Thursday, April 17, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுதிருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு !

திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிப் பாம்பு !

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக  மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

-

பெரியார் சிலை விவகாரத்திற்குப் பிறகு மீண்டும் சிலையை வைத்துத் தனது அரசியலை ஆரம்பித்துள்ளது காவிக் கும்பல். இந்த முறை அது திருவள்ளுவர் சிலை.

கடந்த நவம்பர் 1 அன்று தமிழ்நாடு தினத்தன்று வ.உ.சி, பாரதியார் ஆகியோரின் படங்களோடு காவி உடுப்பு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, கை – நெற்றியில் பட்டை என திருவள்ளுவரை இந்துச் சாமியாரைப் போலக் காட்டும் படம் ஒன்றையும் சேர்த்து வெளியிட்டது தமிழக பாஜக. நவம்பர் 2 அன்று திருவள்ளுவர் படத்தை மட்டும் தனியாக வெளியிட்டு, திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் அல்ல எனும் புதிய ‘கண்டுபிடிப்பை’ வெளியிட்டது.

திருவள்ளுவரைக் காவிமயமாக்கும் இந்த முயற்சியைக் கண்டித்து சமூக வலைத்தளவாசிகள் #BJPInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டிங் செய்தனர். பலரும் திருவள்ளுவரை மதக் குறியீடாக்கத் துடிக்கும் பாஜகவின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 3 ஞாயிறு அன்று இரவு தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் உள்ள பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையின் மீது சாணியை வீசியெறிந்து அவமதித்திருக்கிறது ஒரு கும்பல். இதனைக் காலையில் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளன.

படிக்க :
♦ சென்னை பல்கலை : ஆர்.எஸ்.எஸ் தருண் விஜய்யே வெளியேறு !
♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !

திருவள்ளுவருக்குக் காவி உடுப்பை போட்டோஷாப் செய்த விவகாரத்தில், காரைக்குடி எச்சையார் அவர்கள் விடுத்த டிவிட்டில், திருவள்ளுவர் சனாதன தர்மத்தின்படிதான் திருக்குறளை எழுதினார் என்றெல்லாம் கதையளந்து உள்ளார். மேலும் நான்கைந்து குறள்களை எடுத்துப் போட்டு அதற்கு இந்துத்துவப் பொழிப்புரையையும் உதிர்த்து உள்ளார் எச்சையார்.

அதிமுகவின் பாஜக ஸ்லீப்பர்செல்லான மாஃபா பாண்டியராஜன், திருவள்ளுவர் நாத்திகர் இல்லை என வாண்டடாக வந்து வண்டியில் ஏறுகிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவள்ளுவரையும் ஒரு சனாதனச் சாமியாராக்குவதற்கான காவிக் கும்பலின் முயற்சியே இது. ஏற்கெனவே இந்து மதத்தையும் பார்ப்பனியத்தையும் சனாதனத்தையும் தத்துவார்த்த ரீதியில் ஆய்ந்து அம்பலப்படுத்திய அம்பேத்கரையே காவிமயமாக்கிய இக்கும்பல் திருவள்ளுவரையும் எளிமையாக தூக்கி விழுங்கிவிடலாம் என எண்ணுகிறது.

இதற்கான அடித்தளம் இடுவதை 6 ஆண்டுகளுக்கு முன்னரே தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் மூலம் முயற்சித்தது காவிக் கும்பல். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், தமிழகத்தில் களமிறக்கி விடப்பட்ட தருண் விஜய், தமிழின் பெருமை பற்றிப் பேசி, வட மொழி திணிப்பு தவறானது என்றும் கம்பு சுழற்றினார்.

அச்சமயத்தில் பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்- என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ… தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!” என்று பேசியிருக்கிறார் தருண் விஜய்.

தருண்விஜய்-யுடைய தமிழ்ப்பற்றின் யோக்கியதையைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், அச்சமயத்தில் கருணாநிதி, வைகோ, ராமதாசு ஆகியோரே அவரைப் பாராட்டி உச்சிமோந்தனர். ‘கவிப்பேரரசோ’ கவிதையால் மோந்தார். தன்னடக்கத்தோடு பாராட்டுக்களை ஏற்றுக் கொண்ட தருண் விஜய்யோ, “தமிழகத்தில் வட இந்திய மொழிகளை விடக் கூடாது. தமிழை வளர்க்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியில் வழக்காட அனுமதி வேண்டும்”, என்றெல்லாம் பேட்டிகளை அளந்துவிட்டார்.

தமிழகத்தில் இப்படிப் பேசிய இதே தருண் விஜய் அதே மாதத்தில் வட இந்தியாவில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்து விடும்…. …..சமஸ்கிருதம்தான் இந்தியா. இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே, அதனை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும்.” (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013) என்று குறிப்பிடுகிறார்.

தற்போது மோடி இதே வேலையை செய்துவருகிறார். தனது அமெரிக்கப் பயணம், ஐ.நா. சபை, சமீபத்திய ஆசியான் மாநாடு என அனைத்து இடங்களிலும் தனது உரையில் தமிழையும் திருக்குறளையும் புகழ்ந்து பேசி, தனது ‘தமிழ்க் காதலை’ வெளிப்படுத்தி வருகிறார் மோடி.

அதே சமயம், பள்ளிக்கூடங்கள் தொடங்கி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் வரையில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதற்கான சித்து வேலைகளை செய்து வருகிறார் மோடி.

தாமிரபரணி புஸ்கரம், அத்திவரதர் திருவிழா, வைகைப் பெருவிழா என இந்து மத நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பல், தமிழ் கலாச்சாரத்தை இந்துக் கலாச்சாரமாகத் திரிக்கும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

காவிக் கும்பலின் தமிழ்க்காதல் குரளி வித்தைக்குப் பலியானால், கோமியமே (மாட்டு மூத்திரமே) இந்த தமிழகத்தின் தேசிய பானமாக அறிவிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை எழுதி வைத்துக் கொள்ளலாம்.


நந்தன்