Thursday, April 24, 2025
முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

பதவி விலகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்ணனுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.

-

முன்னாள் இந்திய குடிமைப்பணி அதிகாரியான கண்ணன் கோபிநாத், ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாகக் கூறி கடந்த ஆகஸ்டு மாதம் பதவி விலகினார். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்ணனுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆட்சியராக இருந்த கண்ணன் கோபிநாத், தனது பதவியிலிருந்து விலகியபோது, அவர் மீது கீழ்படியவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், டாமன்-லிருந்து அழைத்த ஒரு அதிகாரி தன்னிடம் முகவரி கேட்டதாகவும், பின் குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்ததாகவும் கண்ணன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனக்கு சொந்த வீடில்லை, வாடகை வீட்டில் இருப்பதாக தெரிவித்த நிலையில், குற்றப்பத்திரிகை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்.

“வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினருக்கிடையே என்ன நடக்கிறது என்பதை நிர்வகிக்க முடியாத நிலையில் உள்துறை அமைச்சகம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தேசத்தின் நலன் கருதி, நீங்கள் பலகீனமாக இருக்கும் நிலையில் நிறைய பிரச்சினைகளைக் கொடுக்க நான் தயாராக இல்லை. எனவே, இந்தஆவணத்தை ஏற்கிறேன்” என பகடியாக பதிவிட்டுள்ள கண்ணன் கோபிநாத், குற்றப்பத்திரிகையையும் அதில் இணைத்துள்ளார்.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
♦ கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

மற்றொரு ட்விட்டர் பதிவில், “பதவி விலகல் கடிதம் கொடுத்து இரண்டு மாதங்களுக்குப் பின், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்” என கூறியுள்ள அவர்,

“எந்தவித அரசியல் செல்வாக்கையும் கொண்டுவரக்கூடாது என எச்சரித்துள்ளார்கள். உள்துறை அமைச்சகத்தை அமித் ஷா தவிர வேறு எவரால் செல்வாக்கு செலுத்த முடியும். அவரிடம் எனக்கு செல்வாக்கு இருந்தால், நானும் முயற்சிக்கிறேன். ஐயா, தயவு செய்து காஷ்மீரின் அடிப்படை உரிமைகள் மீளச் செய்யுங்கள்” என எழுதியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளை அதிகாரவர்க்கத்தினர் வீணடித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கோபம் கொண்டார் என்பதில் வியப்பில்லை எனவும் கண்ணன் கோபிநாத் கூறியுள்ளார். “ஐந்தாண்டுகளுக்குப் பின் ஒளிமிக்க தலைமையாகிவிட்ட நீங்கள், மிரட்டல் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட துன்புறுத்தல்களில் நிபுணத்துவம் உள்ளராக மாறிவிடுவீர்கள் என எதிர்ப்பார்க்கலாம்” எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தன் மீது கோப்புகளை சரியான நேரத்தில் ஒப்படைக்கவில்லை, கேரளாவில் நடந்த நிவாரணப் பணிகள் குறித்த பயண விவரத்தை சமர்பிக்கவில்லை, பிரதமரின் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்படுவது, தனது அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகை ஆணை போல “பயமளிப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.

மோடி – ஷாவின் குஜராத் பயங்கரங்களை எதிர்த்து நின்ற ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்-ஐ அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்தார் என்ற அற்பக் காரணத்துக்காக பணியைவிட்டு நீக்கினார்கள். இருபதாண்டுகளுக்கும் மேலான வழக்கில் அவரை குற்றவாளியாக்கி ஆயுள் சிறையில் தள்ளியிருக்கிறார்கள். ஆனபோதும், கண்ணன் கோபிநாத் போன்ற எதிர்ப்புக் குரல்களை காவி ஆட்சியாளர்களால் முடக்க முடியவில்லை.


கலைமதி
நன்றி :  ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க