பொருளாதார நெருக்கடி : டெல்லியில் வசிக்கும் இந்தக் குடும்பம் முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது!
தெற்கு டெல்லியில் பிளம்பிங் பணி செய்யும் ராகுல் சவுத்ரி (22), தனது தாய் பிரதீமா தேவி (60) எப்போது டூத் பிரஷ்ஷை மாற்றினார் என்பது நினைவில் இல்லை. ஓராண்டாக அவர்கள் முட்டை சாப்பிடவில்லை. கோழி இறைச்சி அல்லது மீன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உண்ணும் உணவுகளாகிவிட்டன.
“கறி விலை கிலோ ரூ. 200 முதல் ரூ. 400 வரை விற்கிறது. நாங்கள் ஒரு நாளில் சம்பாதிப்பதே அவ்வளவுதான் எனும்போது எப்படி முழு சம்பளத்தை கறிக்கு செலவிட முடியும்?” எனக் கேட்கிறார் தேவி.

எப்போதுமே இந்த நிலையில்தான் இவர்களுடைய குடும்பம் இருந்தது என்பதில்லை. தெற்கு டெல்லியின் யமுனா நதிக்கரையோரம் கலிந்தி கஞ்ச் பகுதியில் நடந்த கட்டுமானப்பணிகளின் போது பிளம்பிங் பணி செய்துகொண்டிருந்தபோது ராகுல், மாதம் ரூ. 15,000 வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தார்.
2016-ம் ஆண்டு மோடியின் சர்வாதிகார பேரழிவு அறிவிப்பான பணமதிப்பழிப்புக்கு 86% இந்திய ரூபாய்களை செல்லாக் காசாக்கியது. இது பணப்புழக்கத்தை குறைத்து, கட்டுமான துறையை கடுமையாக மூழ்கடித்தது. கட்டுமானப்பணிகள் மெதுவாக துவங்கியபோது, பிளம்பர் பணிக்கான சம்பளம் குறைக்கப்பட்டது.
“முன்பு ஐந்து மாடி கட்டிடம் முழுமைக்குமாக சேர்த்து பிளம்பிங் செய்தால் ரூ. 10,000 ஈட்டுவேன். ஒரு அடுக்குக்கு ரூ. 2000 தருவார்கள். கழிவறை குழாய்கள், தண்ணீர் டேங்குகள், மோட்டார், கழிவுநீர் குழாய்கள் உள்ளிட்டவற்றை பொருத்துவது இந்தப் பணியில் அடங்கும்” என்கிறார் ராகுல்.
“பணமதிப்பழிப்புக்குப் பின், மக்கள் ஒரு அடுக்குக்கு என சம்பளம் தருவதை நிறுத்திவிட்டார்கள். இப்போது முழு கட்டிடத்துக்கு சேர்த்து பிளம்பிங் செய்ய ரூ. 3000 முதல் ரூ. 4000 வரை மட்டுமே தருகிறார்கள்” என்கிறார்.
படிக்க :
♦ ஃபாத்திமா லத்தீஃப் படுகொலை : ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
சம்பளத்தில் இழப்பு என்பதோடு, வேலை பளுவும் அதிகமாக இருக்கிறது என்கிறார் ராகுல். “முன்பைவிட இப்போது வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரித்துவிட்டது. ஒரு வேலைக்காக இப்போது பல பேர் வரிசையில் காத்திருக்கிறார்கள். குறைந்த சம்பளத்துக்கும் அவர்கள் பணியாற்றத் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார்.
இந்த சூழ்நிலையில், இவர்களுக்கு மேலும் சுமையேற்ற 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டது. சிமெண்ட், குழாய்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார் என இவர் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் அதிகரித்தது. உதாரணத்துக்கு 10 அடி குழாயின் விலை ரூ. 100-லிருந்து 200-ஆக உயர்ந்தது.
இதன் விளைவாக, ராகுலின் மாத வருமானம் ரூ. 8000-ஆகக் குறைந்தது. அதன்பின், உள்ளூர் தொழிலதிபர் ஒருவரிடம் ஆவணங்கள் எடுத்துச் செல்லும் பகுதி நேர பணியைச் செய்யத் தொடங்கினார். இதன் மூலம் ரூ. 2000 வருமானம் ஈட்டுகிறார்.
யமுனா நதிக்கரையோரம் கொட்டப்படும் கழிவுகளிலிருந்து பொருட்களை பிரித்தெடுப்பதன் மூலம் மாதம் ரூ. 5000 ஈட்டிவந்தார் ராகுலின் தாயார் பிரதீமா தேவி.
“இப்போது யமுனாவில் சிலையை கரைப்பதற்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கும் அனுமதிப்பதில்லை” என்கிறார் தேவி.
இந்த வருமான இழப்பு அவர்களுடைய உணவு உட்கொள்ளும்விதத்தை நேரடியாக பாதித்தது. “நாங்கள் அனைத்திலும் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டோம். குறைவான எண்ணெய், மசாலாக்களை உணவில் பயன்படுத்துகிறோம். சோப்பு போன்ற பிற பொருட்களையும்கூட அளவாகவே பயன்படுத்துகிறோம்” என்கிறார் ராகுல்.
இத்தகைய குடும்ப பொருளாதார சூழலில் சேமிப்பு என்பது மிகக் கடினமானது. பணமதிப்பழிப்புக்கு முன் இந்தக் குடும்பம் மாதம் ரூ. 5000 முதல் ரூ. 10,000 வரை சேமித்துக் கொண்டிருந்தது. இப்போது உள்ளூர் சுய உதவிக்குழு மூலம் ரூ. 3000 சேமிப்பதே கடினமாக உள்ளது.
படிக்க :
♦ பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !
♦ பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
பணிகள் அதிகமாகக் கிடைத்து, தங்களுடைய வருமானமும் உயரும் எனக் காத்திருக்கிறார் ராகுல், ஆனால் அதற்கு நிச்சயம் இல்லாமல் போய்விடுமோ என அச்சமும் கொள்கிறார்…
“இந்த நாட்டில் எங்களுடைய தாத்தாக்கள் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என அரசாங்கம் கேட்பதாகக் கேள்விப்பட்டேன். இல்லையென்றால் வெளியேற்றப்படுவோமாம்”.
பாஜக தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமலாக்கத்திட்டமிட்டிருப்பது, இந்தப் பகுதியில் இப்போது பேசுபொருளாக உள்ளது. இதைக் குறிப்பிடுகிறார் ராகுல்.
இப்படியெல்லாம் செய்ய முடியுமா எனக் கேட்கிற தேவி, “இவனுடைய தாத்தாவுக்கு தாத்தாவை நாங்கள் எங்கே போய்க் கண்டிபிடிப்பது? இது எவ்வளவு கேவலமான திட்டம்” என்கிறார்.
கட்டுரை, படங்கள்: விஜய்தா லால்வானி.
கலைமதி
நன்றி : ஸ்க்ரால்.