2600 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியின் தொன்மை. தமிழ் சமூகத்தின் மேம்பட்ட நகரப்பண்பாடு! கீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள்! பாதுகாப்போம்! பரப்புவோம்!

கீழடி

என்ற தலைப்பில் ஒசூர்-சாந்திநகர் பிரபா செலிபிரேசன் ஹாலில் காலை 10 மணியளவில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இவ்வரங்கக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தோழர் வனவேந்தன், தமிழகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் தமிழரசன், சமூக விஞ்ஞான ஆய்வரங்கத்தை சேர்ந்த தோழர் ரகுவரன் ஆகியோர் உரையாற்றினர்.

கீழடி பற்றி கவிதை

பள்ளி மாணவி புனிதா கீழடியை வரவேற்று கவிதை வாசித்தார்.  தொல்லியல் துறை ஆய்வாளர் தோழர் சாந்தலிங்கம் அய்யா அவர்கள் விரிவான அளவில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினை சேர்ந்த தோழர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

கீழடி அகழாய்வு

தோழர் பரசுராமன் தனது தலைமையுரையில், கடந்த 12 ம்தேதி கீழடிக்கு சென்று வந்த தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் கீழடி விசயத்தில் அக்கறைக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை விளக்கிப்பேசினார். இந்துக்களின் நலனுக்காக உள்ளதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி கும்பல் அவர்களால் சொல்லிக்கொள்ளப்படும் அந்த பெரும்பான்மை ‘இந்து’-க்களின் நலனுக்கே அவர்கள் எதிரானவர்கள் என்பதை அம்பலப்படுத்திப் பேசினார்.  வேதகால எச்சங்கள் வேற எங்கு தோண்டினாலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆதலால் கீழடியைக்கண்டு அவர்கள் பதறுகிறார்கள். நாம் கீழடி தரும் சான்றுகளை பாதுகாப்போம்! பரப்புவோம்! என்று தனது தலைமை உரையை முடித்தார்.

கீழடி அகழாய்வு முடிவுகள்

திரு. தமிழரசன் தனது உரையில், நாம் இதுவரையில் வரலாறு என்று பாடப்புத்தகங்கள் வாயிலாக கஜினி முகம்மது 18 முறை படையெடுத்தான் என்று மனனம் செய்துவந்துள்ளோம். இதனால் எள்முனையளவாவது நமக்கு பயன் உண்டா? என்று கேள்வி எழுப்பி ஒரு 40 வருட அத்திவரதரை வைத்துக் கொண்டாடுகிற மனநிலை அளவிற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழமையான நமது கீழடி நகர நாகரிகத்தை நம் மக்கள் கொண்டாடுகிறார்களா என்றால்..? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

நம்மைப்போன்ற முற்போக்கு இயக்கங்கள் மட்டுமே இதனை கையிலெடுத்துக் கொண்டாடும் நிலையில் உள்ளோம். இதே கீழடியில் தோண்டும்போது பானையிலிருந்து ஒரு பூணூலோ அல்லது விநாயகர்-  பெருமாள் சிலைகளில் ஏதாவது ஒன்றோ கிடைத்திருந்திருந்தால் அதனை உலகம் முழுவதும் பரப்பியிருப்பான் நம் எதிரிகள். ஆனால் நமக்கு சாதி-மதம்-கடவுளுக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை, வேதகால நாகரிகத்துக்கும் நமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற நமக்குக் கிடைத்த சான்றுகளை இப்படியாக கூட்டம் போட்டும் பேசும் நிலையிலேதான் நாம் உள்ளோம். உண்மையில் நிச்சயம் ஒரு திருவிழாவைப்போல மக்களை அணிதிரட்டி இதையெல்லாம் பேசவேண்டியிருக்கிறது. அந்தவகையில் பட்டித்தொட்டியெல்லாம் இந்த கீழடியின் பெருமையை கொண்டுச் சென்றுகொண்டிருக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணிக்கு நன்றி பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.

கீழடி அகழ்வாரய்ச்சி

அடுத்ததாக பேசிய தோழர் வனவேந்தன் தனது உரையில், கீழடி தொடர்பாக பெரும் பங்களிப்பு செலுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு நன்றி கூறியும், கீழடியிலே என்ன நடந்தது, அது நாளை என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதையெல்லாம் பட்டியலிட்டு விழிப்புணர்வு கொள்ளும் வகையில் எடுத்து சொல்ல வந்திருக்கும் தோழர் சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கு பெரியார் ஆயிரம் எனும் நூலை தந்து சிறப்பித்தும் தனது உரையை தொடங்கினார்.

தனது பள்ளிப்படிப்பின் போது ஆரிய நாகரிகத்திற்கும், திராவிட நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்தி படித்ததை நினைவுகூர்ந்து சிந்துசமவெளி நாகரிகம் என்பதே திராவிட நாகரிகம்தான் என்றும் அதன் தொடர்ச்சி்யை கீழடியில் உறுதி செய்யப்பட்டுள்ளதை கண்டு நெகிழ்ந்ததாக பதிவுசெய்தார். கீழடிக்கு தான் சென்று வந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்றைக்கு வாட்சப், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் நமது இளைஞர்கள் விழிப்புடன் பதிவிட்டிருப்பதை பார்க்கும்போது இதுபோன்ற விழிப்புணர்வுதான் நம்மை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள செய்கிறது. இந்த விழிப்புணர்வு சுடரை நாம் அணையாமல் ஏந்தி நிற்போம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அருமைத்தோழர்கள் தமிழ் சார்ந்த மற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இதுபோன்ற நிகழ்வை நடத்துவது மிகவும் வரவேற்ககூடியதாக உள்ளது. இதுபோன்ற முயற்சிகளை மேலும் மேலும் தொடரவேண்டும் என்றும், இதற்கு நாங்கள் எப்போதும் துணைநிற்போம் என்று சொல்லி தனது உரையை முடித்தார்.

கீழடி தமிழர் நாகரிகம்

திரு. ரகுவரன் தனது உரையில், நாம் தமிழ் இனம் என்றவகையில் இனம் சார்ந்து பார்ப்பதோடு மட்டும் நில்லாமல் சர்வதேசிய கண்ணோட்டத்தோடு இதனை அணுகவேண்டும் என்ற தனது கருத்தை மையமாக முன்வைத்துப்பேசினார். அடுத்ததாக பள்ளி மாணவி புனிதா, கீழடி அகழாய்வு முடிவுகள் பற்றி ஊடகங்களில் படித்தது மற்றும் தோழர்களின் பிரச்சாரத்தின்போது ஊக்கத்தோடு கவனித்ததை வைத்து உணர்வோடு கவிதை எழுதிக்கொண்டுவந்து அரங்கக்கூட்டத்தில் கூட்டத்தலைவரிடம் அனுமதி கேட்டு வாசித்தது பரவலான வரவேற்பைப் பெற்றது.

பார்ப்பனிய எதிர்ப்பு கீழடி

திரு. சாந்தலிங்கம் அய்யா தனது சிறப்புரையில், நாம் இன்று கீழடி அகழாய்வு முடிவுகளை மட்டும் உங்கள் இடத்திலேயே வந்து சொல்வதற்கு காரணம் இந்த கீழடி அகழாய்வு வந்த பிறகு நமது தமிழ்ச் சமூகம் பலதரப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது.

இந்த எதிர்ப்புகள் தலைமையுரையாற்றிய தோழர் பரசுராமன் சொன்னது போல குஜராத்தில் எப்படி 40 ஆண்டு காலம் தயாரிக்கப்பட்டதோ அதைப் போல தமிழகத்திலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு களத்தை தயாரித்து வைத்துக்கொண்டு, நமக்கு சவாலாக பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கீழடி முடிவுகள் அவர்களது கண்களை உறுத்துகின்றன. இதுவரை பல காலமாக சொல்லிக்கொண்டு வந்த கருத்தாக்கங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்ட காரணத்தாலேயே இப்படிப்பட்ட ஆய்வுகள் தொடரக் கூடாது என்பதற்காகவே எந்தெந்த வழிகளிலெல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அதற்கான வேலைகளிலேயே அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் இதை நாம் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக படித்த சமூகத்தின் மத்தியில் கொண்டுச் செல்ல வேண்டியது உடனடி கடமையாக  இருக்கிறது.

தோழர் பரசுராமன் பிரச்சாரத்தின்போது ஒரு வழக்கறிஞர் எதிர்நிலையில் நின்று விவாதித்த விசயத்தை இங்கே பதிவு செய்தார் அல்லவா? அதாவது, தமிழுக்கு என்று தனித்த நாகரிகம், எழுத்து, இலக்கண, இலக்கிய வரலாறு இல்லை எல்லாமே சமஸ்கிருதத்தின் தழுவல் என்று சொல்லியதோடு மட்டுமின்றி திருக்குறளே தமிழ் தானா என்று சந்தேகம் இருக்கிறதாகவும் சொன்னாரல்லவா? அது அந்த வழக்கறிஞரின் சொந்த கருத்து அல்ல. அவரை சொல்ல வைத்திருக்கிறது ஒரு நூல். திரு. நாகசாமி என்ற தொல்லியல் வல்லுநர், என்னுடைய ஆசான்தான் அந்த நூலை வெளியிட்டார். வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.

இப்போதெல்லாம் விருதுவேண்டும், பட்டம், பதவி வேண்டும் என்று சொன்னால் சமஸ்கிருதத்தின் பெருமையை தூக்கிப் பிடித்தால் உடனடியாக கவனிக்கப்படும். அதற்கு எதிராக பேசினால் கௌரி லங்கேஷ் மாதிரி வேறு வகையாக கவனிக்கப்படும் அதுதான் இன்றைய காலச் சூழல்.புத்தக கடை

நான் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து வந்து இருக்கிறேன். இதுவரை கிட்டத்தட்ட 75% இந்தியாவை பார்த்துவிட்டேன். தமிழ்நாட்டை போன்ற ஒரு வளர்ந்த சமூகம் படிப்பறிவு பெற்ற சமூகம் பல்வேறு துறைகளிலும் பல்வேறு வகையான வளர்ச்சிகளை அடைந்த சமூகம் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை. இப்படிப்பட்ட வளர்ச்சி என்பது இன்று நேற்று ஏற்பட்ட வளர்ச்சி அல்ல என்பது தான் கீழடி நமக்கு அடையாளப்படுத்தி இருக்கிறது.

கீழடியில் இப்போது கிடைத்து இருக்கக்கூடிய மிகத் தொன்மையான சான்று என்பது கிமு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்து குறித்த ஒரு பானை ஓடு.  அசோகரின் பிராமி எழுத்துக்களைவிட தமிழ் 300 ஆண்டுகள் தொன்மையானது என்று சான்றுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலரால் மட்டுமல்ல, பரவலாக சாமானிய மக்களிடத்தில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் எழுத்தறிவு இருந்தது என்பதை இது நிரூபிக்கிறது. இந்த அகழாய்வில் 1001 ஓடுகள் எழுத்துவரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன. இது சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் திராவிட தமிழ் நாகரிகத்திற்கும் இடையிலான தொடர்பையும் காட்டுவதாக உள்ளது.

நெசவு, உழவு, வணிகம், கட்டிடம், தொழில் நுட்பம், அழகியல், விளையாட்டு என்றெல்லாம் தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றி சங்ககால இலக்கியங்களில் எல்லாம் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை அல்ல, உண்மையே என நிரூபிக்கும் வகையில் ஆய்வுமுடிவுகள் வந்துள்ளதை கோடிட்டிக் காட்டி வேதகாலத்தில் குறிப்பிடப்படும் புராண கதைகள், அதனடிப்படையிலான கடவுள், மதம், சாதி போன்றவை இருந்ததற்கான எந்த அறிகுறியும் கீழடியில் கிடைக்கவில்லை. இதிலிருந்து தமிழக மக்கள் சமத்துவமாக வாழ்ந்துள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ளும் வகையில் சான்றாக அமைகிறது.

ஆரிய கருத்தாக்கங்கள்தான் இந்திய வரலாறாக நாம் இதுவரை படித்துவந்துள்ளோம். இனி அவற்றை மறுபரிசீலனை செய்து திருத்தி எழுதப்படவேண்டும். அது ஒன்றுதான் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறையாக இருக்கமுடியும். இதற்கு நம்மை ஆள்வோர்கள் அவ்வளவு எளிதாக சம்மதிக்கமாட்டார்கள் என்ற எச்சரிக்கையை மனதில்கொண்டு அதனை முறியடிக்கும் வகையில் கீழடி அகழாய்வு முடிவுகளை நாம் மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்று விழிப்புணர்வூட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று சொல்லி தனது உரையை நிறைவுச்செய்தார்.

கீழடி அகழாய்வு அரங்ககூட்டம்

இக்கூட்டத்தில் திரளான அளவில் தமிழ் உணர்வாளர்கள், தொழிலாளர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் கலந்துக்கொண்டனர். புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் உள்ளிட்ட புரட்சிகர முற்போக்கு அமைப்புகளின் வெளியீடுகள் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கீழடி குறித்து சிறப்பு கட்டுரைகளை தாங்கி வெளிவந்த புதிய கலாச்சாரம் இதழ் அனைத்தையும் வாங்கிச்சென்றனர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசனின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவுற்றது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
ஒசூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க