Saturday, April 19, 2025
முகப்புசெய்திஇந்தியாஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !

ஜே.என்.யூ : பேரணி சென்ற மாணவர்கள் மீது “காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” தாக்குதல் !

குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற ஜே.என்.யூ மாணவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்தி கடுமையாக தாக்கியுள்ளது டெல்லி போலீசு.

-

நாற்பது நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி போராடி வருகிறார்கள். மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத பல்கலைக்கழக நிர்வாகம், தன்னை ஆட்டிவைக்கும் மத்திய அரசின் போலீசு துணையுடன் அவர்களை ஒடுக்கி வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த போராட்டத்தின்போது உடல் குறைபாடு கொண்ட மாணவர்களைக்கூட அடித்து உதைத்தது போலீசு. இந்நிலையில், திங்கள்கிழமை (09.12.2019) குடியரசு தலைவர் மாளிகை நோக்கி மதியம் 2 மணியளவில் பேரணியாகச் சென்ற மாணவர்களை வழியிலேயே தடுத்தி நிறுத்தி கடுமையாக தாக்கியுள்ளது டெல்லி போலீசு.

ஆண், பெண் என வித்தியாசம் பார்க்காமல் அனைவர் மீதும் தடியடி நடத்தியுள்ளது போலீசு. ஆய்வு பட்ட மாணவியான ப்ரீத்தி ஒமாரா போலீசு தாக்கியதில் கீழே விழுந்து தன்னுடைய கண்ணாடி உடைந்துவிட்டதாகவும் கைகளில் சிராய்புகள் உள்ளதாகவும் கூறுகிறார்.

ஒரு மாணவர் போலீசை சுட்டிக்காட்டி, “அவர்களுடைய குழந்தைகளுக்காகவும்தான் போராடுகிறோம். தெருக்களில் இறங்கி, ஒவ்வொரு நாளும் இவர்களிடம் அடி வாங்க எங்களுக்கு என்ன பைத்தியமா? இவர்களெல்லாம் போலீசு அல்ல, காக்கிச்சட்டை அணிந்த குண்டர்கள்” என்றார்.

மாலை 4 மணியளவில் போலீசின் அத்துமீறலைக் கண்டித்து மாணவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது போலீசு.

படிக்க:
ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை திரும்பப்பெறு !

லத்தியால் அடித்தும் எட்டி உதைத்தும் மாணவர்களை களைக்க முயற்சித்தது போலீசு. ஆனால் போலீசு அடிகளுக்குப் பயந்துஓடாமல் மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஹசன் என்ற பார்வை மாற்றுத்திறனாளி மாணவர், தண்ணீர் மற்றும் துண்டறிக்கை விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

“இந்த பல்கலைக்கழகத்தால் நான் இப்படி இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய இதுதான் நேரம்” என்கிறார் அவர்.

பல மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து கவலைகொள்ளவில்லை. “கட்டணம் உயர்த்தப்பட்டால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாது. என்னுடைய குடும்பம் விவசாயம் செய்கிறது. மாதம் ரூபாய் ஆயிரம் சம்பாதிப்பதே பெரும்பாடு. இதில் தேர்வுகள் தள்ளிப்போவது குறித்து கவலைப்பட ஏதுமில்லை” என்கிறார் ஷாபாஸ். அரசியல் அறிவியல் படிக்கிறார் இவர்.

கட்டண உயர்வு மாணவிகளைத்தான் பெருமளவு பாதிக்கும் என்கிறார் திவ்யா மண்டல். “இந்திய குடும்பங்கள் தங்களுடைய மகளை படிக்கவைக்க விரும்புவதில்லை. இந்தக் கட்டண உயர்வு இதை இன்னும் பாதிக்கும். டெல்லியில் வாழ்வது மிகுந்த செலவுபிடிக்கக்கூடியது. என்னுடைய பெற்றோர் வாழ்க்கை பாட்டுக்கும் எனக்கும் சேர்த்து கடுமையாக உழைக்கிறார்கள்” என்கிறார் அவர்.

கல்வியை காசுக்கு விற்க முனைப்பாக இருக்கிறது இந்துத்துவ அரசு. கல்வி அளிப்பது அரசின் கடமை என்பதில் தீவிரத்தன்மையுடன் போராடிவருகிறார்கள் மாணவர்கள். போலீசு லத்திகளைக் கண்டு அவர்கள் பயப்படுவதாகத் தெரியவில்லை.


கலைமதி
நன்றி : நியூஸ் லாண்ட்ரி.