நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !

ண்பண்டா ஒரு ஏழை கூலித் தொழில் செய்யும் நுவரேலியா வலப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர், சென்ற வருடம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ள உள்ளதால் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு ரண்பண்டாவை அதிகாரிகள் பணித்த போது, “எங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீங்கள் வெளியேறச் சொல்வது நியாயம்தான். ஆனால் நாம் ஏழைகள் நாங்கள் எங்கு செல்ல முடியும்?” என ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். மக்களை வெளியேறுமாறு கூறும் அரசுக்கு மக்களை எங்கு அனுப்புவது என்ற திட்டம் இல்லை.

நேற்று இரவு பொழிந்த கடும் மழையின் விளைவாக ரண்பண்டாவும் நாளை பரீட்சை எழுத உள்ள அவரது மகன் உட்பட அவரது முழுக் குடும்பமும் மண்சரிவில் புதைந்து மரணித்து விட்டனர். மரணித்தது ரண்பண்டா அல்ல, இந்த தேசத்தின் மொத்த மனச்சாட்சி.

வகைதொகையின்றி நடக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக எதிர்காலம் பற்றிய சிந்தனையின்றி மேற்கொள்ளும் திட்டங்களால் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை. இந்த மண்சரிவுக்கு பிரதான காரணம் பாரிய கருங்கல் உடைப்பு என பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய சுற்றாடல் அதிகாரசபை, சுற்றாடல் அமைச்சு இருந்து என்ன பயன்? நாம் எத்தனை குடும்பங்களை இழந்து விட்டோம்?

களுத்துறையில் குளோடன் தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் , பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கும் இடையில் காணப்படும் அழகுமிகு பெரு மலை படிப்படியாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் விடியும் போது அவ்விரு பாடசாலைகளும் மண்சரிவில் அமிழ்ந்து விட்டன என கேள்விப் படாமல் இருப்பதற்கு நாங்கள் இறைவனைப் பிரார்த்திப்போம்.

சுற்றாடலை அழித்து கடலில் நகர் அமைத்து என்ன பயன்? அபிவிருத்தி என்பது கட்டிடங்களின் விருத்தி அல்ல நாட்டு மக்களை வாழவைப்பதே உண்மையான அபிவிருத்தியாகும்.

அசாதாரண மழையினால் மட்டக்களப்பிலும் அனுராதபுரத்திலும் ஏழை மக்கள் படும் துன்பம் எத்தனை பேரின் கவனத்தை ஈர்த்துள்ளது? நாளை பல உயிர்களை காவு கொள்ளுமுன், அசாதாரண காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவுகளை எதிர்கொள்வதற்கு நாம் மக்களை பயிற்றுவிக்க வேண்டும்.

படிக்க:
MCC ஒப்பந்தம் : இலங்கை அரசே மடகஸ்காரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள் !
♦ இஸ்லாமோபோபியா : பாயல் தாத்வி – பாத்திமா லத்தீஃப் மரணத்தின் பொது அடையாளம் !

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவில் அபாயத்தை எதிர் கொண்ட பிரதேசங்களில் மக்கள் வேறு வழியின்றி வாழ்கின்றனர். இந்த மக்கள் தொடர்பில் அரசு உடன் கவனம் எடுக்க வேண்டும். வெளியேறுங்கள் என்று சொல்வது இலகுவானது. ஆனால் அந்த ஏழைகள் எங்கு செல்வது என்பதற்கான வழியை காட்ட வேண்டும். இன்னும் பல ரண்பண்டாக்களை எங்களால் இழக்க முடியாது.

நன்றி : ஃபேஸ்புக்கில் M.n. Mohamed. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க