சென்னையில் வேலை தேடியும், படிக்க வருவோரும், தனி வீடு கட்டுப்படியாகாத இளைஞர்களுக்கும் கடைசி புகலிடம் மேன்சன். தெருவுக்குத் தெரு மேன்சன்களாக நிரம்பி வழியும் இடம் சென்னை திருவல்லிக்கேணி.

மெரினா கடற்கரையிலிருந்து கூப்பிடும் தூரத்திலிருக்கும் இந்த இடத்திற்கு ஏராளமான முகங்கள் உண்டு – அரிதான பழைய புத்தகங்கள் விற்கும் சாலையோரக் கடைகள்; வாய்க்கு ருசியாக மூலைக்கு மூலை மாட்டுக்கறி பிரியாணி விற்கும் சிறு கடைகள்; சென்னைக்கு பெருமை சேர்க்கும் தொன்மைவாய்ந்த அரசு கல்வி நிறுவனங்கள்; புத்தகப் பதிப்பகங்கள். இவற்றுக்கு மத்தியில் “பேச்சுலர் பேரடைஸ்” என்று செல்லமாக அழைக்கப்படும் மேன்சன்கள்.

திருவல்லிக்கேணி மேன்சன்களில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை பலர் கதைகளாக எழுதியிருக்கின்றனர். சிலர் அதை வைத்து எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளனர். இத்தனை சிறப்பு வாய்ந்த மேன்சன்களின் இப்போதைய நிலவரத்தை அறிய ஆர்வமானோம்.

மேன்சன் பகுதிகளின் இதயமான திருவல்லிக்கேணி பெரிய தெருவை அடைந்தோம்.

இந்து, கெல்லட் என்ற நூறாண்டு பழமை வாய்ந்த பள்ளிகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த மேன்சன்களில் பல வணிக வளாகங்களாக உருமாறியிருந்தன. சில பழைய கட்டிடங்களாக மிஞ்சியிருந்தன. சில சொத்து வழக்கில் மூடப்பட்டு கிடந்தன. திறந்திருந்த சில மேன்சன்கள் கைவிடப்பட்ட பேய்ப் பங்களாக்களாகக் கும்மிருட்டில் காட்சியளித்தன.

அங்கே நுழைந்ததும் வெளித் தாழ்வாரத்தை அடுத்து ஒடுங்கியிருந்த மேசையின் பின்னால் தலை கவிழ்த்தபடி ஒரு இளைஞர் இருந்தார். எங்களை அழையா விருந்தாளியாக நோட்டமிட்டார். அவரிடம் நாம் பழைய மேன்சன்களின் புகழ் பாடிவிட்டு, இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டோம்.

அவர் நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு, நீண்ட நேரம் மவுனமாக இருந்தார். திடீரென நம்மை வெறித்துப் பார்த்து மெல்லிய குரலில், உடைந்த வார்த்தைகளை உதிர்த்தார்.

கமலக்கண்ணன், மேன்சன் மேலாளர்.

“நானே இந்த மேன்சனில்தான் தங்கியிருக்கேன். வேலை தேடிட்டிருக்கேன். திருநெல்வேலி சொந்த ஊர். ரெண்டு வருசம் ஆயிடுச்சு. வேலை எதுவும் கிடைக்கல. ஊருக்குப் போனாலும் அங்கும் ஒன்னுமில்ல. அதனால வாடகை கொடுக்க முடியாம, இங்கேயே பார்ட் டைமா இந்த வேலைய பார்க்கிறேன். பகல்ல வேலை தேடுறதுதான் வேலை. மீதி நேரம் இங்கே ரிசப்சன்ல உக்கார்ந்திருப்பேன்.

மாசம் ஒரு கட்டிலுக்கு (ரூம் இல்லை) 2,300 ரூபாய் வாடகை. லெட்டின் பாத்ரூம் எல்லாம் காமன். (ஒரு மாடிக்கு 2 பாத் ரூம், 2 லெட்டின் – காலையில கியூவுல நிக்கணும்).

வீட்டிலிருந்து மாதம் 6 ஆயிரம் ரூபா அனுப்புறாங்க. என்னோட எல்லா செலவும் அதுலதான். 3 வேள சாப்பாடு. வெளியில் வேலை தேட போய் வர பஸ் செலவு, உடம்பு சரியில்லன்னா மாத்திரை செலவு; டீ, துணி துவைக்கிற, குளிக்கிற சோப்புன்னு 2 வருசமா இப்படித்தான் என் வாழ்க்கை போகுது. வீட்டுலயும் இதுக்கு மேல பணத்த எதிர்பார்க்க முடியாது. கூடப் பொறந்த அண்ணனும் இதேமாதிரி மேன்சன்ல தங்கி டி.என்.பி.எஸ்சி படிச்சி வேலைக்கு போயிட்டான். அவன்தான் எனக்கு பணம் அனுப்புறான். இதுல வாடகை மிச்சப்படுத்தத்தான் இங்கே வேலை செய்யிறேன்.

படிக்க:
கலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !

இந்த மேன்சன்ல மத்தவங்க வாழ்க்கையும் என்னை மாதிரிதான். எங்கே போறதுன்னே தெரியாம ஓடிகிட்டிருக்காங்க. சில பேரு பல வருசமா சி.ஏ. படிக்கிறேன், டி.என்.பி.எஸ்சி எழுதுறேன். குரூப் எக்சாம் படிக்கிறேன்னு தங்கியிருக்காங்க. இப்படி நாலஞ்சி வருசமா வேலையே இல்லாம தங்கியிருக்கவங்க அதிகம் என்றார்.

நாம், “தினமும் ஓட்டல் சாப்பாடு, ஒரே அறை வாழ்க்கை போரடிக்கவில்லையா” என்றோம்.

அதற்கு அவர், அதான் பக்கத்துல பெரிய பீச் இருக்கே, அங்கே போவோம். நெறைய நேரம் அங்கேதான் கழிப்போம். நிஜ வீடு எங்களுக்கு பீச்தான் என்றார் சிரித்துக்கொண்டே.

மேன்சன் உட்புறம்.

***

ரகுமான், திருச்சி பொன்மலை.

மேன்சனிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க ரகுமானிடம் பேச்சு கொடுத்தோம்.

“என்னது, மேன்சன் வாழ்க்கையா? ஊருல இருக்க முடியுமா, அதான் இங்கே வந்தோம். இப்போ இங்கே இருக்க முடியாது எங்கே ஓடுறதுன்னு தெரியாது முழிக்கிறோம்.

மாசம் சம்பளம் வாங்குற வேலை கிடைக்கல. தினக்கூலியா போகலாமுன்னு பார்த்தா அதுக்கும் வழியில்ல. வீட்டுக்கு வெள்ளை அடிக்கிற வேலையிலிருந்து கலவை கலக்குற பெரியாள் வேலை வரைக்கும் வடநாட்டுக்காரன் வந்து பூந்துட்டான். 200 ரூபா கொடுத்தா போதுமுன்னு கியூவில நிக்கிறான். இனி கூலி வேலைக்கு போகனுமுன்னா கூட வெளிநாட்டுக்குத்தான் போகணும்” என்றார்.

***

காளி, விடுதி காப்பாளர்.

இந்த மேன்சன்ல 3 வருசமா வாட்ச்மேன் வேலை செய்யிறேன். இது சாதாரண ஆளுங்க தங்குற மேன்சன் இல்ல. பணம் இருக்குறவுங்க தங்குறது. ஒரு ரூமுக்கு 2 கட்டில். கட்டில் ஒன்னுக்கு மாத வாடகை 4,500 ரூபாய். எல்லா ரூமும் அட்டாச்டு பாத் ரூம். நிரந்தரமா வேலை செய்யிறவுங்கதான் இங்கே அதிகம்.

புதுசா அரசு வேலை கெடச்சவுங்க, வக்கீல் வேலை பாக்குறவுங்க, வெளியிலிருந்து வர்ற அரசியல்வாதிங்க, தனியார் ஆஸ்பத்திரிக்கு வர்ற நோயாளிங்க என பலதரப்பட்ட பேரு இங்கே தங்கியிருக்காங்க.

சொந்தமா சமையல் செஞ்சி சாப்பிடுறதுக்கும் இங்கே வசதி உண்டு. கேஸ் அடுப்பு, பாத்திரங்கள் எல்லாம் வாடகைக்கு கிடைக்கும். பக்கத்து மெஸ்ல கேரியர் சாப்பாடு வாங்கி சாப்பிடுறவங்களும் இங்கே இருக்காங்க.

படிக்க:
தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !
♦ வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

***

நாம் மேன்சனிலிருந்து வெளியேறும் நேரம் ஒருவர் அவசரமாக தனது டூ வீலரை வெளியே இழுத்துக் கொண்டிருந்தார். ஒயிட் & ஒயிட்டில் எடப்பாடி படம் பாக்கெட்டில் மின்ன கைப்பேசியில் சத்தமாக யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். நாம் அவரிடம் நெருங்கி, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். போன் பேசிவிட்டு வாருங்கள், ப்ளீஸ் என்றோம். அவர் பேசி முடித்துவிட்டு நம்மிடம் வந்தார்.

தேவேந்திரன், வழக்கறிஞர்.

“சும்மா வந்துட்டாங்க ஊருலேருந்து கிளம்பி. நம்மகிட்ட ஆளுமை இருக்கு. அதனால அதிகாரம் பண்றோம். அவங்க வெறுங்கையில முழம் போட்டா முடியுமா” என்றார். கோபமாக இருந்த அவரிடம், நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது மேன்சன் வாழ்க்கை பற்றி கேட்டோம்.

“ஆளும் கட்சியிலிருந்து வக்கீல் தொழில் செய்யும் நீங்கள், இந்த வயதிலும் மேன்சனில் தங்கியிருப்பது அதிசயமாக இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன? மேன்சன் மீது அவ்வளவு காதலா” என்றோம்.

அதற்கு அவர் நம்மிடம் பட்டாசு மாதிரி வெடித்தார்.

“அதிகாரம் சும்மா கிடைக்காது. ஆளுமை இருக்கணும். அதுக்கு திறமை வேணும். திறமை சும்மா வராது. அதுக்கு அதிகாரம் இருக்குறவுங்க நம்மை சுத்தி இருக்கணும். அதிகாரம் இல்லாத இடத்தில இருந்தா உனக்கு ஆளுமை எப்படி வரும்? அது வேஸ்ட். இங்கே இருந்தா ஆளும் கட்சிக்காரங்கள பார்க்க பெரிய அதிகாரிங்க வருவான். இந்த மேன்சன் எல்லாம் அதிகார மையம். அவங்ககிட்ட பழகி அவங்கள நாம படிக்கணும். அப்பதான் நாம அதிகாரத்துல உக்கார்றது எப்படின்னு தெரியும்.

எடப்பாடி எடத்துல நான் நிக்கணும். அதுக்குத்தான் நான் இங்கே இருக்கேன்” என்றார் சீரியசாக.

நாமும் சீரியசாக, “இது எடப்பாடிக்குத் தெரியுமா? அவர் படத்த பாக்கெட்டுல வச்சிகிட்டு அவருக்கே குழி தோண்டுறீங்களே! இது சரியா?” என்றதும், அதற்கு அவர், “ஆளுமை இருந்தாத்தான் அதிகாரம் வரும்” என்று ஒரே போடாகப் போட்டார். பின் அவரே தொடர்ந்தார்.

“அம்மாகிட்டே இருந்து சின்னம்மா, சின்னம்மாகிட்டே இருந்து ஓபிஎஸ், ஓபிஎஸ்கிட்டேயிருந்து இபிஎஸ், இபிஎஸ் கிட்டேயிருந்து என்கிட்டே வராதா? வர வைப்பேன். அதுக்குத்தான் நிக்காம ஓடிகிட்டே இருக்கேன். மொதல்ல இந்த ஃபோன ஒழிக்கிறேன். நம்ம ஃபோன்லேயே நம்மகிட்ட ஆப்பு வைக்கிறாங்க. ஓசியிலயே கன்சல்ட் பண்ணிட்டு ஓடிடுறாங்க. பணமே வர மாட்டேங்குது. இனி, எவன் பேசினாலும் என்னோட பேங்க் அக்கவுண்ட்ல கன்சல்ட் பீஸ் போட்டாத்தான் போன்லேயே பேசுவேன். எனக்கு பீஸ் கட்டுன பில்ல, எனக்கு வாட்ஸ் அப்பில.. அனுப்பணும். அப்பத்தான் நம்பரையே எடுப்பேன். இப்படி இல்லேன்னா நம்ம வாழ்க்கை மேன்சன்லயே போயிடும். கடைசியில டூவீலரை ஓட்டியே செத்துடுவேன் போலிருக்கு. இதுக்கா தஞ்சாவூர் ஒரத்தநாட்டிலிருந்து வந்திருக்கேன்” என்று சீறினார்.

நான் செக்ரட்ரியேட்டுக்கு அவசரமாகப் போகணும்னு வண்டியை ஸ்டார்ட் செய்தார். நாமும் தற்கால மேன்சன்கள் உருவாக்கிய ‘அரசியல்வாதியைப் பார்த்த மகிழ்ச்சியில்’ திரும்பினோம்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க