கார்ல் மார்க்ஸின் மூலதன நூல் வெளியாகி ஏறக்குறைய 150 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. உலக அளவில் அதிக அளவில் அச்சாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ”மூலதன நூல் இன்றைய சூழலுக்கு பொருந்தாது; அது காலாவதியாகி விட்டது” என்று முதலாளித்துவவாதிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனாலும் காலத்தைக் கடந்து இன்றளவும் மூலதன நூல் தொழிலாளி காலத்தைக் கடந்து இன்றளவும் மூலதன நூல் தொழிலாளி வர்க்கத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளி பாய்ச்சி வருகிறது.

ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் பிரசுரமாகிவிட்டது. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் தோழர்களில் பெரும்பான்மையினர் இல்லங்களில் மூலதன நூல் அலங்கரித்து வந்தாலும், நூலை முழுமையாகப் படித்து முடித்தவர்கள் மிகச் சிலரே. ”இரண்டு பக்கம் படித்தேன், அதற்கு மேல் தொடர முடியவில்லை, அல்லது படித்தேன், ஆனால் புரியவில்லை” என்று பலர் சொல்லக் கேள்விபடுகிறோம். காரல் மார்க்ஸூம் தன்னுடைய முதல் ஜெர்மன் பதிப்புக்கு முன்னுரை எழுதியபோது முதல் அத்தியாயமான சரக்குகளின் பகுப்பாய்வைப் புரிந்து கொள்வதில் வாசகர்களுக்குச் சிரமம் இருக்கலாம் என்பதைப் பதிவு செய்து உள்ளார். ஆனால் அதைப் புரிந்து கொண்டுவிட்டால் மூலதன நூலை முழுமையாகப் படிப்பதில் எந்தச் சிரமமும் இல்லை என்பதை தெளிவுபடக் கூறி உள்ளார். பிரெஞ்சுப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் பிரெஞ்சு வாசகர்களை மனதில் கொண்டு அவர் கூறுவது இதோ, ”விஞ்ஞானத்துக்கு ராஜ பாட்டை ஏதுமில்லை; அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை அடைகிற வாய்ப்புண்டு”.

மார்க்ஸின் மூலதனம் மூன்று தொகுதிகளும் வெளிவரக் காரணமாயிருந்த ஃபிரடெரிக் எங்கெல்சும் தன் பங்கிற்கு மூலதனத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி வாசகர்களின் ஆர்வத்தை தூண்டி வந்தார். அவருடைய சுருக்கமான மூலதன உரை முழுமையடையவில்லை. ஆனாலும் ஜெர்மன், ஃப்ரெஞ்ஃசு ஆங்கில மற்றும் ருசிய மொழி சஞ்சிரிகைகளுக்கு அவர் எழுதிய மூலதன நூல் பற்றிய கட்டுரைகள் வாசகர்களின் ஆர்வத்தை மிகவும் தூண்டின.

தமிழ் வாசகர்களிடையே மூலதன நூல் வாசிப்பை அவசர அவசியமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இந்த ”மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்” என்ற நூல். (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து…)

புவிஈர்ப்பு விதி என்பது புறநிலையானது. அதனை நாம் மாற்றிடவே அல்லது மீறிடவே முடியாது. அதனைப் பற்றிய அறிவை மனிதன் பெற்றதனால், விமானங்களையும், புவி ஈர்ப்பு விசையை கடந்து செல்லக்கூடிய ராக்கெட்டுகளையும் உருவாக்கி அனுப்ப முடிகிறது. இது போன்றே புறநிலையான சமூக வளர்ச்சியின் விதியை தவிர்த்திடவோ, மீறிடவோ முடியாது. இவ்விதிகளை அறிந்த மனிதன் சமூக மாற்றத்தை விரைவுபடுத்தலாம். மார்க்சியம் இந்த விதியை அறிந்து செயல்படுவதற்குத் தேவையான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

மார்க்சியம் என்பது தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இம்மூன்றும் தம்முள் உள்ளிணைப்பைப் பெற்றதாக இருக்கிறது. இம்மூன்றில் பொருளாதாரம் முதன்நிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம் கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையாகவும் இருக்கிறது. சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் அரசியல் பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

… முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாகக் குறைநுகர்வே என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் இப்படிச் சொல்பவர்களில் சிலர் மார்க்சிய பொருளாதார அறிஞராக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். தோழர் த.ஜீவானந்தம் 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மிகை உற்பத்தியே காரணம் என்று மார்க்சிய முதலாசிரியர்களின் வழியில் நின்று விளக்கியிருக்கிறார். முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத உள்முரணின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி வளர்ச்சியடைந்த சமூகவழிப்பட்ட உற்பத்திக்கு தனிச்சொத்துடைமைக்கான உற்பத்தி உறவுகள் பொருத்தமற்றுப் போவதையும், அதன் தொடர்ச்சியாக சமூகப் புரட்சி ஏற்படுவதையும் மார்க்ஸிய நூல்கள் நமக்குத் தெளிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த விளக்கத்தில் காணப்படும் முரணை தவிர்க்க முடியுமா? என்ற முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சின் ”மூலதனம்” நூலை படித்தாராய்கின்றனர். சமூக மாற்றத்திற்குப் போராடுகின்ற பலர் இதன் அவசியத்தைப் பற்றியப் போதிய அறிவு பெறாமையினால், முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய சமூக மாற்றம் என்ற சொல்லோடு மார்க்சியத்தைச் சுருக்கிப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சமூகத்தைப் பற்றிய விஞ்ஞான புரிதலுக்கும், அதனைப் புரட்சிகரமாக மாற்றுவதற்கும் தேவைப்படுகின்ற மார்க்சிய வழிபட்ட அரசியல் பொருளாதார அறிவைப் பெறுவதற்கு மார்க்சின் ”மூலதனம்” நூலைப் படிக்க வேண்டும். ”மூலதனம்” நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார். இந்த சுருக்கத்தை மட்டும் படித்தால் ”மூலதனம்” நூல் முழுமையையும் அறிந்து கொண்டதாகாது. முழுமையாக நூலை படிப்பதற்குத் துணைபுரியும் வகையில் அனைத்து அத்தியாயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனைப் புரிந்து இந்நூலின் துணையோடு மார்க்சின் ”மூலதனம்” நூலைப் படித்து நிறைவு செய்ய வேண்டும். ( அ.கா.ஈஸ்வரன் எழுதியுள்ள நூலுக்கான மதிப்புரையிலிருந்து…)

எல்லா விஞ்ஞான நூலுக்கும் இருக்கிற பிரச்சினை மூலதன நூலுக்கும் உண்டு. அதாவது மார்க்ஸ் கையாளும் சில கலைச் சொற்களின் தத்துவ விஞ்ஞான உள்ளடக்கம் மக்கள் புரிகிற முறையில் சொல்லப்படவேண்டும். அப்படி சொல்லவில்லையானால் அந்தச்சொல் பிதற்றலாகி மக்கள் மனதில் தைக்காது. அந்தவகையில் மார்க்ஸ் கையாளும் தத்துவ விஞ்ஞான உள்ளடக்கம் கொண்ட கலைச் சொற்களை புரியவைக்க எடுத்த முயற்சியில் நண்பர் ஜீவா எழுதிய நூல் வெற்றி பெற்றுள்ளது எனலாம். சரக்கு, மதிப்பு, உபரிமதிப்பு, சரக்குகளின் மாய்மாலம் போன்ற கலைச் சொற்களின் உள்ளடக்கம் புரியும்பொழுதுதான் மூலதன நூலின் சிறப்பினை ஒருவர் உணர முடியும். இந்நூல் அந்தக் கடினத்தை எளிமையாகக் கூற முயற்சித்திருக்கிறது.

இன்று மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதியுள்ளார் என்ற தகவல் தெரியாதவர்கள் உலகநாடுகளிலே மிகக் குறைவானவர்களே. அதேநேரம் அந்த நூல் என்ன சொல்லுகிறது என்று கேட்டால் தெரியாது என்று சொல்லுகிறவர்களே 99 சதம் இருப்பர். அப்படிச் சொல்ல நேர்கிற நிலைமையை மாற்றுகிற முறையில் நண்பர் ஜீவா எழுதிய நூல் அமைந்துள்ளது என்பதே இந்த சிறிய நூலின் அடுத்த சிறப்பாகும்.

பொருளாதாரப் பிரச்சினைகளை அலசுகிறபொழுது முதலீடு, கூலி, விலை, லாபம், நட்டம் என்பது மட்டுமே கண்ணில்படும். அது ஏதோ ஜடப்பொருள்களுக்கிடையே உள்ள உறவாக தோன்றுமே தவிர முரண்பாடுகளை உருவாக்கும் மானுட உறவாக இருப்பது பார்வையில் படாது.

சரக்குற்பத்தியில் இருக்கும் முரண்படும் வர்க்க உறவைப் பார்க்க வைத்தது மார்க்சின் மூலதன நூலே. மூலதன நூல் பரவுவதற்கு முன்காலத்தில் கஜானாவில் திரண்டு கிடக்கும் தங்கம் வெள்ளி இவைகளின் அளவு, ஆயுத பலம் இவை இரண்டுமே ஒரு நாட்டின் வல்லமைக்கு அடையாளமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகவும் இருந்தது.

படிக்க :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு

இன்று ”மானுட வளர்ச்சிக் குறியீட்டெண்”, ”மானுட மகிழ்ச்சிக் குறியீட்டெண்”, ”வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திறன்”, ”தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வை கணக்கிடும் முறை” இவைகளோடு பொருளாதார வளர்ச்சியை இணைத்துக் கூறும் முறைகள் வந்துவிட்டன. இவைகளைப் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களாகக் கொள்ளும் நிலை எய்தக் காரணம் மூலதனம் என்ற நூலின் தாக்கம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த முயன்ற சோவியத் மறைந்தாலும் அது உருவாக்கிய மார்க்சிய அணுகுமுறையின் ஒரு முக்கிய அம்சம் பரவலாகிவிட்டது என்பதன் அடையாளமே இந்த அளவுகோல்கள். (வே.மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள நூலுக்கான மதிப்புரையிலிருந்து…)

நூல் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
ஆசிரியர் : த.ஜீவானந்தம், B.com, MBA.

வெளியீடு : சுருதி வெளியீட்டகம்,
எண்:123, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை – 600 011.
தொலைபேசி எண் : 94440 09990
மின்னஞ்சல் :jeeva1953@yahoo.com

பக்கங்கள்: 156
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க