Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாகுழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !

குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !

ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?

-

குழந்தைகளைக் கடத்தியது அவர்களை ரூ. 100 கோடி நன்கொடை வசூலிக்க உத்தரவிட்டது உள்ளிட்ட தவறான விசயங்களுக்குப் பயன்படுத்தியது போன்ற குற்றங்களின் அடிப்படையில் புதன்கிழமை நித்தியானந்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு பாலியல் வல்லுறவு வழக்கில், 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஆசிரமத்தில் குழந்தைகள் மீது துன்புறுத்தல் நடப்பதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் நித்தியானந்தாவை விசாரிக்கச் சென்ற போலீசு, அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறுகிறது.

அகமதாபாத் போலீசு கண்காணிப்பாளர் ஆர்.வி. ஆச்சாரி ஊடகங்களிடம் பேசும்போது, குஜராத் போலீசு உரிய வழிமுறையில் நித்தியானந்தாவை விசாரிக்க முயற்சிக்கும். அவர் இந்தியா திரும்பினால் நிச்சயம் கைது செய்வோம் எனக் கூறினார்.

இதற்கிடையே, வெளியுறவு அமைச்சகம் நித்தியானந்தா தப்பியோடியது குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என தெரிவித்துள்ளது. நித்தியானந்தாவை ஒப்படைக்கவும் எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அது கூறியுள்ளது. அவர் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசன் போல பவனி வரும் ஆன்மீக அயோக்கியன் நித்தி.

கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நித்தியானந்தாவின் இரண்டு சீடர்களான பிரன்பிரியா மற்றும் பிரியாதத்வா அகியோர் இந்த வாரம் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் ஐந்து நாட்களில் போலீசு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நித்தியானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, ஆசிரமத்தில் இருந்த தனது மகளை காணவில்லை எனவும் புகார் அளித்திருந்தார். அதுகுறித்தும் விசாரிக்கப்படும் என குஜராத் போலீசு தெரிவித்துள்ளது.

“நித்தியானந்தாவின் இரண்டு சீடர்கள் எங்கள் விசாரணையில் இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்து நித்தியானந்தாவுக்கு எதிரான, உறுதியான ஆதாரங்களை பெறுவோம். அதன் அடிப்படையில் அவருக்கு எதிரான நடவடிக்கையை எடுப்போம். முதல் தகவல் அறிக்கையில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், போதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என அகமதாபாத் துணை கண்காணிப்பாளர் கமரியா தெரிவித்தார்.

நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் 9 மற்றும் 10 வயதுகளில் இரண்டு குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தங்களை துன்புறுத்தி பணிகளைச் செய்ய வைத்ததாகவும் சட்டவிரோதமாக நகரத்தில் இருந்த ஒரு குடியிருப்பில் அடைத்து வைத்திருந்ததாகவும் போலீசிடம் குழந்தைகள் தெரிவித்துள்ளனர். இதே போன்ற குற்றச்சாட்டுக்களை ஆசிரமத்தில் இருந்த மேலும் இரு குழந்தைகளும் தெரிவித்துள்ளனர்.

படிக்க:
பொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு ! நேரடி ரிப்போர்ட்
♦ ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !

இந்தப் புகார்களின் அடிப்படையில் அகமதாபாத்தில் ஆசிரமத்துக்கு அரசு விதிகளை மீறி நிலமளித்த டெல்லி பப்ளிக் ஸ்கூல் முதல்வரை போலீசு கைது செய்துள்ளது. டெல்லி பப்ளிக் ஸ்கூலுக்கு சொந்தமான நிலத்தை எப்படி ஆசிரமம் நடத்தக் கொடுக்கலாம் என சி.பி.எஸ்.சி, குஜராத் கல்வி துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரம் குஜராத்தில் பூதாகரமாக எழுந்த நிலையில், குஜராத் அரசு நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் மீது, கடத்தல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், அவதூறான விசயங்களை அச்சிட்டு விற்பனை செய்தல், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்துள்ளது.

அகமதாபாத் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரண்டு மகள்களையும் மீட்டுத்தர கோரி, நித்தியின் முன்னாள் தனி செயலர் தாக்கல் செய்த மனுவில், குஜராத் உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கும், குஜராத் அரசாங்கத்துக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பே, நித்தியானந்தாவின் லீலைகள் சிடி-யில் சிக்கி சீரழிந்தது. ஆனாலும், ஒரு சில ஆண்டுகளிலேயே அதையே மூலதனமாக்கி நித்தியின் ஆசிரமம் மீண்டும் ‘புகழ்’பெறத் தொடங்கியது. ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?


கலைமதி
நன்றி : தி வயர்