Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாகேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !

கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !

இடது முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியின் தொண்டர்களே உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை பலரும் கண்டித்துள்ளனர்.

-

மாவோயிசம் தொடர்பான நூல்களை வைத்திருந்ததாகக் கூறி மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களை உபா (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது கேரளத்தை ஆளும் இடது முன்னணி அரசு.

கோழிக்கோடைச் சேர்ந்த ஆலன் சுகைப், தாஹா ஃபசல் ஆகிய இருவரும் சிபிஐ (எம்) தொண்டர்கள்; கல்லூரி மாணவர்கள். நவம்பர் 1-ம் தேதி பந்தீரன்காவு அருகே இவர்களை ‘சந்தேகத்துக்கு இடமான சூழலில்’ கைது செய்ததாக தெரிவித்துள்ளது கேரள போலீசு.

இவர்களுடன் மற்றொருவரும் இருந்ததாகவும் போலீசு இவர்களை நெருங்கிய போது, கையில் வைத்திருந்த மாவோயிசம் தொடர்பான நூல்களைப் போட்டுவிட்டு, இன்னொருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீசு சொல்கிறது. இந்த ‘காரணத்துக்காக’ போலீசு அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளதோடு, அவர்களுடைய வீடுகளையும் சோதனையிட்டுள்ளது.

pinarayi-vijayanஇடது முன்னணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சிபிஎம் கட்சியின் தொண்டர்களே உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதை பலரும் கண்டித்துள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் இதுகுறித்து போலீசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அட்டப்பாடியில் மாவோயிஸ்டுகள் மூவரை சுட்டுக்கொன்றது கேரள போலீசு. சில நாட்கள் கழித்து மேலும் இருவர் கொல்லப்பட்டனர். சரணடைய வந்தவர்களை கொன்றதாகவும் இது போலி மோதல் கொலை எனவும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.

இந்தப் படுகொலைகளை ஆளும் அரசில் பங்கு வகிக்கும் சிபிஎம் கட்சியின் பொலிட்பிரோ உறுப்பினரான எம். ஏ. பேபியும் சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் கன்னம் ராஜேந்திரனும் கண்டித்திருந்தனர். எத்தகைய சூழ்நிலையில் கேரள போலீசு மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றது என்பதை விளக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தனர்.

இந்தப் படுகொலைகள் கேரள இடதுசாரி கட்சிகளின் தொண்டர்களிடம் விமர்சனத்தை உண்டாக்கிய நிலையில் சிபிஎம் கட்சி தொண்டர்கள் உபா சட்டத்தில் கைதாகியிருக்கிறார்கள்.

படிக்க :
♦ மாவோயிஸ்டுகள் என்றாலே சுட்டுக் கொல்வதா ? PRPC கண்டனம்
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

இந்நிலையில் எம்.ஏ. பேபி, மாணவர்கள் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ளது குறித்து போலீசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். “சிபிஎம் கட்சியும் கேரள அரசாங்கமும் உபா என்பது கருப்புச் சட்டம் என்பதில் சந்தேகம் கொள்ளவில்லை. மாநிலத்தில் உள்ள சில போலீசு அதிகாரிகள் இன்னும் இதில் உள்ள உண்மை புரியவில்லை” என கருத்து தெரிவித்துள்ளார் அவர்.

போலீசின் நடவடிக்கை நியாயமற்றது எனக் கூறியுள்ள கன்னம் ராஜேந்திரன், “இதுபோன்ற வழக்குகளில் உபா பயன்படுத்தக்கூடாது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொறுப்பில் உள்ளவர்களால் மட்டுமே அதுபோன்ற சட்டங்கள் பயன்படுத்த வேண்டும். கோழிக்கோடில் அதுபோன்ற நெறிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது” எனக் கூறியிருக்கிறார்.

இடது முன்னணி அரசின் நடவடிக்கையை கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்திருப்பது தவறானது; அவர்கள் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் மட்டுமே. இதுபோன்றவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். நான் உள்துறை அமைச்சராக இருந்தபோதும்கூட மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் இருந்திருக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

“சிபிஎம் கட்சியின் தொண்டர்கள் மீதே உபா சட்டம் பாய்ந்திருப்பது, பினராயி விஜயனின் காட்டுமிராண்டித்தனமான முகத்தைக் காட்டுகிறது” எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


அனிதா
நன்றி : தி வயர்.