“எனது மாநிலத்தையும் மக்களையும் எடப்பாடி பழனிச்சாமி பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதற்கு நான் மிக மோசமாக வெட்கப்படுகிறேன். என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிப்பதில் அவரது சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. இதற்கு ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதுவரை இந்த தற்காலிக அதிகாரத்தை அனுபவித்துக் கொள்ளுங்கள்.
ஜெயலலிதா இந்த சட்ட திருத்தத்தை நிச்சயம் ஆதரித்திருக்க மாட்டார். அதிமுக தனது அறவிழுமியங்களை ஜெயலலிதா இல்லாத நிலையில் நொறுக்கி விட்டது” – இவ்வாறாக ட்விட்டரில் கொந்தளித்துள்ளார் சமூக செயல்பாட்டாளரும், ட்விட்டர் கருத்துரையாளரும் நடிகருமான சித்தார்த்.
Deeply ashamed that Edapadi Palanisamy represents my state and our people. Supporting the #CAB shows his true colours, his lack of integrity and his desperate need to remain powerful at any cost. You will all be held accountable. Enjoy your temp power till then. #IndiaRejectsCAB
— Siddharth (@Actor_Siddharth) December 9, 2019
இவர் இயக்குநர் ‘ஷங்கர்’ இயக்கிய “பாய்ஸ்” உட்பட சில திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன், தொலைக்காட்சி கருத்துரையாளர் சுமந்த்ராமன், உள்ளிட்ட வேறு சிலரும் கூட “அம்மா இல்லாத நிலையில் அதிமுக ஆட்டுக்குட்டிகள் வழி தவறிப் போனதை” நினைத்து வருந்திக் கொண்டுள்ளனர்.
நிற்க.
எல்லைப் புற நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
நேற்று (09/12/2019) நள்ளிரவு இந்த மசோதா பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியது. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன.
படிக்க:
♦ தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !
♦ முசுலீம்களை மட்டும் விலக்கும் குடியுரிமை திருத்த மசோதா: அறிவியலாளர்கள் கூட்டறிக்கை !
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் (1955) படி, 11 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோர முடியும். ஏற்கெனவே இருந்த இந்த சட்டத்தில் தான் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முசுலீம் அல்லாதவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியிருந்தால் இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொள்ளவும் இந்த சட்ட திருத்தம் வகை செய்கின்றது.
மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை மறுப்பது என்பதை சட்டமாக்கியதன் மூலம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிற கருத்தாக்கத்தை குப்பைத் தொட்டியில் எரிந்துள்ளது பாரதிய ஜனதா. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்கலாம், பாரபட்சம் காட்டலாம் என்பதற்கு ஒரு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சட்ட திருத்தத்திற்கு இந்துத்துவ கும்பல் வேறு வகையாக விளக்கம் அளிக்கிறது. அதாவது, அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் போது அவர்கள் வாழ்க்கை தேடி இந்தியா வருகின்றனர். இவர்களுக்கான ஒரு பாதுகாப்பு தான் இந்த சட்ட திருத்தம் என்பதே அதை ஆதரிக்க கூடியவர்கள் முன்வைக்கும் வாதம் – அதாவது சிறுபான்மையினரின் உரிமையை இவர்கள் பாதுகாக்கிறார்களாம்.
சரி, அப்படியெனில் இலங்கையில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்கள் ஏன் இவ்வாறு குடியுரிமை பெறுவதில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்? மத அடிப்படையிலும், மொழி அடிப்படையிலும் சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்கள் சிங்களப் பேரினவாத அரசுகள் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்ட இன ஒடுக்குமுறை மற்றும் போரின் விளைவாக அங்கிருந்து தப்பி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 62 ஆயிரம் ஈழத் தமிழ் அகதிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இவர்கள் பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்; இவர்களில் பலர் இந்திய குடியுரிமை பெற்றுள்ளனர் – பலர் குடியுரிமை பெற முயற்சித்தும் வருகின்றனர்.
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்ட திருத்தமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் (என்.ஆா்.சி) ஈழத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமையை தடுப்பதோடு ஏற்கனவே குடியுரிமை பெற்றிருந்தால் அதை ரத்து செய்து விடுகின்றது.

இந்த சட்டதிருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்கிற புரிதலில் பலர் எதிர்த்து வருகின்றனர் – ஆனால், சிறுபான்மையிருக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்குமே எதிரானது என்பதே உண்மை.
தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும் அந்நியர்களே என்பது தான் இந்துத்துவா கொள்கை. அதைத் தான் இந்த சட்ட திருத்தத்தில் இருந்து ஈழத் தமிழர்களை விலக்கி இருப்பது நிரூபிக்கிறது. பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற பழந்தமிழ் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார் என்று சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டு காவிகள் புல்லரித்துக் கொண்டிருந்தது நமக்கு மறந்திருக்காது. பாரதிய ஜனதாவுக்கு தமிழர்களின் மேல் உள்ள பாசமும், “கசாப்புக் கடைக்காரனுக்கு ஆட்டின் மீது இருக்கும் பாசமும்” வேறு வேறானது அல்ல.
***
இந்த சட்ட திருத்தத்தை அதிமுக ஆதரித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதாவின் தயவில் காலம் தள்ளும் ஒரு அடிமை என்பது புதிய செய்தி அல்ல. பழனிச்சாமி – பன்னீர் ஜோடியின் அடிமை அரசாங்கம் ஒரு முழு இந்துத்துவ ஆட்சியினால் ஏற்படும் பாதிப்புகளை விட பல மடங்கு அதிக பாதிப்புகளை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி வருகின்றனர்.
மோடியின் திட்டங்களை பிற பாஜக ஆளும் மாநிலங்கள் அமல்படுத்துவதற்கு முன் முண்டியடித்து அமல்படுத்துவதில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மும்முரம் காட்டி வருவது அனைவரும் அறிந்தது தான். எனவே இதில் நமக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.
படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
ஆனால், சமூக ஊடக பிரபலங்களுக்கு ‘ஏ1 ஜெயலலிதா’ மீது உள்ள விசுவாசம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது. பாபர் மசூதியை இடிக்க ஆள் அனுப்பியது, அன்றைய நிலையில் பாஜகவே தயங்கிய மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றியது, கோயில்களில் பலி கொடுப்பதை தடுக்க சட்டம் கொண்டு வந்தது என, மோடியே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்தவர் என்பதை இந்த “அறிவுஜீவிகள்” எப்படி மறந்தார்கள் என்பது தான் நமக்கு புரிபடவில்லை.

அடுத்ததாக, தமிழர்களுக்காகவே கட்சி நடத்தி வருவதாக (குறிப்பாக ஈழத் தமிழர்களுக்காக) மேடை தோரும் சண்டமாருதம் செய்து வரும் சீமான் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து இது வரை (டிசம்பர் 10, நேரம் நண்பகல் 12 வரை) வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை ஏற்கனவே திட்டமிட்டு நடத்திய “மனித உரிமை தின விழிப்புணர்வு” கூட்டம் நடந்து கொண்டிருந்த போது இந்த சட்ட திருத்த மசோதா குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்து வந்ததால் மிக மென்மையான வார்த்தைகளில் ஒரு கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி தங்களது கடமையை முடித்து கொண்டது அந்த கட்சி. வழக்கமாக சீமானின் வாயிலிருந்து பாயும் தோட்டாக்களோ, போராட்ட அறிவிப்போ இந்த முறை காணவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
***
ஈழத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது என்று சட்டம் போட்டுள்ளது பாரதிய ஜனதா – அதை ஆதரித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் அரசு. பாரதிய ஜனதா என்பது சிறுபான்மையினருக்கு – குறிப்பாக முசுலீம்களுக்கு – மாத்திரமே எதிரான கட்சி என்றும், அக்கட்சியால் நமக்கு ஒன்றும் பாதிப்பில்லை என்றும் தங்களை இந்துக்களாக கருதிக் கொள்ளும் தமிழர்கள் நினைத்தால் அதை விட பெரிய இளிச்சவாயத்தனம் வேறில்லை. “நீ இந்துவாக இருந்தாலும், தமிழன் என்றால் எங்களுக்கு அந்நியனே” என்று அறிவித்துள்ளது பாஜக.
வசதிகளுக்காக போராடிய காலம் போய், வாழ்வதற்கே போராட வேண்டிய ஒரு காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இனிமேலும் போராடுவது என்பது நம் முன் உள்ள பல விருப்பத் தேர்வுகளில் ஒன்றல்ல – அது மட்டுமே பிழைத்துக் கிடக்க நம் முன் உள்ள ஒரே வழி.
– சாக்கியன்