ரு பெண்ணாய் முதலில் ஆண்களுக்கு என் இனிய ஆண்கள் தின வாழ்த்துகள். மனிதன் தோன்றியதிலிருந்து ஆண் பெண் என இருந்த சமூகம், நாகரிகத்தைத் தேட ஓடியதில் இன்று இருபாலரையும் கொண்டாடும் நாள் என வளர்ந்த நிலையில், இந்தப் பதிவை ஆண்கள் தினத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுயிருக்கிறேன்.

இந்தியாவில் தற்போதுதான் சில ஆண்டுகளாக மன அழுத்தம் பற்றி பேச தொடங்கியுள்ளோம். இதைப்பற்றி குறிப்பாக ஆண்களின் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி ஆண் பிரபலங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களும் தற்போது பேசுகின்றன. இது சமூகத்தில் இது குறித்த உரையாடல்களை பெருமளவில் ஊக்குவிக்கும் என நம்புவோம்.

சாதாரண வாழ்கையைக் கடந்து செல்லும் நம்முள் பலருக்கும் இந்த மன அழுத்தம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மன அழுத்தம் என்பது இரு பாலருக்கும் இருக்கிறது. இருப்பினும் ஆண்களின் மனநல பிரச்சினைகளை பற்றி பேசக் காரணம், பெண்களைப் போன்று அவர்களுக்கும் இச்சமூகம் ஏற்றி வைத்திருக்கும் வார்ப்படம் தான் (sterotype). ஆண்கள் ‘கடினமானவர்களாக’ இருக்க வேண்டும் என்று நம்பும் நமது கலாச்சாரத்தில் இதைப்பற்றி ஓரிரு திரைப்படங்களும் ஒரு சில பிரபலங்களும் உரையாடலைத் தொடங்கியுள்ளனர் என்பது நம்பிக்கைக்குரிய விசயம்.

இது ஒரு சமூகக்கட்டுப்பாடு

“ஆண்கள் அழக்கூடாது”, “ஒரு ஆணாக இருக்க…!”, “ஆண்கள் எந்த வலியையும் தாங்கிக்கொள்ள வேண்டும்” – இப்படிதான் நாமும் நம் சமூகமும் ஆண்களுக்கான ஒரு வார்ப்படத்தை உருவாக்கி அதனுள் அவர்களை சிறை வைக்கிறோம்.

கடந்த வருடம் சல்மான் கான் தனது பேட்டியில் மன அழுத்தம் அடையும் அளவுக்கு ஆடம்பரம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துக்கள் மன அழுத்தம் உடையவர்களை பலவீனப்படுத்தும். ஒரு நோயாக இல்லாமல், ‘பலவீனமான’ நபர்களால் செய்யப்பட்ட ஒரு ‘தேர்வாக’ இதை உருவாக்குவது தவறு.

தீபிகா படுகோன் தனது பேட்டியில், அடுத்தவர்களின் மன அழுத்தம் பற்றி பிறர் தவறான கருத்துகளை பதிவிடுவதை சுட்டிக்காட்டியிருந்தார்.  தான் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை பதிவு செய்தார். அப்படி பகிரங்கமாக பேசியதற்கு அவருக்கு முதலில் எனது பாராட்டுகள்.

பொதுவாக மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவது இந்தியாவில் மிகக் குறைவு. அதுவும் ஆண்களின் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். இத்தகைய சூழ்நிலையில், பிரபலங்கள் தங்கள் சொந்த போராட்டங்களைப் பற்றி பேசுவது பாராட்டுக்குரியது.

இதை போன்றே Obsessive-Compulsive Disorder (OCD) பற்றி one mic stand போன்ற Stand Up Comedy ஷோக்களில் பேசப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்களின் மன ஆரோக்கியத்திற்கான போராட்டம் குறித்து சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளிவந்த திரைப்படமான ஹவுஸ் அரஸ்டில் காட்சிப்படுத்தப்பட்டது (சமித் பாசு எழுதியது; சமித் பாசு மற்றும் சஷங்கா கோஷ் இணைந்து இயக்கியது; அலி ஃபசல், ஸ்ரியா பில்கோங்கர், ஜிம் சர்ப் மற்றும் பார்கா சிங் நடித்தது) சில நாட்களுக்கு முன்பு ஹவுஸ் அரெஸ்ட் தொடரில் ஒரு நகைச்சுவை. அது, ஒரு மனிதன் தனது மன ஆரோக்கியத்துடன் போராடும் முக்கியமான ஒரு உருவப்படத்தை சிரிப்பவர்களிடையே அளிக்கிறது. அதன் முக்கிய அம்சமாக நான் இதைத்தான் பார்க்கிறேன். அதில் வரும் பிறவிசயங்கள் பற்றி நான் எதுவும் கூறுவதற்கில்லை. ஆனால் படம் நிச்சயமாக பார்க்கத்தக்கது.

படிக்க:
மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்
♦ பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி

இந்தியாவில் மோசமான விசயம் என்னவென்றால், ஆண்களின் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ‘உணர்ச்சிபூர்வமான அன்பின்’ வெளிப்பாடுகளாக காதல் என்பது காட்டப்படுகிறது. டாரில் இருந்து ராகுல், தேரே நாமில் இருந்து ராதே, தேவதாஸ், அல்லது கபீர் சிங் ஆகியோராக இருந்தாலும், அவர்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் நிவாரணியாக ஆல்கஹால் / போதைப்பொருட்கள் அல்லது அவர்களின் வாழ்க்கையில் பெண்கள் மீதான ஈர்ப்பு ஆகியவை காட்டப்படுகின்றன. “ஒரு நல்ல பெண்” ஒரு மனிதனை சீர்திருத்த முடியும் – என்ற ஒரே மாதிரியான விசயத்துக்கு ஊட்டமளிப்பதால் இது எல்லையற்ற சிக்கலை உருவாக்குவதோடு, பரஸ்பர துஷ்பிரயோக சுழற்சியில் இரு பாலினரையும் சிக்க வைக்கிறது.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான, ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்ற திரைப்படத்தில் அந்த வீட்டின் மூத்த சகோதரராக நடித்த செளபின் ஷாகீர் தன்னுடய கதாபாத்திரத்தில் தன்னுடைய மன அழுத்ததை வெளிக்கொணர தன் தம்பியிடம் உதவி கேட்க அவர் மன நல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வார். அங்கு ஆலோசகரைச் சந்தித்து அண்ணன் கதாபாத்திரம் அழும் காட்சியில் தன்மையை இயல்பாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. இதைப்போன்றே மற்றொரு படம் லுகா. இப்படியான திரைப்படங்கள் மன அழுத்தத்தையும் இயல்பாக அணுகுகின்றன.

ஆய்வுகளின் அறிக்கை

தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட லியாங் மற்றும் ஜார்ஜ் (2012) ஆய்வில், மனச்சோர்வுள்ள சில ஆண்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ தங்கள் தனிப்பட்ட சிரமங்களைப் பற்றி பேச விரும்புவதாகக் கண்டறிந்தனர். ஆனால் அவர்களின் சமூக வலைப்பின்னல்களில் நம்பகமான அல்லது குறைவான நபர்கள் மட்டுமே தங்கள் உணர்வுகளைப் புரிந்துக்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கனடாவில், கோயன் மற்றும் பலர்… நடத்திய மற்றொரு ஆய்வு (2013), ஆண் வார்ப்படம் அவர்களை ஓரு மூடிய கதவின் பின் தங்களின் மன உளைச்சலை வைக்கச் செய்வதாகத் தெரிவிக்கிறது. ஆண்களின் உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் மனச்சோர்வை ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் பெண் தோழியிடம் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தி, உணர்ச்சிப் பூர்வமான ஆதரவிற்காக ஏங்குகின்றனர். அவர்கள் மற்ற ஆண்களை அணுக முயற்சித்தபோது, அவர்களது அனுபவங்கள் எதிர்மறையாக இருந்தன. மற்ற ஆண்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்பது தெரிகிறது.

இந்தியாவில், மாநில அளவிலான மனநோய் சுமை குறித்த சமீபத்திய ஆய்வுக் கட்டுரை, உலகளாவிய தற்கொலை மரணங்களில் இந்தியாவின் பங்களிப்பு 1990-ல் 18·7%-லிருந்து 2016-ல் 24·3% ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பெண்களின் புள்ளி விவரங்களை (1990-ல் 25.3%; 2016-ல் 36.6%) விட மிகக் குறைவானவை என்றாலும் , அவை இன்னும் கவலைக்கு ஒரு காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் உள்ள சூழ்நிலையில் வெறுமனே 4000 மன ஆலோசகர்களே உள்ளனர். சிகிச்சைக்கான செலவும் அதிகம். அப்படியிருக்கையில் நாம் சமூகக் கடமையுடன் அதை எதிர் நோக்குவோம்.

ஆண்களின் மனநலப் பிரச்சினைகளை பெண்கள் எப்படி கையாளுகின்றனர் ?

மனநோய்களின் வீழ்ச்சியும், அதன் தாக்கமும் ஆண்களை மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரையும், சமுதாயத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. இந்தியாவில் ஆணாதிக்க சமுதாயத்தில், பெரும்பாலான குடும்பங்களில் ஆண்களே இன்னமும் முடிவெடுப்பவர்களாக இருக்கின்றனர். இப்படி குடும்பத்தின் சமூகப் பொருளாதார நல்வாழ்வும் ஆண்களை பொறுத்தே இயங்குகிறது.

இந்திய பதிவாளர் ஜெனரலின் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 78.62% பேர் வேலை எதுவும் செய்யவில்லை. வெறும் 13.15% பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதன் தாக்கம் அதிகமாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், மனநோய்க்கு எதிரான களங்கம் காரணமாக, கடுமையான பிரச்சினைகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருகின்றன.

பொதுவாக குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களைப் பராமரிப்பது ஒரு முழுநேர வேலையாகவும் மாறுகிறது. மேலும் பராமரிப்பாளர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கிறது. கூடுதலாக பொருளாதார துயரத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் குருராஜ் மற்றும் பலரால் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த காலாண்டில் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வதில் சுமார் 10-20 வேலை நாட்களை இழக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2012 மற்றும் 2030-க்கு இடையில் மனநல பிரச்சினை காரணமாக இந்தியா தனது உற்பத்தித் திறனில், 1.03 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

படிக்க:
இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !
♦ கோட்சேவை பாடத்தில் சேர்க்க இந்து மகாசபா கோரிக்கை !

மேலும் சிகிச்சையளிக்கப்படாத மன நோயானது, சமூக விரோத நடத்தைகள், குற்றம், வீடற்ற தன்மை, வீட்டு வன்முறை, குடி மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை ஏற்ப்படுத்தும். எனவே, ஆண்களின் மனநலப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவது, மற்றும் மனநோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமானது. இதற்கு சம்பந்தப்பட்ட ஆண்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பமும், சமூகமும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேற்கூறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வேலைவாய்ப்பைப் பற்றி 2016-ல் ஆய்வு செய்த ராமசுப்பிரமணியன், சி. மோகன்தோஸ், ஏ.ஏ., மற்றும் நமசிவயம், ஆர்.கே  ஆகியோரது அறிக்கையில், இப்பிரச்சினையில் இருந்து மீள வேலை வாய்ப்புகள், இட ஒதுக்கீடு மற்றும் பிற மறுவாழ்வு நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

ஆண்கள் மீதான வார்ப்படத்தை உடைத்தெறிவோம்

இதற்கு ஆணாதிக்க சமூகம் கட்டமைத்த வார்ப்படத்திற்கு பெரும் பங்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இது மன அழுத்தம் உள்ள ஆண்களை பலவீனமானவர்களாக பார்க்காச் செய்கிறது. மேலும், பெரும் இழுக்காக பார்க்கப்படும் பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

அமெரிக்க உளவியல் சங்கம், கடந்த ஆண்டு 10 வழிகாட்டுதல்களின் தொகுப்பைக் கொண்டு வந்தது. மனநல ஆலோசகர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களின் மீதான இந்த சமூகக் கட்டுப்பாட்டை உடைத்தெறியச் செய்ய வேண்டும் என்கிறது. எப்படி தந்தை மகன் உறவுகளை மேம்படுத்தி, தற்கொலை மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் போன்ற ஆண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வது? ஆரோக்கியமான நடத்தைகளை நோக்கி ஆண்களை எவ்வாறு வழிநடத்துவது ? என்பதைப் புரிந்துகொள்ள இந்த வழிகாட்டுதல்கள் உதவுகின்றன.

இதைத்தான் சமீபத்தில் பாலிவுட் நடிகரான ஆயுஷ்மன் குரானா நடித்த யூடியுப் நிகழ்ச்சி ஓன்றில் கொளரவ் சொளன்கி எழுதிய பாடலில், ”ஆணின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்பதை தனது வரிகளின் மூலம் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற மனநல மருத்துவர் டாக்டர் பாரத் வத்வானி தனது நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளபடி, “எந்தவொரு பிரபலமும் முன்வந்து, அவர்களின் மனநல பிரச்சினைகளைப் பேசுவது மற்றும் ஒப்புக்கொள்வதன் மூலம், மனநோயை மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும் என நம்புகிறோம். இது மட்டுமே அவர்கள் அவர்களாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வழிவகுக்கும்” என்கிறார்.

திரையில் ஆண்களின் மனநலப் பிரச்சினைகளின் நேர்மறையான பிரதிநிதித்துவத்தின் மூலமாக நிச்சயம் சமூகத்தில் சாதகமான மாற்றத்திற்கு வழிவகுக்க முடியும் என சொல்லி ஆண்கள் தினத்தை எல்லோரும் சேர்ந்து கொண்டாடுவோம்.

ஆண்கள் தினம் – தேவை கொண்டாட்டமா? அல்லது ஆண்களைப் பற்றிய சமூக கண்ணோட்டமா என விளக்க முயல்கிறது இக்கட்டுரை. வாருங்கள் உரையாடுவோம்.சிந்துஜா சமூக ஆர்வலர்.