Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாமாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !

மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !

ஒருவேளை குண்டு வைப்பதில் பிரக்யா சிங் தேர்ச்சி மிக்கவர் என்பதால்தான், ‘பிரக்யாவின் சேவை நாட்டுக்குத் தேவை’ என பாஜக மேலிடம் நினைத்திருக்கிறதோ என்னவோ !

-

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழுவில் இடம்பெற பரிந்துரை !

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர், பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 21 எம்.பி.க்கள் அடங்கிய ஆலோசனைக்குழுவில் போபால் எம்.பி.-யான பிரக்யா சிங் தாகூரும் இடம்பெறுவார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2008-ம் ஆண்டு செப்டம்பரில் மாலேகானில் ஒரு மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில், 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பிரக்யா சிங் தாக்கூருக்கு மிக முக்கியமான பங்கிருப்பதாக ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ காவி பயங்கரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக விடுவிக்கப்பட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், தாகூருக்கு 2017 ஏப்ரல் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பிரக்யா சிங் மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக்கூறி வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து தப்பி வருகிறார் இவர். இந்நிலையில் பாஜக இவரை கடந்த மக்களவை தேர்தலின்போது, மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் நிறுத்தியது.

படிக்க:
விவாதத்தில் பதில் சொல்லாமல் தெறித்து ஓடிய இந்துத்துவ தீவிரவாதி சாத்வி பிரக்யா !
♦ கழிப்பறையை சுத்தம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை : பிரக்யா சிங் தாகூர் !

பிரச்சாரத்தின்போது காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே-வை ‘தேசபக்தர்’ என புகழ்ந்தார். பொது சமூகத்திலிருந்து வந்த கண்டனங்கள் காரணமாக தன்னுடைய கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். சங்க பரிவாரங்களின் பிரச்சாரம் காரணமாக வெற்றிகண்ட அவர், எம்.பி.-யாக நாடாளுமன்றத்துக்குள்ளும் சென்றார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரக்யா மீது வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கு விசாரணை குறித்து செய்தி சேகரிக்கக்கூடாது என தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்த பின்புலத்தில்தான் மோடி அரசாங்கம் பாதுகாப்புத் துறை ஆலோசனைக்குழுவில் பிரக்யா சிங்கையும் சேர்த்துள்ளது. ஒருவேளை குண்டு வைப்பதில் தேர்ச்சி மிக்கவர் என்பதால், ‘பிரக்யாவின் சேவை நாட்டுக்குத் தேவை’ என பாஜக மேலிடம் நினைத்திருக்கலாமோ என்னவோ !


– அனிதா
நன்றி : தி வயர்