Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !

ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !

“இந்தியாவின் பிரிவினைவாத தலைவர் (India’s Divider in Chief)” என்ற தலைப்பில் டைம் பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஆதிஷ் தசீர் மீதான அரசின் நடவடிக்கை என்ன? விளக்குகிறது இப்பதிவு.

-

ழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதிஷ் தசீரின் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் (OCI) என்ற தகுதியை மத்திய அரசு திரும்பப் பெறுவதை ஏராளமான எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் விமர்சித்திருக்கின்றனர்.

ஆதிஷ் தசீர், இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங் (Tavleen Singh) மற்றும் பாகிஸ்தான் அரசியல்வாதி சல்மான் தசீர் தம்பதியினரின் மகன். தசீர் தன்னுடைய தந்தை ஒரு பாகிஸ்தானியர் என்பதை மறைத்து விட்டதால் OCI அட்டைக்கு அவர் தகுதியற்றவராகிவிட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.

பத்திரிகையாளர் ஆதிஷ் தசீர்.

இது ஒரு “மூர்க்கத்தனமான மற்றும் ஆபத்தான” நடவடிக்கை என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறியிருக்கிறார். இதை “ஒரு பழிவாங்கும் மற்றும் துரதிர்ஷ்டவசமான தந்திரம்” என்று கவிஞர் ஜீத் தெயில் அழைத்திருக்கிறார். “ஒரு பத்திரிகையாளரால் அச்சுறுத்தப்படும் அளவிற்கு அரசாங்கம் பலவீனமாக இருக்கிறதா என்ன” என்று எம்.பி.யும் எழுத்தாளருமான சசி தரூர் கேட்டிருக்கிறார்.

“நீங்கள் மோடிக்கு எதிராக எழுதுகிறீர்கள், நீங்கள் ஒரு இந்தியராக இருப்பதற்கு எதிராக உள்ளீர்கள்!” என்று சுவீடனின் உப்பாசல் பல்கலைக் கழகத்தின் (Uppasal University) சர்வதேச ஆய்வுகள் பேராசிரியரான அசோக் ஸ்வைனின் (Ashok Swain) ஒரு டிவிட்டர் இடுகையை எழுத்தாளர் அமிதாவ் கோஷ் மறு ட்வீட் செய்திருந்தார்.

மோடி குறித்து “இந்தியாவின் பிரிவினைவாத தலைவர் (India’s Divider in Chief)” என்ற தலைப்பில் தேர்தலுக்கு முந்தைய அட்டைப்படக் கட்டுரையை டைம் பத்திரிகையில் தசீர் எழுதியதுதான் மோடி அரசாங்கத்தின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு காரணம்.

படிக்க :
♦ அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !
♦ பெகாசஸ் கண்காணிப்பு அரசியல் சாசன விரோதமானது : நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா எச்சரிக்கை !

“அனுமதி மறுக்கப்பட்டோர்” பட்டியலில் சேர்க்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தியா செல்ல திட்டமிட்டிருந்ததாக டைம் பத்திரிக்கையில் எழுதிய ஒரு புதிய கட்டுரையில் தசீர் கூறினார் – “ஒரு ஆவணப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க சில நாட்களுக்குப் பிறகு கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்குச் செல்லவிருந்தேன், ஆனால் நான் அவ்வாறு செய்தால் தடுப்புக் காவலை விலை கொடுத்து வாங்கக்கூடும் என்று ஒரு வழக்கறிஞர் என்னை எச்சரித்தார். ஒரு பத்திரிகையாளராக என் வாழ்க்கையில் பயமுறுத்தும் பல இடங்களில் இருந்திருக்கிறேன் – ஈரானில் விசாரணை முதல் ஆசாத்தின் சிரியாவில் முக்காபரத் (உளவுத்துறை) விசாரணை கேள்விகள் வரை எதிர்கொண்டுள்ளேன் – ஆனால் இந்தியாவைப் பற்றி அப்படி நான் நினைத்த முதல் முறை இதுதான். எனவே அதற்கு பதிலாக, கிரேக்கத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு திரும்பினேன்”.

“அற்பமாக பழி வாங்கும் ஒரு அரசாங்கத்தின், ஒரு அற்பமான பழிவாங்கும் செயல்” என்று வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான இராமச்சந்திர குஹா கண்டனம் செய்தார். மேலும் ”நம்முடைய அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கை மீதான தசீரின் ஆழமான கட்டுரை…..” என்று கூறி தசீரின் சமீபத்திய டைம் கட்டுரையையும் டிவிட்டரில் பகிர்ந்தார்.

“டாலர்களை சம்பாதிக்க தங்களது இந்திய கடவுச்சீட்டை விட்டுக்கொடுத்த பாரத மாதாவின் தியாகிஸ் (பார்ப்பன பிரிவினர்) தங்களது தந்தைகள் இந்தியர்கள் என்பதை நிறுவ போதிய ஆவணங்கள் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று எழுத்தாளரும் புராண ஆய்வாளருமான தேவ்தத் பட்னாயக் டிவீட் செய்தர்.

இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட சவுதி அரேபிய எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை எழுத்தாளர் அங்கூர் பரத்வாஜ நினைவுக் கூர்ந்தார். “ஒரு பத்திரிகையாளர் / எழுத்தாளரின் விமர்சனம் குறித்து ஒரு அரசாங்கம் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை. எனவே அதை ஒன்றுமில்லாமல் செய்யவும் மற்றவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் நம்பமுடியாத வலுவான நடவடிக்கையை அது எடுத்தது. நான் ஜமால் கஷோகியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? ”என்று பரத்வாஜ் டிவீட் செய்துள்ளார்.

“இது சௌகிதார்களின் மிகவும் மட்டமான செயல். உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் ஆதிஷ் தசீரின் “இரட்டைப் பிறப்பாளர்கள்” என்ற நூலில் குறிப்பாக ஏழைகள் கூட தங்கள் இந்து அடையாளத்தைத் தேடத் தொடங்கியிருக்கின்றனர்” என்று கூறுவதை கேட்டு மகிழ்ச்சியடைவார்கள் என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மனு ஜோசப் டிவீட் செய்தார்.


சுகுமார்
நன்றி : டெலிகிராப்.