உழைக்கும் சக்திக்கான விலைக்குத் துல்லியமாகச் சமமானதாக இருக்கும். ஆனால் இந்நிலையில் எந்த அளவு உபரி மதிப்போ அல்லது உபரி உற்பத்திப் பொருளோ முதலாளிக்குப் போகாது. இங்கேதான் நமக்கு உண்மையான சிக்கல் ஏற்படுகிறது.

தொழிலாளியின் உழைக்கும் சக்தியை வாங்கி அதன் மதிப்பைக் கொடுத்துவிடுவதன் மூலம் முதலாளி, மற்றெந்த வாங்குவோரையும் போலவே, வாங்கிய பண்டத்தை உபயோகித்துக் கொள்ளும் அல்லது பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெறுகிறான். ஓர் இயந்திரத்தை ஓட வைத்து அதை உபயோகித்துக் கொள்வதை அல்லது பயன்படுத்திக் கொள்வதைப் போலவே ஓர் உழைப்பாளியை வேலை செய்ய வைப்பதன் மூலம் அவனுடைய உழைக்கும் சக்தி உபயோகித்துக் கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. எனவே, தொழிலாளியின் உழைக்கும் சக்தியான தினசரி, அல்லது வார மதிப்பைக் கொடுத்து விடுவதன் மூலம் முதலாளி, அந்த உழைக்கும் சக்தியை முழு நாளைக்கும் அல்லது முழு வாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும் அல்லது வேலை செய்ய வைக்கும் உரிமையைப் பெறுகிறான். வேலை நாள் அல்லது வாரத்திற்குச் சில குறிப்பிட்ட வரையறைகள் நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பற்றி இன்னும் ஆழமாகப் பின்னால் ஆராய்வோம்.  (நூலிலிருந்து பக்.5-6)

படிக்க:
மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
அடுத்த தலைமை நீதிபதி பாப்டே : ஜாடிக்கேற்ற மூடி !

கூலிக்காக ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் 100 பவுன் என்று வைத்துக் கொள்வோம். உபரி மதிப்பாகச் சிருஷ்டிக்கப்பட்டதும் 100 பவுன் என்று வைத்துக் கொள்வோம். தொழிலாளியின் வேலை நேரத்தில் பாதி ஊதியம் தரப்படாத உழைப்பு கொண்டது என்பதை இது நமக்குக் காட்டும். கூலிக்காக ஈடுபடுத்திய மூலதனத்தின் மதிப்பைக் கொண்டு இந்த லாபத்தை அளவிட்டால், லாப விகிதம் நூறு சதவிகிதம் ஆகிறது என்று நாம் சொல்வோம்; ஏனென்றால் ஈடுபடுத்தப்பட்ட மதிப்பு நுறாகவும் பெறப்பட்ட மதிப்பு இரு நூறாகவுமிருக்கும்.

வேறு வகையில், கூலியாக ஈடுபடுத்தப்பட்ட மூலதனத்தை மட்டுமின்றி, ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், உதாரணமாக, மொத்த மூலதனம் 500 பவுனில், 400 பவுன் கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள் முதலியவற்றின் மதிப்பைக் குறிப்பதாக இருக்குமானால், அப்போது லாப விகிதம் இருபது சதவிகிதம் மட்டும்தான் என்று சொல்வோம்; ஏனென்றால் லாபம் ஆகிய நூறு, ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனத்தில் ஐந்தில் ஒரு பங்காகத்தானிருக்கும்.

லாப விகிதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட முதல் முறையே ஊதியம் கொடுக்கப்பட்ட உழைப்புக்கும் ஊதியம் கொடுக்கப்படாத உழைப்புக்குமிடையே உள்ள உண்மையான விகிதாச் சாரத்தை, உழைப்பின் exploitation (இந்தப் பிரெஞ்சுச் சொல்லை உபயோகப்படுத்த நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்) உடைய உண்மையான தரத்தை உங்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரே முறையாகும். இரண்டாவது முறை பொது வழக்கிலிருக்கும் முறை, உண்மையில் சில நோக்கங்களுக்குப் பொருத்தமான முறையே. எவ்வகையிலும், முதலாளி தொழிலாளியிடமிருந்து அபகரிக்கும் இலவச உழைப்பின் அளவை மூடி மறைப்பதற்கு இது மிகவும் உபயோகமாக இருக்கிறது. (நூலிலிருந்து பக்.13)

நூல் : உபரி மதிப்பு என்றால் என்ன ?
ஆசிரியர் : கார்ல் மார்க்ஸ்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி., சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2625 8410 | 2625 1968 | 2635 9906
மின்னஞ்சல் :ncbhbook@yahoo.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க