டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்க, மத்திய ரிசர்வ் படை போலீசை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிறுத்தியது பல்கலை நிர்வாகம். ஆனபோதும், தங்களுடைய கோரிக்கை ஏற்கும்வரை போராட்டங்களை நிறுத்தப்போவதில்லை என மாணவர்கள் உறுதியாக நிற்கின்றனர்.
கடந்த 19 ஆண்டுகளாக விடுதி கட்டணம் உயர்த்த பல முறை முயற்சிகள் நடந்தபோதும் மாணவர்களின் எதிர்ப்பின் காரணமாக கட்டண உயர்வு கைவிடப்பட்டது. ஆனால், மத்திய அரசாங்கத்தின் கல்வி கொள்கைகளுக்கு துணைபோகும் பல்கலை நிர்வாகம், கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
விடுதியில் தனி அறை மாத வாடகை ரூ.20 லிருந்து ரூ. 600 ஆகவும், இருவர் தங்குவதற்கான மாத வாடகை ரூ. 10 லிருந்து ரூ. 300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது அறைக்கான வாடகை மட்டுமே எனவும் புதிதாக விடுதி சேவைக்கட்டணம் என ஒன்றை புகுத்தியுள்ளது பல்கலைக்கழகம். அதாவது பராமரிப்பு, விடுதி பணியாளர்கள், சமையலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கென தனி கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன்படி, தோராயமாக ரூ. 1700-ஐ மாதம்தோறும் மாணவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த கட்டணக் கொள்ளையை எதிர்த்துதான் மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படுமானால் தங்களுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டியிருக்கும் என பெரும்பாலான மாணவர்கள் தெரிவிக்கிறார்கள். அனைத்து மாணவர்கள் அமைப்புகளும் இந்தக் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கின்றன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம், இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஊரக பகுதிகளிலிருந்தும், ஒடுக்கப்பட்ட, நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களிலிருந்து கல்வி உதவித் தொகையை நம்பி இங்கே வருகிறார்கள் என்பதால் இந்தக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறுகிறது.
பார்வையற்ற 28 வயதான சஞ்சீவ் மிஸ்ரா, ஜெர்மன் பட்டப் படிப்பை படித்துவருகிறார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவருடைய குடும்பம், அவருடைய தந்தையும் ஓய்வு ஊதியமான ரூ. 10 ஆயிரத்தை நம்பி உள்ளது. மெரிட் அடிப்படையிலான ஊக்கத் தொகையான ரூ. 2 ஆயிரத்தை நம்பி விடுதியில் தங்கி படிக்கிறார் இவர்.
“விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டால், என்னால் கட்டணம் செலுத்த முடியாது” என்கிற சஞ்சீவ், அவருடைய குடும்பத்தில் முதல் பட்டதாரி.
ரஷ்ய மொழி பட்டபடிப்பை படித்துக்கொண்டிருக்கும் 19 வயதான அசுதோஷ் குமாரின் தந்தை ஒரு தினக்கூலி தொழிலாளி. அவருடைய மாத வருமானம் ரூ. 12 ஆயிரம்.
“விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டால், என்னுடைய பொருளாதார சூழலில் என்னால் படிக்க முடியாது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். இங்கே வேலையில்லை என்ற நிலையாகிவிட்டது, எனவே படித்து வெளிநாடு செல்ல விரும்புகிறேன். சிறந்த பல்கலைக்கழகம், சிறந்த கல்வியாளர்கள், கட்டணமும் குறைவு என்பதால் இங்கே வந்தேன். என்னிடமிருந்து இது பறிக்கப்பட்டால் நான் என்ன செய்ய முடியும்?” எனக் கேட்கிறார் அசுதோஷ்.
படிக்க:
♦ அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
♦ தரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் நவீன வடிவங்கள் !
“40% மாணவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 1.44 இலட்சம் ஈட்டுகிற (வறுமை நிலை) குடும்பங்களிலிருந்து வருகிறவர்கள். திருமணம் ஆகாத, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித் தொகையான ரூ. 2000 யும், எம்.பில். மற்றும் பி.எச்.டி. மாணவர்கள் யூ.ஜி.சி. கல்வி உதவித்தொகையான ரூ. 5000-ஐ நம்பியும் உள்ளனர். இந்தத் தொகையை வைத்துக்கொண்டு மாணவர்கள், கல்வி உதவித் தொகையைவிட கூடுதலாக உள்ள கட்டணத்தை எப்படி சமாளிப்பார்கள்?” எனக் கேட்கிறது மாணவர் சங்கம்.
விடுதி கட்டணம் மறுசீரமைப்பு குறித்த கூட்டத்துக்கு ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தை பல்கலை நிர்வாகம் அனுமதிக்க மறுத்திருக்கிறது. விடுதி மாணவர் சங்கத்துக்கு கூட்டம் நடைபெறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்புதான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்களுக்கு ஆதரவாக விடுதி நிர்வாக அதிகாரிகள் இருவர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். விடுதி காப்பாளர்கள், புதிய விடுதி கையேட்டை நிராகரித்திருப்பதாகவும் மாணவர் சங்கம் தெரிவிக்கிறது.
இந்தப் பின்னணியில் திங்கள்கிழமை பட்டமளிப்பு விழாவுக்கு வந்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.
பட்டமளிப்பு விழா நடந்த வாயிலுக்கு வெளியே மாணவர்கள் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். அவர்களை ஒடுக்க நிறுத்தப்பட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். போலீசு, தண்ணீர் பீரங்கிகளால் தாக்கி கலைக்க முயன்றது.
நிகழ்ச்சி முடிந்து துணை குடியரசு தலைவர் வெளியேறியபோதும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மூன்று மணிநேரம் மாணவர்களால் சிறைபிடிக்கப்பட்டார். போராட்டங்கள் ஓயாத நிலையில் மாணவர் சங்க நிர்வாகிகளை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொக்கிரியால் சந்தித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை அப்போது அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். ஆனபோதும் பல்கலை நிர்வாகம் மாணவர்களிடம் பேசத் தயாராக இல்லை.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்க மனுவாதிகள் பலவகையில் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றாகவே ஜேஎன்யூ பல்கலை விடுதி கட்டண உயர்வும் இருக்கிறது. மாணவர்களின் பின்னணி அறியும் அனைவருக்கும் மாணவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயங்கள் புரியும்.
ஆனால், மாணவர்கள் போராட்டத்தில் பயன்படுத்திய ‘மாபெரும் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்’ என்ற முழக்கத்தை கேலி செய்யும்விதமாக ‘மாபெரும்’ என்பதை மேற்கோள் குறியுடன் போட்டு செய்தி சொல்கிறது ‘தி இந்து’ நாளிதழ்.
அரசு தரவேண்டிய அடிப்படை உரிமைகளான கல்வி சேவையை, சேவையாக அல்லாமல் கட்டணம் செலுத்தும் வியாபாரமாக மக்கள் மனதில் பதிய வைக்கும் உத்தியை தி இந்து போன்ற மனுவாத ஆதரவு ஊடகங்கள் மாணவர்களின் போராட்ட விசயத்தில் செய்துகொண்டிருக்கின்றன.
கலைமதி
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்க்ரால்.