ந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் போது தங்களுக்கு பதில் வேறு நபர்களை தேர்வெழுதச் செய்து ஆள்மாறாட்டம் செய்ததன் மூலம், தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஐந்து மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த முறைகேடு மாணவர்களின் கைதுடன், ஊடக வெளிச்சம்படாமல் அடங்கிப் போனது.

வியாபம் முறைகேட்டை ஒத்த இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில், நிச்சயமாக நாடு முழுவதும் வலைப்பின்னல் கொண்டதொரு மாபியா கும்பல் இருக்கிறது. அது மட்டுமன்றி இதற்கு முன்னரும் இந்த கும்பல் இது போல் ஆள்மாறாட்டம் செய்திருக்க வாய்ப்பும் நிச்சயமாக இருக்கிறது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக சமீபத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர், இதே போன்று கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சென்னை மருத்துவக் கல்லூரி, போலீசில் புகாரளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இந்த மாணவர் கடந்த ஆண்டு பீகாரில் நீட் தேர்வு எழுதியுள்ளார், நீட் தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படமும், மாணவரது புகைப்படமும் வேறு வேறாக உள்ளது. இது குறித்து தற்போது தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் 32 மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறைச் சோதனையின் போது, அந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும், சராசரியாக ஒரு மாணவரிடம் 60 லட்சம் ருபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு, முறைகேடான வகையில் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் ஏஜென்டுகள் மூலம் போலியான பெயர்களில் நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கலந்தாய்வின் போது குறிப்பிட்ட கல்லூரிகளில் சேர்வதாக கூறிவிட்டு பின்னர் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையின் போது வராமல் தவிர்த்துவிடும் நடைமுறையை பின்பற்றியுள்ளனர். இதன் மூலம், மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகு, காலியாக இருக்கும் அந்த இடம் கல்லூரிக்கே மீண்டும் வழங்கப்பட்டு விடும். அந்த இடத்தை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகள் லட்சக்கணக்கான ருபாய் வாங்கிக் கொண்டு பணக்கார மாணவர்களுக்கு விற்றுவிடும்.

படிக்க:
மோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு !
♦ நீட் தேர்வு மோசடி : தேசியமயமாக்கப்படும் வியாபம் !

கர்நாடக மாநிலக் கல்லூரிகள் முறைகேட்டின் மூலம் காலி இடங்களை உருவாக்கி நிர்வாக இடங்களை விற்பனை செய்கிறது என்றால், தமிழக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அரசே நிர்வாக ஒதுக்கீட்டிற்கு புதிய இடங்களை வாரி வழங்குகிறது. மருத்துவச் சேர்க்கையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உள்ள நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 260 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இந்த ஆண்டு வெறுமனே 53 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். காலியாக உள்ள 207 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவக் கலந்தாய்வில் காத்திருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த இடங்களை மருத்துவக் கல்லூரிகளிடம் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடங்கள் அனைத்தையும் கல்லூரிகள் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, நீட் தேர்வில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

1-NEET-Exam-impersonation

இணையத்தில் “நீட்டில் பாஸ் செய்தால் போதும் உங்களுக்கு கட்டாயமாக மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருகிறோம்.” என்று பகிரங்கமாகவே விளம்பரம் செய்யும் அளவிற்கு மருத்துவக் கல்வி இடங்கள் கூவிக் கூவி விற்கப்படுகின்றன.

நாமக்கல்லைச் சேர்ந்த நீட் பயிற்சி மையமான கிரீன் பார்க்கில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 100 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத கருப்புப் பணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. நீட்டில் ஆள்மாறாட்டம் செய்து தற்போது கைதாகியிருக்கும் உதித் சூர்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்களும் இந்த பயிற்சி மையத்தின் சென்னைக் கிளையில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி
♦ நீட் கொடுமைகள் 2019 : இன்னும் எவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளப் போகிறோம் ?

இந்த கிரீன் பார்க்கைப் போல நூற்றுக்கணக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் மட்டும் செயல்படுகின்றன. இவர்கள் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கின்றனர். நீட் பயிற்சி, மாணவர் சேர்க்கை என்பது தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ருபாய் புழங்கும் கருப்புச் சந்தையாக உள்ளது. மருத்துவப் படிப்பில் திறமையானவர்களுக்கு மட்டும் இடம் வழங்கப்போவதாகக் கூறி கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுதான் இந்தச் கள்ளச்சந்தையின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.

அதே சமயம் தகுதியும் திறமையும் வாய்ந்த அனிதாவைப் போன்ற மாணவர்களோ, பணம் இல்லை என்ற ஒரே காரணத்தினால் மருத்துவக் கனவு தகர்ந்து, நொறுங்கிப் போய் விடுகின்றனர். நீட் என்பது வெறுமனே மாணவர்களை மட்டும் பாதிக்கின்ற பிரச்சினை அல்ல. மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு முன்னரே லட்சக்கணக்கில் செலவு செய்து நீட்டிற்கு தயாராகி, அதன் பின்னர் கல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்து வெளியே வரும் மருத்துவர்கள், மக்களுக்கு நியாயமான தரமான மருத்துவத்தை அளிப்பார்களா இல்லை தாங்கள் போட்ட முதலீட்டை வட்டியும் முதலுமாக திருப்பி எடுக்க நினைப்பார்களா?

நீட் தேர்வின் மூலம் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்கள் மருத்துவக் கல்வியில் நுழைவது தடுக்கப்படுவதுடன், ஏற்கெனவே வணிகமயமாகி வரும் மருத்துவத் துறையின் சீரழிவு துரிதப்படுத்தப்படுகிறது. இதனைத் தடுக்க நீட் தேர்வை ஒழித்துக் கட்டுவதோடு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியை தனியார் முதலாளிகளின் கைகளில் இருந்து பறிப்பதுதான் ஒரே வழி.

– வின்சென்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க