ந்நூல் பல்வேறு சமயங்களில் பல தினத்தாள்களில் வெளியிடப்பட்ட எனது (ச.சீ.இராசகோபாலன்) கட்டுரைகளின் தொகுப்பே.

பதினைந்து ஆண்டுகட்கு முன் கி.பி.2000-க்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற சர்வதேச இலக்கை எய்திட தமிழ்நாடு அரசிற்காக யுனிசெப் ஆதரவுடன் ஒரு செயல் திட்டம் வகுக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகச்சீரிய முறையில் தயாரிக்கப்பட்ட அவ்வறிக்கையைச் செயல்படுத்த அரசும், கல்வித்துறையும் முனையவில்லை. குறித்த காலத்தில் இலக்கையும் அடையாதது வியப்பில்லை. அரசியலுறுதியும், மக்கள் கிளர்ச்சியும் இல்லையென்றால், அனைவர்க்கும் கல்வி என்பது கனவாகவே இருக்குமென்று கருதிய பொழுது, தினமணியின் அந்நாள் ஆசிரியர் திரு. இராம.சம்பந்தம் அவர்கள் என்னைக் கட்டுரைகள் வாயிலாக மக்களிடம் செய்தி எடுத்துக்கூறுமாறு தூண்டினார். அதுவே எனது ஆக்கப்பணிக்குத் தொடக்கம்.

பின்னர், மனித உரிமை, குழந்தைகள் உரிமை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும், குழந்தை உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றிற்கான பொது விசாரணைகளில் ஒருவராகப் பணியாற்றியதும் எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது. நாற்பதாண்டு ஆசிரியப்பணியில் அறிந்திராத பல உண்மைகளும் அறிந்து அதிர்ச்சியுற்றேன். கும்பகோணம் பள்ளித் தீ விபத்திற்கு அரசு பொறுப்பேற்காதது கண்டு வெகுண்டேன். கல்வி மற்றும் பள்ளிய முறைகளில் மனிதநேயத் தன்மை இல்லாது ஒரு இயந்திரத்தனமான செயல்பாடு இருப்பதும், ஏழை எளிய மாணவரிடம் எவ்வித பரிவும் இல்லாமல் இருப்பதும் கண்டு அவற்றை மக்களிடம் தெரிவிக்கும் முறையில் கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் சில மட்டும் இச்சிறு நூலில் இடம் பெறுகின்றன. (நூலாசிரியர் அறிமுகத்திலிருந்து…)

பள்ளிகள் கல்விக்கூடங்களாக மாறிட …

… தற்பொழுது மாணவர் எதிர்கொள்ளும் மன அழுத்தம் அளவிடற்கரியது. படிப்பு, படிப்பு என்றும் தேர்வு தேர்வென்றும் அவர்கள் வாழ்க்கை கழிகிறது. நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளப் பயிற்சி வகுப்புகள், ஆயத்த வழிகாட்டிகள், மாதிரித் தேர்வுகள் முதலியன தமிழ்நாட்டில் பல கோடி வணிகமாகப் பெருகியுள்ளது. பிற மாநிலங்களிலும் இதே நிலைதான். காலை 5 மணிக்கு எழுந்து தனிப்பயிற்சி வகுப்புகள் ஒன்று மாறி மற்றொன்று என இரண்டு மூன்று இடங்களுக்குச் சென்று களைத்துப் பள்ளிவரும் மாணவர் வகுப்பில் கண்திறந்தும் மனம் உறங்கிய நிலையில் பாடத்தில் கவனம் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். வசதியற்ற ஏழை மாணவர்க்கு எவ்வித தனிப்பயிற்சியும் கிடையாது. தமது சொந்த முயற்சியிலேயே மற்றவரோடு போட்டி போடுவது ஒரு போராட்டமே.

மாணவரது ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படாது பெற்றோர் விருப்பம் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றது. மாணவர்கள் தமது திறன்களையும், ஆசைகளையும் வளர்க்க இயலாமல் போவதோடு தாம் சேர்ந்த படிப்பிற்கு ஆற்றலாலும், மனப்பான்மையாலும் அன்னியமாக இருப்பதால் மனச்சோர்விற்கு உட்படுகின்றனர். பல சமயங்களில் தற்கொலைவரை செல்கின்றனர். ஐந்து வருடப் படிப்பை ஏழு ஆண்டானாலும், முடிக்க இயலாமல் திணறுகின்றனர்.

… தேர்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதால், கல்வியின் உன்னத நோக்கங்கள் துறக்கப்படுகின்றன. உலகைப் பற்றிய அறிவும், வாழும் திறன்களும், சமூகத்தில் ஒரு நல்ல உறுப்பினராக இருக்கத் தேவையான கூடி வாழும் திறனும் வளர்க்கப்படுவதில்லை. சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்தறிதல் போன்றவை வளர்ந்திட வகுப்பறை முறைகள் உதவுவதில்லை. பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல், பிரச்சினைகளை உணர்ச்சிபூர்வமாக அல்லாது அறிவார்ந்த நிலையில் அணுகும் திறன் இல்லாது மாணவர் கற்கின்றனர். மனிதநேயம், நல்ல பழக்கவழக்கங்கள், நிறை மனப்பான்மைகள் வளர்க்கப்பட, பள்ளி நடைமுறைகள் உதவுவதில்லை.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

தாமாகக் கற்கும் ஆற்றல் பெறாத காரணத்தால் வளர்ந்துவரும் தொழில்நுட்பச் சமுதாயத்தில் அறிவாலும் ஆற்றலாலும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள அறியாதவராக மாணவர்கள் உள்ளனர். மேலும் மாணவரிடம் உள்ள பன்முகத்திறன்கள் பற்றி கவலைப்படாது. நுண்கலை, இசை, விளையாட்டு, இலக்கியம் போன்றவற்றில் திறனுள்ள மாணவர் அவற்றை வளர்த்துக்கொள்ள பள்ளிகள் பெரும்பாலும் தவறுகின்றன. ஓய்வு நேரத்தைச் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கைகளையும், உடல் உழைப்பையும் கொண்டு படைப்புச் செயலில் ஈடுபடுத்திக் கொள்ள இயலாது உள்ள இக்கல்வி முறையை மாற்றி அமைக்கவேண்டும். (நூலிலிருந்து பக்.39-40)

ரஷ்யாவில் கல்வி !

ச.சீ.இராசகோபாலன்

… சோவியத் ஒன்றியத்தில் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கண்டேன். எனது நல்வாய்ப்பு, பள்ளிகளில் சேர்க்கை நாளன்று ஒரு சிறு கிராமத்திலிருந்தேன். புதிதாகச் சேர்க்க வேண்டிய குழந்தைகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் குழந்தைகள் பேண்டு வாத்தியத்தோடு வீடு வீடாகச் சென்று புதிதாகச் சேர இருக்கும் குழந்தைகளை அழைக்கிறார்கள். அக்குழந்தைகளும் இவர்களோடு சேர்ந்துகொள்ள வாத்திய முழக்கத்தோடு பள்ளிவந்து சேர்கின்றனர். இந்நடைமுறை பத்து, பதினைந்து நாட்களுக்கு நடைபெறும் என்றும், புதிய குழந்தைகள் பள்ளியை ஏற்கும் வரையில் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்பதையும் அறிந்தேன். தாயார் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் தனது குழந்தையை அடித்துக் கொண்டே பள்ளிக்கு இழுத்துவரும் நமது ஊர்க் காட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பள்ளிச் சேர்க்கை முறை மிகவும் இனிமையானது.

மழலையர் கல்வி 4 ஆண்டுகளுக்குக் குறையாமல் அளிக்கப்படுகிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத் தனி இல்லம் அமைக்கப்பெற்று, நாடே அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்கிறது. தண்டனைகளில்லாத பள்ளிகளாக அங்கு இயங்குகின்றன. குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் கல்வி கற்கின்றனர். (நூலிலிருந்து பக்.62)

நூல் : தமிழக பள்ளிக் கல்வி
ஆசிரியர் : ச.சீ.இராசகோபாலன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424, 2433 2924.
மின்னஞ்சல்: thamizhbooks@.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : commonfolks | panuval |noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க