அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 45

டாக்டர் கெனேயின் “குறுக்கு நெடுக்கான கோடுகள்”

அ.அனிக்கின்

மார்மன்டேல் என்பவர் தம்முடைய நினைவுக் குறிப்புகளில் கெனேயின் ஆளுமையைப் பற்றி பல சுவாரசியமான செய்திகளை எழுதியிருக்கிறார். 1757-ம் வருடத்திலேயே கெனே “நிகரப் பொருளைப் பற்றிய குறுக்கு நெடுக்கான கோடுகளைத்” தயாரித்துக் கொண்டிருந்தார் என்பதை அவருடைய புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். கெனே மற்றும் அவருடைய சீடர்களின் புத்தகங்களில் திரும்பத் திரும்ப எழுதப்படுகின்ற, பொருள் விளக்கம் கொடுக்கப்படுகின்ற பொருளாதார அட்டவணை எனப்படுவது இதுவே. வர்ணனைகள் பலவிதமாக இருந்த போதிலும் அட்டவணை என்பது ஒன்று தான். விவசாயத்தினால் படைக்கப்படுகின்ற தேசத்தின் மொத்த மற்றும் நிகரப் பொருள் அதன் இயற்கையான வடிவத்திலும் பணவியல் வடிவத்திலும் கெனே பிரிவினை செய்திருந்த சமூகத்தின் மூன்று வர்க்கங்களுக்கிடையிலும் எப்படிச் செலாவணியாயிற்று என்பதைப் புள்ளியியல் உதாரணங்களின் மூலமாகவும் வரைகோடுகளின் மூலமாகவும் எடுத்துக்காட்டும் அட்டவணையே அது.

பொருளாதார அட்டவணையைப் பற்றிய நவீன அணுகுமுறையைப் பற்றிப் பொதுவான முறையில் தெரிந்துகொள்வதற்காக இங்கே சோவியத் பேரவையாளர் வி.நெம்ச்சினோவின் கருத்தை மேற்கோள் காட்டுவோம். அவர் எழுதிய பொருளாதார கணித முறைகளும் மாதிரிகளும் என்ற புத்தகத்துக்கு லெனின் பரிசு கொடுக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

“18-ம் நூற்றாண்டில், பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் வைகறைப் பொழுதில்…. பிரான்சுவா கெனே… மனிதனுடைய சிந்தனையின் சிறப்பு மிக்க பாய்ச்சலான தமது பொருளாதார அட்டவணையைத் தயாரித்தார். 1758-ம் வருடத்தில் அந்த அட்டவணை தயாரிக்கப்பட்டு இருநூறு வருடங்கள் முடிவடைந்திருந்தன; ஆனால் அவற்றில் அடங்கியிருந்த கருத்துக்கள் மங்கிவிடாதது மட்டுமல்ல, அவை மேலும் அதிகமான மதிப்பைப் பெற்றிருக்கின்றன… கெனேயின் அட்டவணையை நவீன பொருளாதார வார்த்தைகளில் வர்ணிப்பதென்றால், அது பேரியல் பொருளாதார ஆராய்ச்சியின் முதல் முயற்சியென்று கூறலாம்; அந்த ஆராய்ச்சியில் மொத்த சமூக உற்பத்திப் பொருள் என்ற கருதுகோள் நடு நாயகமான இடத்தைப் பெற்றிருந்தது…. அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றில் பொருளாயத மதிப்புக்களின் இயற்கையான (பண்ட) மற்றும் பணவியல் நீரோட்டங்களைப் பற்றித் தயாரிக்கப்பட்ட முதல் பேரியல் பொருளாதார அமைப்பே கெனேயின் பொருளாதார அட்டவணை. அதில் அடங்கியிருக்கும் கருத்துக்கள் கருவடிவத்திலுள்ள எதிர்காலப் பொருளாதார மாதிரிகளாகும். குறிப்பாகக் கார்ல் மார்க்ஸ் தன்னுடைய விரிவாக்கமடைந்த புனருற்பத்தி அமைப்பைத் தயாரித்த பொழுது, கெனேயின் சிறப்புமிக்க பணியைப் பாராட்டினார்……”(1)

கெனே-யின் பொருளாதார அட்டவணை (நன்றி : விக்கிபீடியா)

இந்த மேற்கோள்களில் அடங்கிய பொதுவான கருத்துக்கள் வாசகருக்குப் புரியக்கூடியவையே; ஆனால் விவரங்களை இன்னும் தெளிவாகச் சொல்லுவது ஒருவேளை அவசியமாக இருக்கும். பேரியல் பொருளாதார ஆராய்ச்சி என்பது மொத்தமான பொருளாதார நிகழ்வுகளையும் (சமூகப் பொருள், தேசிய வருமானம், மூலதன முதலீடு) அவற்றோடு தொடர்புள்ள பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஆராய்வதாகும். நுண்ணியல் பொருளாதார ஆய்வு இதற்கு எதிரிடையானதாகும். அது பண்டம், மதிப்பு, விலை இதரவைகளின் இனங்களையும் பிரச்சினைகளையும் ஆராய்கிறது; தனிப்பட்ட மூலதனச் செலாவணியையும் ஆராய்கிறது. கெனேயின் பேரியல் பொருளாதார மாதிரி என்பது சமூகப் பொருளின் புனருற்பத்தி மற்றும் செலாவணியைப் பற்றிய கற்பனையான அமைப்பாகும்; அது குறிப்பிட்ட சில அனுமானங்களையும் கருதுகோள்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மார்க்ஸ் தன்னுடைய சிறப்புமிக்க புனருற்பத்தி அமைப்புக்களைத் தயாரித்த பொழுது பயன்படுத்திய முக்கியமான ஆதாரங்கள் சிலவற்றில் இதுவும் ஒன்று.

1863-ம் வருடம் ஜுலை 6-ம் தேதியன்று எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் இந்தத் துறையில் தாம் செய்திருக்கும் ஆராய்ச்சிகளை விளக்கிக் கூறிய பிறகு ஒரு எண்ணியல் மற்றும் வரைபட உதாரணத்தின் உருவரையைத் தருகிறார்: மொத்த உற்பத்திப் பொருள் என்பது எப்படி நிலையான மூலதனம் (மூலப் பொருட்கள், எரிபொருள், இயந்திரங்கள்), மாறுபடும் மூலதனம் (தொழிலாளர்களின் கூலி) மற்றும் உபரி மதிப்பைச் செலவிடுவதன் மூலம் ஏற்படுகிறது. பொருளின் உருவாக்கம் சமூக உற்பத்தியின் இரண்டு வெவ்வேறான உட்பிரிவுகளில் நடைபெறுகிறது: இயந்திரம், மூலப் பொருள்கள் முதலியனவற்றை உற்பத்தி செய்தல் முதல் பிரிவு, நுகர்வுப் பொருள்களை உற்பத்தி செய்தல் – இரண்டாம் பிரிவு.(2)

படிக்க:
நவீன வேதியியலின் கதை | பாகம் 02
அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

மார்க்ஸ் எந்த அளவுக்குக் கெனேயின் கருத்துக்களால் ஊக்குவிக்கப்பட்டார் என்பதை இந்தக் கடிதத்தில் தன்னுடைய அமைப்பைப் பற்றி எழுதிய பிறகு அவர் பொருளாதார அட்டவணையை – அல்லது அதன் சாராம்சம் என்று சொல்லுவது இன்னும் பொருத்தம் – எழுதியிருக்கிறார் என் பதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மார்க்சின் அமைப்பு இந்த முதல் வடிவத்திலும் கூட கெனேயின் அட்டவணையிலிருந்து நிச்சயமாக அதிகமான அளவுக்கு வேறுபட்டிருந்தது; உபரி மதிப்பின் உண்மையான தோற்றுவாய் கூலி உழைப்பை முதலாளிகள் சுரண்டுவது என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. ஆனால் கெனேயின் புத்தகம் மிக முக்கியமான ஒரு கருத்தின் முளையைக் கொண்டிருந்தது என்பதுதான் இங்கே முக்கியமாகும். சில பொருளாதார அளவு விகிதங்களைப் பின்பற்றினால் மட்டுமே புனருற்பத்தி, அதன் கைவரப்பெறுதல் ஆகிய நிகழ்வுப் போக்குகள் எந்த இடையீடும் இல்லாமல் நடைபெற முடியும் என்பதே அது.

வி. நெம்ச்சினோவ்

கெனே தன்னுடைய அட்டவணையிலும் மார்க்ஸ் தன்னுடைய முதல் அமைப்பிலும், உற்பத்தியும் கைவரப்பெறுதலும் ஒவ்வொரு வருடமும் அதே பரிமாணங்களில், குவிப்பும் விரிவுபடுத்தலும் இல்லாமல் நடைபெறுகின்ற சாதாரணப் புனருற்பத்தியிலிருந்து தொடங்கினார்கள். இது சாதாரணமானவைகளிலிருந்து பன்முகமானவைகளுக்கு, குறிப்பிட்டவற்றிலிருந்து அதிகம் பொதுவானவற்றை நோக்கிச் செல்லுகின்ற இயல்பான முன்னேற்றமாகும். ஐன்ஸ்டைன் சடத்துவம் சார்ந்த இயக்கங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய குறிப்பிட்ட சார்பு நிலைத் தத்துவத்தை முதலில் உருவாக்கினார்; பிறகு அதிலிருந்து பொதுச்சார்பு நிலைத் தத்துவத்தை விளக்கும் வகையில் முன்னேறிச் சென்றார்.

மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலின் இரண்டாம் புத்தகத்தை மார்க்சின் மரணத்துக்குப் பிறகு எங்கெல்ஸ் வெளியிட்டார். இப்புத்தகத்தில் மார்க்ஸ் சாதாரண புனருற்பத்தித் தத்துவத்தை வளர்த்துச் சென்று விரிவடைந்த புனருற்பத்தித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைத்தார். விரிவடைந்த புனருற்பத்தி என்பது குவித்தலும் உற்பத்தியின் அளவில் அதிகரிப்பும் சேர்ந்த புனருற்பத்தியாகும். வி. லெனின் எழுதிய மிக முக்கியமான சில புத்தகங்களிலும் இந்தப் பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன.

படிக்க:
அவன் எங்கோ மறைந்து விட்டான் ! அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டானா ?
♦ துருக்கி : பள்ளிகளில் பரிணாம கோட்பாடு நீக்கம் ! ஜிகாதி கோட்பாடு சேர்ப்பு !

நவீன பொருளாதாரத்தின் மொழியில் சொல்வதென்றால், பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற தேசிய பொருளாதார அளவு விகிதங்களின் பிரச்சினையே கெனே ஈடுபட்டிருந்த முக்கியமான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையைச் சொல்வதே அது இன்று எவ்வளவு முக்கியமானதாகவும் அதிகமான அளவுக்குப் பேசப்படக் கூடியதாகவும் இருக்கிறது என்பதை ஒருவருக்கு நினைவுபடுத்துவதற்குப் போதுமானதாகும். இன்று சோவியத் யூனியனிலும் மற்ற நாடுகளிலும் பொருளாதாரத்தின் பல துறைகளிலும் இடையுள்ள உறவுகளின் இணைப்புக்குரிய அட்டவணைகளுக்கு ஆதாரமாக இருப்பவை கெனேயின் கருத்துக்கள் என்று ஒருவர் கூற முடியும். இந்த அட்டவணைகள் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள இடைஉறவுகளைப் பிரதிபலிக்கின்றன, பொருளாதார நிர்வாகத்தில் மென்மேலும் அதிகமான பாத்திரத்தை வகிக்கின்றன.

சமீப காலத்தில் மார்க்சியம் அல்லாத அரசியல் பொருளாதாரத்தில் கெனே மீது அக்கறை வளர்ந்திருக்கிறது. பொருளாதார அட்டவணையின் இருநூறாவது ஆண்டுவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தன்னுடைய தேசிய மேதைகளில் கெனேயும் ஒருவர் என்பதை பிரான்ஸ் அங்கீகரித்துக் கொண்டது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) வி. நெம்ச்சினோவ், பொருளாதார கணித முறைகளும் மாதிரிகளும், மாஸ்கோ , 1965, பக்கங்கள் 175, 177 (ருஷ்ய மொழியில் எழுதப்பட்டது).

(2) இந்தக் கடிதத்தில் மனிதன் உயிரோடிருக்கத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்வது முதலாவது உட்பிரிவைச் சேர்ந்ததென்று மார்க்ஸ் இன்னும் கருதுகிறார். மார்க்ஸ் ”பிஸியோகிராட்டுகளைப் பின்பற்றுகிற மாதிரி” அப்படிச் செய்கிறார் என்று வி. நெம்ச்சினோவ் எழுதுகிறார். 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க